தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி(தீவாளி)திருநாள் பண்டிகை!
தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு தந்தையென அறியப்படும், அயோத்தி தாசப் பண்டிதர், பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து, அதன் வழியே தீப ஒளி திரு விழாவுக்கான உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
முன்பு, பௌத்தம் இந்தியா முழுவதும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்வை பௌத்தம் வளமாக்கியது. எனவே, பௌத்தத்தை பரப்புவதற்காக பௌத்த பிக்குகள் இந்தியா முழுவதும் சென்று, மக்களுக்கு பௌத்தத்தை போதித்தது மட்டுமின்றி, பௌத்த மடங்களான விகார்களிலிருந்தும் தம்மம் குறித்து போதித்து வந்தனர்.
பௌத்த விகார் என்றழைக்கப்படும், பௌத்த மடங்களில் தங்கியிருக்கும் பிக்குகள் போதனை மட்டுமின்றி மருத்துவம், அறிவியல், வானவியல், வேளாண்மை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும் மக்களிடமும் கொண்டு சேர்த்தார்கள்.
மக்களிடம் விரைவாகச் சேர்ப்பதற்காக, தாங்கள் தங்கியிருக்கும் மடம் அமைந்துள்ள நாட்டின் அரசனிடம் முறையான சான்றுகளுடன் தத்தமது கண்டுபிடிப்புகளைக் காட்டி, செயல்முறை விளக்கங்களுடன் முடிவுகளை விளக்கிக் காட்டுவர். பின்னர் அரசனின் இசைவு பெற்று மக்களிடம் விரை வாகக் கொண்டு சேர்த்தனர். இந்த வழக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட தென்பதை, குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த கண்டு பிடிப்பை அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தினார்
தென்னாட்டில், “பள்ளி” எனும் நாட்டில்- பௌத்த மடத்தில் இருந்த பிக்குகள் “எள்” எனும் விதைகளைக் கண்டுபிடித்தார்கள். பிறகு, எள் விதை யிலிருந்து, நெய்யை (கவனிக்கவும் – நெய் என்பது பொதுப்பெயராகத் தமிழில் வழங்கும் சொல். அச்சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் பெயர அது எந்த நெய் என்பதைக் காட்டும்) வடித்து அதன் குணங்களையும், மருத்துவப் பயன்களையும் கண்டறிந்தார்கள். அந்த நெய் தான் மண்டை தொடர்பான நோய்கள், சுரங்கள், மேக நோய், சேத்மம், சாமரோகம், எலும்புருக்கி, ஈளை உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்து வதுடன் சிறந்த மலமிளக்கியாகும் எனக் கண்டறிந்தனர். அந்த எள்நெய்யைத் தலையில் தேய்த்து தலை மூழ்கினால் இப்பயன் கிடைக்கும் என்பதையும், அந்த எள் நெய்யில் பலகாரங்களைச் செய்யலாம் என்பதையும் பிக்குகள் கண்டறிந்தார்கள்.
இதன்பிறகு, ‘பள்ளி’ நாட்டை ஆண்ட அரசரான “பகுவன்” என்பவரிடம் பிக்குகள் சென்று எள்ளையும், நெய்யையும் காட்டி அதன் பயன்களை விளக்கியதால், எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னர் பகுவன் எள்ளினை அதிகளவில் விளைவிக்க செய்தார். எள் விதையிலிருந்து நெய்யெடுத்து அதனை தன் நாட்டு மக்கள் தலையில் தேய்த்து, பள்ளி நாட்டின் தலை நகரில் ஓடிக்கொண்டிருந்த 'தீபவதி' ஆற்றில் குளிக்க வேண்டுமென கட்டளை யிட்டான். அதன்பிறகு பௌத்த பிக்குகள் மூலம் எண்ணெய்யை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தான். மக்களுக்கு அந்த எள்நெய் பெரிதும் உதவியதால், அது முதல் பிக்குகளால் நல்லெண்ணெய் (நல்+ எள்+ நெய்) எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.
நல் + எள் + நெய் என்றழைக்கப்படும் நல்லெண்ணெயை தலையில் தேய்த்து ஐப்பசி மாதம் சதுர்த்தி நாளன்று தீபவதி ஆற்றில் குளித்ததோடு இணைத்து, தீபவதி குளியல் நாள் என வழங்கி வந்தார்கள் என்பதை பெருந்திரட்டு” எனும் பண்டையத் தமிழ் நூலில் ‘பாண்டி படலம்’ எனும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சான்றாக அயோத்திதாச பண்டிதர் விளக்கியுள்ளதை நாம் நினைவு படுத்தி கொள்ளவேண்டியுள்ளது.
இது மட்டுமின்றி, தீபவதி காலத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, அது ஐந்தொழுக்கக் கொள்கைகளான கொலை செய்யா மை, களவு செய்யாமை, மது அருந்தாமை, பிறன் மனை விழை யாமை, பொய் சொல்லாமை எனும் கோட்பாட்டை பின்பற்றி தமது வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக, அவற்றை விரதமாக மேற்கொண்டு வந்ததையும் அயோத்திதாசப் பண்டிதர் விளக்கியுள்ளார்.
பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் தீப ஒளி தத்துவத்தை மறைத்து, அவர்களின் வசதிக்கேற்ப கதைகளாக திரித்து, தமது வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை மூடர்களாக்கி, மூட நம்பிக்கைகளைக் கட்டி தீபவதி நாளை திரித்தார்கள். என்று அயோத்திதாசர் பண்டிதர் கூறுகின்றார்.
அக்காலத்தில் மக்களுக்கு பயன்படக் கூடிய பொருளை, பௌத்த பிக்குகள் கண்டுபிடித்த நாளை அவர்கள் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதைப் போற்றி கொண்டாடி வந்தனர். வீட்டின் இருளைப் போக்கி ஒளியேற்றிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது கொண்டாடப்பட வேண்டியதென்பதால்தான் தீப ஒளி திருவிழா கொண்டாடப்பட்டது. அந்தப்புரிதளோடு தீப ஒளி திருவிழாவை மாசில்லாமல், ஒலி சீர்கேடு இல்லாமல், நமது வீட்டில் எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி கொண்டாடுவோம்.
அனைவருக்கும்
#தீபஒளித்_திருநாள் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக