பட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், ‘மறைக்கப்பட்ட பறையர் வரலாறு’ என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம்.
ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார்.
இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு செய்துள்ளார். களப்பிரர் ஆட்சிக்காலம், இருண்ட காலம் என்பதே பொதுவில் சொல்லப்படுவது. ஆனால் அம்பேத்கரோ, கி.மு. 3 முதல் கி.மு.6ம் நூற்றாண்டு வரையிலான களப்பிரர் ஆட்சிக்காலத்தில், வர்ணமுறையற்றும், சாதி சமயம் பேதமின்றி இருந்ததாகவும் தகவலைச் சொல்கிறார்.
ஒரு காலத்தில் நாடார்களும், முக்குலத்தோர்களும் ஆதிக்க சாதியினரால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளனர். தொடர் போராட்டத்திற்குப் பின்னர், இவ்விரு சாதிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் பறையர் சமூகம் இன்னும் தீண்டாமைப் பிடியில் இருந்து மீளவே இல்லை என்ற கவலையையும் வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார், நூலாசிரியர்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மீது 1948ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் பார்வைக்குக் கொடுத்துள்ளார்.
கூலியை உயர்த்திக் கேட்டதற்காகவே 44 தலித்துகளை குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கீழ் வெண்மணி சம்பவம் முதல் வாச்சாத்தி, தருமபுரி நத்தம் காலனி சூறையாடப்பட்டது வரை குறிப்பிட்டுள்ளார்.
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய குடிகளே சிறந்தது என்ற புறநானூறு பாடலும் பறையர் இனத்தின் தொன்மையை சான்று பகர்கிறது. அதற்காக புறநானூறு பாடல்களை அதிகமாகவே சான்றுக்காக கொடுத்திருப்பதால், வாசகர்களுக்கு சற்று அயற்சியை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
சேரர், சோழர், பாண்டியர்கள் மட்டுமின்றி கடையேழு வள்ளல்களும்கூட பறையர் இனத்தைச் சேர்ந்தவர்களே என்கிறார், நூலாசிரியர். குறிஞ்சி நிலம், பாறைகள் நிறைந்தது. பாறைகள் நிறைந்த பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களை ‘பாறையர்’ என்றும் அதுவே பின்னாளில் பறையர் என்றும் மருவியதாகச் சொல்கிறார்.
அந்தக் கணக்கின்படி அவர் சங்ககால மன்னர்கள் யாவருமே பறையர் என்ற பட்டியலுக்குள் சேர்த்துக் கொண்டதை சரியான தர்க்கமாகக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவில் இந்த ஆய்வு நூல் சற்று போதாமையுடன் இருக்கிறது.
மற்றோர் இடத்தில், சோழ மன்னர்களை ‘பரகேசரி’ என்றும் அழைப்பார்கள் (பக். 44) என்கிறார். பரகேசரி என்ற சொல் வாயிலாக சோழ அரசர்கள் பறையர் என்று நிறுவ முயற்சிக்கிறார். பரகேசரி என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் அவர் அப்படி கருதி இருக்கலாம் என்பது என் கருத்து.
ராஜகேசரி, பரகேசரி என்பது சோழ அரசர்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்களே. ராஜகேசரி என்றால் ‘அரசர்களுக்கெல்லாம் சிங்கம்’ போன்றவன் என்பதும், பரகேசரி என்றால் ‘அயலக அரசர்களுக்கு சிங்கம் போன்றவன்’ என்ற பொருளில் அத்தகைய பட்டப் பெயர்கள் மொழியப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சொல்லும் மருவி, பறையர் ஆனதாகச் சொல்வது ஏற்பதற்கில்லை.
பெரும்பாலும் மேற்கோள்களாகவே கடந்து செல்வதால், நூலாசிரியர் இன்னும் கொஞ்சம் கள ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். எனினும் பறையர் வரலாறு பற்றிய ஆரம்பக்கட்ட தகவல் திரட்டாக இந்நூலைக் கருதலாம்.
நூல்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு
வெளியீடு: கலகம் வெளியீட்டகம்
பக்கம்: 190 விலை: ரூ.200.
தொடர்புக்கு: 9597654190.