பஞ்சமி நிலமும் அதன் வரலாறும்:
*************************************
நமது தோழர் ஒருவர் " பஞ்சமி நிலம்" என்றால் என்ன என்று கேட்டார் ...எனக்கு ஆச்சரியம் தெரிந்துதான் கேக்கிறாரா ...இல்லை உண்மைகள் தெரியாமல் கேட்கிறாரா என்று ...ஆனால் அடுத்து அடுத்து பலர் தோழர்கள் உல் தப்பி பூட்டை ஆட்டியதால் உணர்ந்துகொண்டேன் .....உண்மையாகவே பலருக்கு பஞ்சமி நிலம் பற்றிய உண்மை தெரியவில்லை என்று ....
அவரை போலவே பலருக்கும் இன்றும் பஞ்சமி நிலம் என்றால் என்ன ...அது யாரால் கொடுக்கப்பட்டது ... ஏன் கொடுக்கப்பட்டது ??... அது சலுகையா ?? உரிமையா ?? என்கிற பல கேள்விகள் அறிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது .. காரணம் அவற்றை பற்றி பேசினாலோ .. அல்லது செயலில் இறங்கினாலோ நேரடியாக பாதிக்க படுவது சூத்திர சாதி இந்துக்கள் ஆகிய ஆண்டைகளும் பஞ்சமி நிலங்களை ஆட்டை போட்ட பண்ணை ஆதிக்க சாதி வியாதிகளும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருப்பதால்தான்...
ஆகவே அதை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்
பஞ்சமி நிலமும் அதன் வரலாறும்:
*************************************
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில் தான் சாதியம் வலுப்பெற்றது. மனுதர்மத்தின்படி முதல் நிலையில் இருந்த பிராமணர்கள் சத்ரியர்கள் உதவியுடன் நிலங்களை அபகரித்து அதனை அரசு நிலங்களாகவும்,கோயில் நிலங்களாகவும் மாற்றிவிட்டனர்.இவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்கள் யாவும் தலித் மக்களுக்கு சொந்தமானவை. அதன்பின்,ஆங்கிலேயர்கள் தமிழகத்தைக் கைப்பற்றியபோது நிலவிய நிலவுடைமை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. தஞ்சாவூர்,செங்கல்பட்டு,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நீர்ப்பாசனமுள்ள நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களிடமே குவிந்து கிடந்தன. பெரும்பான்மையான மிராசுகள் தங்கள் நிலங்களைப் பயிரிட படியாட்களாக அடிமைகளை வைத்திருந்தனர். அந்த அடிமைகள் அனைவரும் தலித்களாகவே இருந்தனர்.
1892ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ஜே.ஹெச்.ஏ.ட்ரெமென் ஹெரே (J.H.A.Tremen Heere) என்ற ஆங்கிலேயர் அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் தலித்துகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டுமென்று 17 பகுதிகள் கொண்ட ஒரு அறிக்கையை சமர்பித்தார். இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்டத்தில் அப்போது இருந்த தலித்துகளின் சமூக பொருளாதார வாழ்க்கையை மிகத் தெளிவாக விளக்கியது.
அவர் அளித்த அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:
“தலித்களுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. கந்தைத் துணிகள்தான் அவர்களது ஆடைகள். தொழுநோய் போன்ற மிக மோசமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது.
(மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கிவந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனுக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”.
என்று தன் தலைமை அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தார்.
அவர் கூறுகிறார், “1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த தலித்கள்
படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு
புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள்.
மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள தலித்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே தலித்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம்
அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் தலித்களுக்கு கிடைக்கும்.
ஆனால் தலித்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”
மேலும் ட்ரெமென் ஹெரே கூறுகிறார்,
* “தலித்கள் மீது மட்டும் ஏன் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்? தலித்துகள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருப்பதோடு விவசாயத்தோடு அதிகம் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
* இவர்களுக்கு உதவுவதன்மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.
* சமூகத்தின் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உயர்ந்தால் அனைவரையும் உயர்த்தியதற்குச் சமம்.
* தலித்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் ஒன்றும் பெரிய சலுகைகள் இல்லை. அனால் மற்ற சாதியினருக்கு இதைவிட பெரிய சலுகைகள் இருக்கின்றன.
* கடந்த காலத்தில் அரசின் கொள்கைகள் தலித்களை கீழான நிலையிலேயே வைத்திருக்கிறது. அந்த தவறை இப்பொழுது நிவர்த்தி செய்ய வேண்டுமனில் புறக்கணிக்கப்பட்டவருக்கு புதிய ஆரம்பத்தைக் கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
ட்ரெமென் ஹெரே அவர்கள் அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகளின் சுருக்கம் :
* மாகாணத்தில் ‘நில விண்ணப்ப’ சட்டத்தின்படி பட்டாதாரருக்கு உள்ள உரிமையை கிராமத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்கும்படி மேற்படி சட்டத்தை திருத்த வேண்டும்.
* சாகுபடிக்கேற்ற புறம்போக்கு விவசாய நில பகிர்மானத் திட்டம் கிராமத்திலுள்ள தலித்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
* 1875 க்கு முன்பு வரி பாக்கிக்காக மிராசுதாரர் மற்றும் பட்டாதாரர்களிடமிருந்து அரசு கைப்பற்றிய நிலத்தை தலித்களுக்கும் பயன்படும்படி சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
* தேவையில்லாமல் வனத்துறையுடன் சேர்க்கப்பட்ட விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களிலும் மிராசுதாரர் இல்லாத கிராமங்களில் அதிகமாக விவசாயத்திற்குப் பயன்படும் நிலம் உள்ள இடங்களிலும் “தலித்கள் குடியிருப்பை” அமைக்க வேண்டும்.
* இத்தகைய குடியிருப்புகளில் உள்ள தலித்களுக்கு விவசாயத்திற்கேற்ற மற்ற நிலத்தை அரசு தலித்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கு கிணறுகள் வெட்டிக் கொடுக்க வேண்டும். இந்தக் கடனை தவணை முறையில் வசூலிக்க வேண்டும்.
* சென்னை மாகாண குத்தகைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் தலித்களும் மற்ற விவசாயிகளும் மிராசுதாரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
* அரசு கிராமமாக இருந்தாலும் மிராசுதாரர் கிராமமாக இருந்தாலும் தலித்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் சார்பாக இருக்கும்படி சட்டம் திருத்தப்பட வேண்டும்.
* கூலி விவசாயிகள் அடிமை முறையிலிருந்து விடுபடும் விதத்தில் உடன்படிக்கைமீறல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கூலி உடன்படிக்கையை ஒரு வருடத்திற்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டும்.
* தலித்கள் வாழும் வீட்டிற்கு பட்டா உரிமையை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* தலித்கள் அரசு உதவியுடன் மற்ற நாட்டிற்கு குடிபெயரும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
* கள்ளு சாராயக் கடைகள் அதிகமாக தலித்துகளுக்கென்று இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
* தலித்களுக்கு கல்வியை அனுமதித்து அரசு தெளிவாகவும் நேரடியாகவும் அவர்களின் கல்விக்கு வழிவகுப்பது அரசின் கடமையாகும்.
* தலித்துகளின் சுகாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றங்களால் வரக்கூடிய விளைவுகள்:
* தலித்துகள் நிலத்தைப் பெறுவதில் உள்ள தடையை நீக்குவது.
* தலித்துகளின் வீடுகளை மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதிலிருந்து விடுவிப்பது.
* தலித்துகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது.
* தலித்துகளுடைய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது.”
“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம்
ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் தலித்துகளின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் அந்த மகான். இத்தகைய கொடுமைகள் மாறவேண்டுமென்றால் கண்டிப்பாக தலித்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் ட்ரெமென் ஹெரே. தன் பிரிட்டிஷ் அரசையும் வலியுறுத்தினார்.
ட்ரெமென் ஹெரே அவர்கள் தலித்துகள் பற்றிக் குறிப்பிட்ட பல்வேறு கொடுமைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமே இருந்தன என்று பொருளில்லை. இந்தியா முழுவதுமே தலித் மக்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள். இன்னமும்கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் பிறந்த ஆண்டாகிய 1891 ம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அந்த ஆண்டுதான் ட்ரெமென் ஹெரே அவர்கள் தலித் மக்களுக்கு நிலம் கொடுத்தால் பிரிட்டிஷ் அரசுக்கு வருமானம் பெருகும் அரசுக்கும் நற்பெயர் இருக்கும் என்றும் பிரிட்டிஷ் அரசிடம் மேற்கண்ட அறிக்கைகளை சமர்ப்பித்தார். 1892ம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. (அரசாணை 1010, நாள் : 30.09.1892).
இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள தலித் மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இவ்வாறு தலித் மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிலங்களை வழங்கிய போது ஒரு சில விதிமுறைகளையும் அரசு வகுத்தது. அதன்படி வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுபவிக்க வேண்டும்.
* முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது.
* பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு தலித் இன மக்களுக்கு மட்டுமே விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ செய்யலாம்.
* நிபந்தனைகளை மீறிச் செய்யப்படும் உரிமைமாற்றங்கள் சட்டப்படி செல்லாது என்ற விதிமுறைகளை விதித்தது. (பார்வை : வருவாய்த் துறை நிலையான ஆணை 15.9 மற்றும் அரசாணை G.O.M.S. 2217 நாள் 01.10.1941). இத்தகைய குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதால் இவை டி.சி. மற்றும் ஆதிதிராவிடர் கண்டிஷன் நிலங்கள் என்று இன்றும் வருவாய்த் துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பிரிட்டிஷ் கலெக்டரின் நீண்ட போராட்டங்களினாலும் அந்த அரசு அதன் நாடாளுமன்றத்திலேயே சட்டம் நிறைவேற்றி தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் இப்போது எங்கே என்றால் விடை தெரியவில்லை. அத்தனை ஏக்கர் நிலங்களும் மீண்டும் ஆண்டைகள் கையிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் கையிலும் அரசியல்வாதிகள் கையிலும் போய்விட்டன. எல்லா நிலங்களையும் இன்று தலித் அல்லாத பிற சாதியினரின் கையிலேயே இருக்கின்றன. ‘அந்த நிலங்கள் தலித் அல்லாதவர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் செல்லாது’ என்று சட்டமிருந்தாலும் சட்டங்களை மீறி எல்லா நிலங்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டன. சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் அமைந்துள்ள பல வானுயர்ந்த கட்டடங்களும் இவ்வாறான பஞ்சமி நிலங்களைத்தான் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆதிக்க சாதியினர்தான் இவ்வாறான நிலங்களை பிடுங்கிக்கொண்டனர் என்பது மட்டுமில்லை. இன்றைய ஆளும் அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு கட்சிபேதம் பார்க்காமல் பஞ்சமி நிலங்களை பிடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கு பார்த்தால் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் அரசால் செய்யப்படும் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பஞ்சமி நிலங்களை குறிவைத்தே நடக்கின்றன. அதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நூற்றுக்கணக்கான பஞ்சமி நிலங்கள் அடங்கிய கிராமங்களைக் குறிவைத்தே இவ்வாறான அநியாயங்கள் இந்த அரசுகளால் நடத்தப்படுகிறது. இதற்கெனவே அரசின் அங்கீகாரம் பெற்ற நில புரோக்கராக சிப்காட் என்னும் நிறுவனம் இயங்கி வருகிறது. நீர் வளம் உள்ளிட்ட எல்லா ஆதாரங்களும் உள்ள பஞ்சமி நிலங்களாக பார்த்து ஆக்கிரமிப்பு செய்து அயல் நாட்டின் பல நிறுவனங்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி எந்தவிதமான சட்டதிட்டங்களுமின்றி இலவசமாக தானமாக எழுதிக்கொடுத்துவிடுவதுதான் இன்றைய அரசுகளின் வேலை. இவ்வாறாக பஞ்சமி நிலங்களை அபகரிக்கும் முதல் ஆளாக இன்றைய அரசுகளும் அதிகார வர்க்கமும் தலித் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்துப் போராடும் மக்களை பஞ்சமி நிலமீட்பு போராளிகள் ஜான்தாமஸ் மற்றும் ஏழுமலையை சுட்டுத்தள்ளியது போல கொன்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த நான்கு சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த இரண்டு ஆளும் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுப்போம் என்று சொல்லியது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தான் சொன்னதை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு நேர் மாறாக அரசே பஞ்சமி நிலங்களை பிடுங்கி எவனுக்கோ கொடுப்பது எவ்வகையில் நீதி? அதையும் மீறி பஞ்சமர்கள் நியாயத்திற்காக நீதிமன்றம் சென்றால் அங்கே சொல்லும் நீதி என்ன தெரியுமா. ‘அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’. பிறகு யார்தான் தலையிடுவார்கள் என்று தெரியவில்லை.
ஆக அந்த காலம் முதல் இந்த காலம் வரை தலித்துகளை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்று ஆண்டைகள் முதல் அரசியல்வாதிகள், அதிகார வர்கங்கள், இன்றைய ஆளும் அரசுகள் வரை நினைத்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. வாழ்க ஜனநாயகம் !ஆக நாம் செய்ய வேண்டிய முதல் வேலை பஞ்சமி நிலம் பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்,மக்களை போராட்ட ரீதியாக ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை முன்னெடுப்பதும்தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்...
அனைத்து தகவல்களும் இணையதளங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.