வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கருணை ஆனந்த சித்தர் சுவாமிகள் - சிவகிரி..



கருணை ஆனந்த சித்தர் சுவாமிகள் - சிவகிரி..

மேற்குத் தொடர்ச்சி மலை சரிவில் அமர்ந்திருக்கிறது சிவகிரி ஜமீன். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து விழும் அருவிநீர் வீணாகிவிடக்கூடாது என்று  மலையில் அணையை கட்டினர் சிவகிரி ஜமீன்தார். காட் டை அழித்து விளைநிலங்களை உருவாக்கினர். இதனால் செல்வச் செழிப்பு மிகுந்த ஜமீனாக சிவகிரி  உயர்ந்தது..

பக்தி செலுத்துவதிலும், கோயிலைப் பராமரிப்பதிலும்  அவர்களுடைய ஆர்வம் மட்டும் குறையவேயில்லை. கோயில்களில் நித்திய பூஜை செய்வதிலிருந்து விழாக்கள் நடத்துவதுவரை  வெகு சிறப்பாகச் செயல்பட்டு  வருகிறார்கள். இன்றளவும் பொதுமக்கள் ஜமீன் பரம்பரையினருக்குக் கோயில்களில் முதல் மரியாதையை செய்கிறார்கள்.

சிவகிரியை தலைநகராக அமைத்துக்கொண்ட பிறகே புகழின் உச்சிக்குச் சென்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த ஊரில் சித்தர்களின் சாந்நித்தியமும், இயற்கை  வளமும் நிறைந்திருந்ததுதான். இங்கே சமாதி கொண்டிருக்கும் கருணை ஆனந்த சித்தர், பறக்கும் சக்தியை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர் இமயத்தில்  தலைமை சித்தராக விளங்கியவர் என்றும், ஒரு பறவைபோல பறக்கும் சக்தி பெறுவதற்காக, மருந்துகள் தயார் செய்ய, மூலிகைகளைத் தேடி பொதிகை மலைக்கு  வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

தன்னுடன் வந்த ஆறு சித்தர்களுடன் சிவகிரி வந்த அவருக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப்போய்விட்டது. எங்கும் மூலிகை  மணம் கமழ திகழ்ந்தது சிவகிரி. எனவே அங்கேயே தங்கிவிட தீர்மானித்தார் கருணை ஆனந்த சித்தர். ஊரைச் சுற்றிலும் மற்ற சித்தர்கள் அமர்ந்துகொள்ள  அனைவரும் சிவ மந்திரத்தை ஓத ஆரம்பித்தனர். நாளடைவில் உரிய மூலிகைகளை அவர்களால் அடையாளம் காண முடிந்தது என்றும், அவற்றிலிருந்து மருந்து  தயாரித்து பறக்கும் திறமையைப் பெற முடிந்தது என்றும் சொல்கிறார்கள்.   தற்போதும் இங்கு ஓதப்படும் சிவ மந்திரம் எதிரே உள்ள மலையில் மோதி  எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!

ஆனால், நாளடைவில் சித்தர் வாழும் இந்த புண்ணிய பூமி, சீர்படுத்த முடியாமல் அப்படியே விடப்பட்டது. ஒரு கால கட்டத்தில்  சித்தர்கள் வெளிப்பட, தக்க   தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கருணை ஆனந்த சித்தர் ஊரணிக்குள் மூழ்கித் தான் தவம் செய்வதை அனைவரும் அறிய ஒரு திருவிளையாடல் செய்தார்.  இந்தப் பகுதியில் கொடிகால் பயிர் செய்யும் மூப்பனார் இன மக்கள், ஊரணியைத் தோண்டினார்கள். பதினைந்து அடிக்குக் கீழே சித்தரின் சிரசு தட்டியுள்ளது. இதை  கண்ட அவர்கள் பயந்து ஓடி விட்டனர். அன்று ஊர்ப் பெரியவர் சித்தர் தோன்றி, “நான்தான் கருணை ஆனந்த சித்தர். என் தலைமையில் நாங்கள் ஏழு சித்தர்கள்  இந்த ஊரை சுற்றிலும் அமர்ந்துகொண்டு அருள்பாலித்து வருகிறோம். என்னை இங்கு பிரதிஷ்டை செய்து வணங்குங்கள். நீங்கள் கேட்ட வரம் தருகிறோம்”  என்று கூறினர். அதன்படி சித்தருக்கு இந்த ஊரணிக் கரையில் ஒரு சிலை பிரதிஷ்டை செய்தனர். பின் மக்கள் அனைவரும் இங்கு வந்து வணங்கினர்; தங்கள்  பிரச்னைகள் எல்லாம் தீரக் கண்டு மகிழ்ந்தனர்.

சிவகிரி உள்ள நான்கு கோயில்கள். 

1. கூடுபாறை பாலசுப்பிரமணியர் கோயில்,
2. தென்மலை ஸ்ரீதிரிபுராந்தக ஈஸ்வரன் கோயில்,
3. வடக்குச் சத்திரம் ராமநாதசுவாமி கோயில்,
4. சிவகிரி திருநீலகண்ட சுவாமிகள் கோயில்.

1854 - 1896 காலங்களில் நிறுவப்பட்ட சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோயிலுக்கும்  அதனைச் சார்ந்த கருணை ஆனந்த சித்தர் சுவாமி களின் ஜீவசமாதிக்கும் அவருடைய வாரிசுகள் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக