செவ்வாய், 14 நவம்பர், 2017

தாமிரபரணி வெள்ளம் நவம்பர் 13, 1992



தாமிரபரணி வெள்ளம்   நவம்பர் 13, 1992.

சென்னை பெரும் வெள்ளம் பார்த்திருப்போம்...தாமிரபரணி அசுர வெள்ளம் பார்த்ததுண்டா??மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் திருநெல்வேலி மாவட்டத்தை களேபரம் செய்த ஒரு வெள்ளம்...

                 நவம்பர் 13, 1992 - சூறாவளியின் தூண்டலால் எட்டு மணி நேர மிக கனமழை திருநெல்வேலி மாவட்டத்தில் விடாமல் பெய்தது.அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் பாபநாசம் பகுதி மக்கள், என்னை உட்பட அனைவரும் அவரவர் வீட்டில் இருளில் பயத்தோடு இருந்த தருணம். நம் பகுதி மக்கள்அனைவரும் இதுவரை கண்டிராத ஒரு பெரும் மழை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து கொண்டிருந்த நாள்.

                தாமிரபரணி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் போதே இந்த இரண்டு அணைகள் - பாபநாசம்( பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது) அணையில் மழை அளவு 310 மிமீ...சேர்வலார் அணை 210 மிமீ மழை பதிவு செய்தது..லோயர் பாபநாசம் அணை 190 மிமீ மழை பெற்றது.அதே நேரத்தில்,  அருகிலுள்ள அணை மணிமுத்தாறு 260.80 மிமீ மழை பெற்றது. மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  உள்ள விக்கிரமசிங்கபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் 320.60 மிமீ மழை பொழிவை  பெற்றது...நினைவுக் கொள்ளுங்கள்...இவை அனைத்தும் ஒரெ நாளில் பெய்த மழை...தமிழகத்தின் சராசரியை விட அதிகம்!!!

வேறு எந்த வழியும் இல்லாமல் அணை ஊழியர்கள் முன் அறிவிப்பு செய்யாமல்,  அதெ இரவில் பாபநாசம்(143 அடி) மற்றும் சேர்வலார்(156 அடி) அணைகளின் மதகுகளை  பாதுகாப்புக் காரணங்களால் திறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

இரண்டு அணைகளில் இருந்து டிஸ்சார்ஜ் நீர் நவம்பர் 14, 1992 அதிகாலை திருவள்ளுவர் நகரில் 17 நபர்களை மூழ்கடித்து கொலை செய்தது. ஆம் தாமிரபரணி நீர்வழிப்பாதை அருகே திருவள்ளுவர் நகரில் வாழும் சில குடும்பங்கள், காலையில் மழை குறையும் என்ற நம்பிக்கையில் இரவு படுக்கைக்கு சென்றனர். எனினும், இரவில் நீர்த்தேக்கங்களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் வீடுகளில் இருந்த 17 நபர்கள் தண்ணீரில் பிணமாகினர்..ஆற்றின் குறுக்காக இருந்த முன்டந்துறை பாலம் நிமிடங்களிலேயே அடித்துச் செல்லப்பட்டது...மில்கேட் வாசலில் இருந்து இருசக்கர வாகனத்தின் முக விளக்கின் ஒளியில் சிலர் பார்த்த போது மதுரா கோட்ஸ் பாலத்தின் மேலே வரை தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது.

                        அடுத்த 60 நிமிடங்களில்  நிலைமை மோசம் அடையக்காரணம் , மணிமுத்தாறு அணை(118 அடி) 60,000 க்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை திறந்தது. தாமிரபரணியின் மூன்று அணைகள் தனியாக அந்த நாளில் மட்டும் திறந்த தண்ணீரின் உபரி  2,04,273.80 கன அடி! அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பகுதி மழை சேர்ந்து ஆற்றில் வழிந்தோடி செல்லப்பட்ட தண்ணீர் கணிக்கமுடியாத அளவு ஓடியதாக, பொதுப்பணித் துறை ஊழியர்கள், நினைவு கூறுகின்றனர்.

                 இதன் விளைவாக, வெள்ள பேரழிவு பாபநாசத்தில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள திருநெல்வேலி ஜங்ஷன் , நெல்லை இரயில்வே நிலையம், வணிக நிறுவனங்கள், ஆட்சியர் அலுவலகம், சிந்துப்பூந்துறை,  கைலாசபுரம், மீனாட்சிபுரம் குடியிருப்புகள் உட்பட அருகில் எல்லா இடங்களிலும், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த10 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேர்த்து நீரில் மூழ்கடித்தது... சரியாக 48 மணி நேரம் பிறகு வெள்ளம் முழுமையாக தணிந்தது..

                 #தாமிரபரணி_தாயவள் சினம் கொண்டு பொங்கிய 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக