வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை. நமது கலாசாரம், பண்பாடு, தத்துவம், சமயத்தையு உணர்த்தி உயர்த்தும் கலங்கரை விளக்காக கோயில்கள் திகழ்கின்றன. கோயில்கள் அனைத்தும் மனித மனம் செம்மைப்படுவதற்கான திறவுகோலாய் அமைகின்றன. பழம்பெருமை கொண்ட பாரத நாட்டின் கோயில்கள் பல வரலாற்று உண்மைகளை நமக்கு இன்றும் எடுத்துரைக்கின்றன. காலத்தால் அழியாத இக்கோயில்கள் பண்பாட்டின் சின்னமாக இருக்கின்றன.
திருச்சி மாநகருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வகையில் இத்திருத்தலம் ஈசனே தாயாய் வந்த பெருமையை கொண்டது. மேலும் தவறுகளை தண்டித்தும் அன்புடன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்தும் அனுக்கிரக மூர்த்தியாக இத்தலத்தில் இறைவன் விளங்குகிறார்.
நில எல்லையிலிருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளை (நிலைகளை) உடையதாக தோற்றம் அளிக்கும். மலைமேல் மூன்று தள அமைப்பை கொண்ட இத்திருத்தலம் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இத்தலம், சிறந்த வழிபாட்டு தலமாக மட்டுமில்லாமல் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இந்த மலைக்கோட்டையின் மற்றுமொரு சிறப்பான மலைக்கோயில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் அருளே வடிவமான விநாயகர்போல் தோற்றம் தரும். வடக்கு திசையிலிருந்து பார்த்தால் பெரிய தோகைகளுடன் கூடிய அழகிய மயில்போல தோன்றும். மேற்கு திசையிலிருந்து பார்த்தால் (நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல) சிவலிங்கமூர்த்தி போல காட்சியளிக்கும். தெற்கு திசையிலிருந்து பார்த்தால் யானைமேல் அம்பாரி அமர்ந்திருப்பது போல காணப்பெறும்.
இக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சகஸ்ரலிங்கம் மண்டபம், சித்திரை மண்டபம், பதினாறுகால் மண்டபம், மணிமண்டபம் போன்ற பல அழகிய மண்டபங்கள் உள்ளன.
இக்கோயிலில் மலையை குடைந்து கீழ்நிலையில் ஒரு குடைவரை கோயிலும், மேல்நிலையில் ஒரு குடைவரை கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்க பெற்றுள்ளன.
நவீன கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங்கோட்டை கோயில் 417 படிகளுடன் 273 அடி உயரத்தில் உலக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாகவும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகவும், ஒரு புராதன சின்னமாகவும் இம்மலைக்கோயில் விளங்கி இருக்கிறது. பழமையான சிவாலயமான இக்கோயில் 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலமாகவும், தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பையும் கொண்டு விளங்குகிறது.
எட்டு திசைகளிலிருந்தும் மலைக்கோயிலை காணலாம். கம்பீரமாக எழுந்து நிற்கும் எழிற்காட்சி உலக மக்கள் கவனத்தை கவர்ந்துள்ளது. மலைமேல் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பரந்து விரிந்து கிடக்கும் நகரின் அழகை காணலாம். இரவு நேரத்தில் பல வண்ண வண்ண மின்விளக்குகள் ஒளிர பரந்த நகரின் அரிய காட்சியை காணலாம். நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக