வெள்ளி, 15 மார்ச், 2019

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன அவைகள்...



பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன அவைகள்...

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

பனை உணவு பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை

வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா

அலங்காரப் பொருட்கள் :

🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்

கட்டிடப்பொருட்கள் :

🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

வியாழன், 14 மார்ச், 2019

தேரிக்காடு மணல் மேடு!!!


தேரிக்காடு மணல் மேடு!!!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது.

திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி,சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.

மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.

ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.

அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.

தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.

நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.

இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் கற்குவேல் அய்யனார் கோவில் போன்றவை புகழ்பெற்றதாகும்.

இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு..

தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.

கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச் செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான்.

அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல.

அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.

அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன.

ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

அங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது.

முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.

அங்குள்ள மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுகிறது.

தென் மேற்கு சுழல் காற்றால் அந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று அங்கே ஆய்வு நடத்திய பாதிரியார் கால்டுவெல் தெரிவித்து இருக்கிறார்.

இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848–ம் ஆண்டு அங்கு ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்தார்.

அவரது முயற்சியால் தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. நிறைய பனை மரங்களைக் கொண்ட குதிரைமொழி தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தாமிரபரணி ஆற்று நாகரிகத்தைத் தேடியபோது, ஆதிச்சநல்லூர் போன்றே தாமிரபரணி ஆற்று நெடுகிலும் உள்ள வேறு சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல தேரிக்காட்டிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர் போன்று மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், தேரிக்காட்டிலும் சில அபூர்வமான பொருட்கள் கிடைத்தன.

சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்ட றியப்பட்டது.

இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது.

பாலைவனம் போல இருக்கும் தேரிக்காட்டுக்கு அருகே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டவர்கள், இந்த தேரியில் தங்களது மூதாதையர்களின் உடலை தாழிகளில் வைத்து புதைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அவை எந்தப்பகுதியில் வசித்தவர்களின் முதுமக்கள் தாழிகள் என்பது தெரியவில்லை.

அங்கு இருந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன.
எனவே, ஆதிச்சநல்லூருக்கும், தேரிக்காட்டுக்கும் தொடர்பு இருந்தது என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.

ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.
தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும். அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.

இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.

பொதுவாக நிலங்களின் வகையை ஐந்து வகையாகக் கூறுவார்கள். அதாவது–

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்.
வெறும் மணல் பிரதேசமாக இருப்பது பாலை.

இந்த ஐந்து வகை நிலமும் ஒரே பகுதியில் இருப்பது அபூர்வம்.

ஆனால் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேரிக்காடு என்ற பாலைவனமும் இருப்பதால், இங்கு ஐந்து வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ளதைக் காணலாம்.

கண்ணகி வாழ்ந்த வீடு


கண்ணகி வாழ்ந்த வீடு
""""""""""""""""""""""""""""""""""""""""
மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

(நன்றி-  எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன்)