திங்கள், 29 ஜனவரி, 2018

தியாகிகள் தினம் ஜனவரி 30 சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..



தியாகிகள் தினம் ஜனவரி 30 சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..

ஜனவரி 30 இந்திய நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகள் மூச்சு நிறுத்ப்பட்ட நாள். அதுவே இன்று தியாகிகளின் திருநாளாக நினைவு கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் மூச்சை நிறுத்தியவர்களின் பேரணியும் நடத்துவது அந்த தியாகத்தினை கொச்சைப் படுத்துவதாகவே இருக்கிறது. நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஒவ்வொருவரின் தியாகத்தின் பின்னாலும் நிச்சயமாக ஒரு இஸ்லாமியனின் பங்களிப்பு உறுதியாக இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நம் ஊர் கப்பலோட்டிய தமிழனுக்கு முதலில் பொருளாதாரத்தை வாரி வழங்கியவர் ஹாஜி பக்கிர் அகமது எனும் இஸ்லாமியர். அவர்கள் கொடுத்த தொகை அந்த காலத்தில் இரண்டு லட்ச ரூபாய் என்பது சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்.
காந்தியடிகள் வெள்ளையர்கள் கொடுத்த பட்டத்தை துறக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பொழுது அதிகளவில் பட்டங்களைத் துறந்தர்வர்கள் முஸ்லிம் சமுதாயம்தான். ஆங்கிலேயர் பட்டத்தை துறக்க மனமில்லாமல் பலர் இருந்த நேரத்தில் காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி தேச பக்தியை வெளிகாட்டினார் அவ்வாறு அவர் செய்யாமல் இருந்திருந்தால் அவரும் ஒரு பாரிஸ்டர் ஆகியிருப்பார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் முதல் ராணுவ ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் ஷா நவாஸ் கான் என்ற இஸ்லாமியர். அதே போல் இவருடைய ராணுவ படை அமைக்க பொரும் பொருள் உதவி செய்தவர் ரங்கூனில் இருந்த இந்திய வியாபாரி வள்ளல் ஹபீப் அவர்கள் கொடுத்த தொகை அந்த காலத்தில் ஒரு கோடி ரூபாய். நேதாஜி அவர்கள் அமைத்த மாதிரி மந்திரி சபையில் இருபது மந்திரிகள் இருந்தனர் அதில் ஐந்து பேர் இஸ்லாமியர் என்பதும் வரலாறு.


மகாத்மா காந்தி கள்ளுக் கடை மறியல் அறிவித்த பொழுது மதுரையில் பங்கேற்றவர்கள் பத்தொன்பது பேர் இதில் இஸ்லாமியர் பத்து பேர் என்பது குறிப்பிடதக்கது.
இந்திய நாட்டின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களம் குறிப்பிடதக்க பங்களிப்பைச் செய்துள்ளார்கள். உதாரணமாக சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் திருமதி.பத்ருதீன் தியாப்ஜி ஆவார்.
இஸ்லாமியர்களின் இத்தகைய அர்பணிப்பினாலயே இந்தியா விடுதலைப் போராட்டம் முக்கயத்தும் பெற்றது என்பதை குறிப்பிட எழுத்தாளர் குஷ்வந்த சிங் பின்வருமாறு எழுதுகிறார் “இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாசாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிமாகவே இருந்தது. ” ( இல்லஸ்டிரேட் வீக்லி 2912-1975).

அதே சமயம் மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அகமத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்றவர்கள் இந்திய விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல் நம் தேசத் தந்தையான காந்தியடிகளுடன் ஹிந்து முஸ்லிம் நல்லிணக்த்திற்காக பொரும் பாடுபட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. நாம் இங்கு உதாரணத்திற்காக சில பேர்களுடைய சரித்திரத்தைக் குறிப்பிட்டுள்ளோம், அனைவருடைய சரித்திரத்தையும் பட்டியலிட்டால் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் காலத்தின் கோலம் உண்மையாக விடுதலைக்காக தியாகம் செய்தவர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டு இருட்டடிக்கப்பட்டு இன்று வெள்ளையனுக்கு துணை போனவர்கள் விடுதலை தியாகிகளாக சித்தரிக்கப் படுவது மிகவும் வேதனைக்குரிய விசயம் ஆனால் உண்மைளை உரக்கச் சொல்வது ஒவ்வொரு உண்மையான இந்தியனின் தலையாய கடமையாகும்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு


மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.
மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.


அன்னை மீனாட்சி வரலாறு

மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கிழக்கு கோபுரத்தின் நடுவில் இருந்து மேற்கு கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத்தின் நடு உச்சி வழியாக போகும். அதேபோல், வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டு பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும். இது தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு
அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.
அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.
அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.
மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள்.
இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.
கால் மாறி ஆடியவனின் கருணை: மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.
தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது..

“”ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
“”பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
பெரிய மூர்த்தி: பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.
சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
“சதா’ என்றால் “எப்போதும்’ என பொருள். எங்கு திரும்பினாலும் சிவனின் முகம். எதைக்கேட்டாலும் “சிவசிவ’ என்னும் மந்திர ஒலி. இதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டது “சதாசிவம்’ சிலை. இந்த சிலையை ஏழுநிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தில் காணலாம். திருநீறு விநாயகரை வணங்கிவிட்டு, அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் நின்று இந்த கோபுரத்தை கவனித்தால் அருமையான சதாசிவ தரிசனம் கிடைக்கும்.
அம்பிகை அணிவித்த மாலை : திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், “பிள்ளைத்தமிழ்’ பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.
அவருக்கு தன் கழுத்தில் அணிந்துஇருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சன்னதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியது, அம்பிகை மாலை அணிவித்தது ஆகிய நிகழ்ச்சிகளை அம்பாள் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் ஓவியமாக காணலாம்.


இருபதாம் நூற்றாண்டில் நடந்த கும்பாபிஷேகங்கள்

1.7.1923 (ருத்ரோத்காரி ஆண்டு, ஆனி 17, புதன்கிழமை)
28.8.1963 (சோபகிருது ஆண்டு, ஆவணி 12, புதன்கிழமை)
26.6.1974 (ஆனந்த ஆண்டு, ஆனி 12, புதன்கிழமை)
7.7.1995 (யுவ ஆண்டு, ஆனி 23, வெள்ளிக்கிழமை)
கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி : அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பது போல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!
மெய் ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தை கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர்.
நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலதுதொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார்.
ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும் படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார்.
மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம் ‘ என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவலாயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
எட்டுகாலம் எட்டு கோலம்: தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.
இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா�ஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.


கிளி ஏந்திய காரணம்

ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.
சித்திரைத் திருவிழா ஒரு சிறப்பு கண்ணோட்டம்
மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
மீனாட்சி அம்மனுக்கு கல்யாணம் : மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன், அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து மணந்து கொள்கிறார். இந்த நிகழ்வு சித்திரைத்திருவிழாவில் நடக்கிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள்.
பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.
இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.


சித்தருக்கு பூப்பந்தல் வழிபாடு

18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசன்னதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.
உபதேச தெட்சிணாமூர்த்தி முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு சிவன், அஷ்டமாசித்திகளை உபதேசம் செய்தார். அவர்கள் அதனை மறந்து விட்டதால், கல்லாக மாறினர். தங்களுக்கு விமோசனம் வேண்டி பட்டமங்கலம் (சிவகங்கை மாவட்டம்) என்னும் தலத்தில் தவமிருந்தனர். அவர்களுக்கு இத்தலத்து சிவன், குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை மீண்டும் உபதேசித்தார். இவர் மதுரையில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் “உபதேச தெட்சிணாமூர்த்தி’யாக காட்சி தருகிறார். இவரை “வேததெட்சிணாமூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள்.
கொடிமரத்தில் சம்பந்தர்: சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானபோது, சம்பந்தர் சிவனை வேண்டி திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார்.
சமண மதத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.


முக்குறுணி விநாயகர்

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.
அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் பிரதிஷ்டை செய்தார். இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங் களை வணங்குவது மரபாக இருக்கிறது. இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
விபூதி விநாயகர்: தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. “விபூதி’ என்றால் “மேலான செல்வம்’ என்பது பொருள். இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படை யெடுப்பின் போது மீனாட்சி அம்மன் திருவுருவத்தையும், சுந்தரேஸ்வரரையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. கோயில் ஸ்தானிகர்கள் கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர்.
கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளது. சுந்தரேஸ்வரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது.
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறை யை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டுஇருந்தது. இது அதிசயமாக கருதப்பட்டது.
அஷ்டசக்தி மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்கு நுழையும்போது முதலில் வரும் மண்டபமே அஷ்டசக்தி மண்டபமாகும். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் காட்சியளிக்கின்றனர்.
இவர்களை வணங்குவோர் தைரியமாக இருப்பர் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அன்னதான மண்டபமாக இருந்தது. பிற்காலத்தில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் தானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்ற பெயர் இப்போதும் இருக்கிறது.
மீனாட்சி நாயக்கர் மண்டபம்: அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து அமைந்துள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம். இதன் நீளம் 160 அடி. ஆறு வரிசைகளாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி கட்டம் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டியதால் இந்த பெயர் பெற்றது.
முதலி மண்டபம்: இந்த மண்டபத்தை கடந்தை முதலியார் கட்டினார். சிவபெருமான் பிட்சாடணராக இங்கு காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஊஞ்சல் மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி ஊஞ்சல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராணி மங்கம்மாள் இதை கட்டினார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிரில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளவாயான ராமப்ப அய்யர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கிலி மண்டபம்: அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. இதில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சொக்கநாதர் கருவறைக்கு வடக்கே கரியமாணிக்க பெருமாள் கோயில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. அந்த கோயிலின் தூண்களாக இவை இருக்கக்கூடும் என ஒரு கருத்து நிலவுகிறது. நாயக்க மன்னர்கள் இங்கு ஆண்டுள்ளதால் அவர்களும் இதை நிறுவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
நூற்றுக்கால் மண்டபம்: இந்த மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. நடராஜ பெருமான் இங்கு நடனம் ஆடுகிறார். தற்போது இந்த மண்டபம் தியான மண்டபமாக உள்ளது. சுவாமி சன்னதிக்கு வெளியே கொடிமரத்தின் அருகே அமைந்துள்ளது. 1526ல் சின்னப்ப நாயக்கர் இதை கட்டினார்.
புது மண்டபம்: கிழக்கு கோபுரத்தின் எதிரே உள்ள மண்டபத்தை “புது மண்டபம்’ என்பர். இதன் உண்மை பெயர் “வசந்த மண்டபம்’. கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் தண்ணீரை நிரப்புவர். அப்போது மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.
அனேகமாக இந்த மண்டபம்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் “புது மண்டபம்’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபம் 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப் பட்டது. திருவிழா காலங்களில் இந்த மண்டபத்தில்தான் சுவாமி எழுந்தருளி இருக்கிறார்.
ராவண அனுக்ரஹ மூர்த்தி, திரிபுராந்தகர், காளி, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை, கல்யானைக்கு கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்கு பால்கொடுக்கச் செய்த லீலை, வியாக்ரபாதர், பதஞ்சலி, வாயற்காவலர்கள், தடாதகை பிராட்டி, சுந்தரேஸ்வரர், சந்திரன், சூரியன், ஏகபாதமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, குதிரை வீரர்கள், யாழிகள், மனைவியருடன் திருமலை நாயக்கர் மற்றும் ஒன்பது நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கம்பத்தடி மண்டபம்

சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள இந்த மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராஜர், சுகாசனர், காலசம்ஹாரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், கலியாணசுந்தரர், திரிபுராந்தகர், சங்கர நாராயணர், அர்த்தநாரீஸ்வரர், இடபாரூடர், ஏகபாதமூர்த்தி, சக்ரதரர், சலநீதரானுக்கிரர், தட்சிணாமூர்த்தி, கஜசம்ஹாரர், சண்டே சானுக்கிரர், சோமசுந்தரர், கிராதர்ச்சுனர், உருத்திரர், பிட்சாடனர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபம்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய கோயில்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஆயிரங்கால் மண்டபம் பெற்ற சிறப்புடையது.
நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் இந்த மண்டபத்தை அமைத்தார். தொன்மையான பொருட்களின் களஞ்சியமாக இந்த கலைக்கூடம் இருக்கிறது. கண்ணப்பர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி உருவச்சிலைகள், இசைத்தூண்கள், அன்னத்தின்மீது அமர்ந்த ரதி ஆகிய சிலைகள் குறிப்பிடத்தக்கது.
புதுமண்டப சுருக்குப்பை ரகசியம் : “நீ தர்மத்தை காப்பாயானால் தர்மம் உன்னை காக்கும்’ என்பர். தொழில் மீது பக்தியுடையவன், தன் தொழில்தர்மத்தையும், பழமையையும் காப்பதில் அக்கறை உடையவனாக இருக்க வேண்டும். இதை நிரூபிக்கும் வகையில், புதுமண்டபத்திலுள்ள தையல் கலைஞர்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் கிராமத்துப் பெண்மணிகளின் “மணிபர்ஸான’ சுருக்குப்பை தைக்கும் போது, பையினுள் சில்லரை காசு வைத்த பிறகு தான் தைக்க ஆரம்பிப்பார்கள். தங்களிடம் அவசரத்துக்கு சில்லரை இல்லாவிட்டாலும், யாரிடமாவது வாங்கி வைத்த பிறகு தான் தைப்பார்கள். இப்படி ஒரு வித்தியாசமான தொழில் தர்மம்! இப்போதும், சில கடைகளில் மணிபர்ஸ் வாங்குபவர்களுக்கு காசுகளை உள்ளே வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.


பொற்றாமரைக்குளம்

கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.
சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை “பாண்டியன் படித்துறை’ எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.
மாதப்பெயரில் வீதிகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார் களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.
இதில் ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து”ஆவணி மூல வீதி’ என அழைக் கப்படுகிறது. சிவனின் திரு விளையாடல்களில் “பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியை சுற்றி வருகிறார்.
ஒரு நாள் மட்டும் யானை பவனி: மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள் உள்ளன. ஆனால், வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி,
“யானை யானை அழகர் யானை
ஆடுமாம் சொக்கர் கொம்பானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை”
என்ற குழந்தை தாலாட்டுப் பாடலும் இருக்கிறது.
முதல் திருவிளையாடல்: மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பவுர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

கடம்ப மரம்

மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் என்னும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரைக் கண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சுவாமி சன்னதியில் உள்பிரகாரத்தில் துர்க்கை சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருக்கிறது.
இதனை பக்தர்கள் தொட்டு வழிபாடு செய்வதால் மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சுற்றிலும் கம்பிஅரண் போடப்பட்டுள்ளது. மேல கோபுரத்தில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் ஒரு கடம்பமரம் உள்ளது. நன்கு வளர்ந்து பருத்த மரமாக உள்ளது. பக்தர்கள் இந்த மரத்தை தரிசிப்பதுடன், வீட்டுக்கொரு மரம் நடவும், அதன் மூலம் மீனாட்சி பட்டணத்தின் மாசைக் குறைத்து, அவளது மதிப்பிற்குரியவர்களாக மாறவும் இந்த கும்பாபிஷேக நாளில் உறுதியெடுப்போம்.
தாயுமானவர் : கம்பத்தடி மண்டபத்தில் வடக்கு நோக்கிய தூணில், கர்ப்பமான ஒரு பெண் நிற்பதையும், அவளுக்கு கீழே ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கும் நிலையில் நிற்பதையும் காணலாம். கீழே நிற்கும் பெண் “தாயுமானவர்’ எனப்படுவார். சிவபெருமானுக்கு “தாயுமானவர்’ என்று ஒரு பெயர் உண்டு. தனது பக்தையின் பக்திக்கு இணங்கி சிவபெருமானே பேறுகாலம் பார்த்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவருக்கு கோயில் திருச்சியில் உள்ளது. அந்தக் காட்சி இந்த தூணில் வடிக்கப்பட்டுள்ளது. சுகப்பிரசவம் ஆக இந்த சிற்பத்திற்கு எண்ணெய்க்காப்பிட்டு கர்ப்பிணிகள் வேண்டிக் கொள்கிறார்கள்.
தூணில் சரபேஸ்வரர் : இரணியனைக் கொன்ற நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகி இங்கும் அங்கும் அலைந்தார். அசுரனின் ரத்தம் நரசிம்மரை கோபத்திற்கு ஆளாக்கியது. ஆவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் மனிதன், மிருகம், பறவை என்ற அதிசய உருவெடுத்து வந்து நரசிம்மரை ஆலிங்கனம் செய்து (தழுவுதல்) சாந்தப்படுத்தினார். இச்சரபப்பெருமான் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் காட்சிதருகிறார். ராகுகாலத்தில் வழிபாடு செய்கின்றனர்.
மாறும் ஆட்சிகள்: ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது.
திருமலை நாயக்க மன்னர், சைவ, வைணவ ஒற்றுமை கருதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும், மீனாட்சி அம்மனின் மாசி திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார். விவசாயிகளின் ஓய்வுகாலம் கருதி சித்திரைக்கு விழாவை மாற்றியிருக்க வேண்டும். விழா மாற்றப்பட்ட பிறகு மீனாட்சியம்மனுக்கு சித்திரையிலும், சொக்கநாதருக்கு ஆவணியிலும் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
இதன் பிறகு அம்மன் சித்திரை முதல் 4 மாதமும், சுவாமி ஆவணி முதல் 8மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். மதுரையில் மீனாட்சிக்கே முக்கியத்துவம் என்றாலும், தன் கணவருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவள் விரும்பியதால் எட்டு மாதங்களாக மாறியது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ!
புதன் தலம்: நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக்
கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.
1877-ல் நடந்த கும்பாபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் தனது நினைவுகளை எழுதியுள்ளார். அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தார்கள். கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மதுரைக்கு அன்றைய தினம் வந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இடங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக இருந்த மேலகரம் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் ஆகியோர் வந்திருந்தனர்.
நகரத்தில் எள் போட்டால் விழ இடமின்றி ஜனங்கள் நிறைந்திருந்தனர்.
கும்பாபிஷேகம் நடக்கும்போது கோயிலுக்குள் சென்றவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே தக்கவர்களுக்கு மட்டும் சீட்டு அளித்து உள்ளே விட்டார்கள். அப்போது மதுரையில் கலெக்டராக க்ரோல் துரை என்பவர் இருந்தார். அந்த சமயத்தில் மதுரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள மதிலுக்கு வெளியில் பல ஜனங்கள் குடிசைகள் கட்டிக் கொண்டு கோயிலைச் சுற்றி அசுத்தப் படுத்தினர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் செய்வித்த வெங்கடாசலம் செட்டியார் என்பவர் அதுகண்டு மனம் வருந்தினார். நிவர்த்தி செய்ய முயன்று பார்த்தார். அவரால் இயலவில்லை. இதுகுறித்து மணி அய்யரிடம் தெரிவித்தார்.
அவர் மிக்க இரக்கமுடையவர். அவரிடம் செட்டியார், “”திருமதில் சிவபெருமான் வடிவமாயிற்றே. அதைச் சுற்றி ஜனங்கள் அசுத்தம் செய்கிறார்களே! இதைக்காண எனக்கு மனம் பொறுக்கவில்லை. நீங்கள் இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்,” என்று முறையிட்டு வந்தார். மணிஅய்யர் அவர் கூறுவதன் உண்மையையும், அவருடைய சிவபக்தியையும் உணர்ந்தார்.
உடனே க்ரோல் துரையினுடைய உதவியைப் பெற்று மதில்புறத்தே இருந்தவர்களுக்கு வேறு இடங்கள் வாங்கித்தந்தும், வீடு கட்ட பணம் உதவியும், நிலத்திற்கு விலை தந்தும் அவர்களை திருப்தி செய்வித்தார். பின்னர் வசதியான இடங்களில் அவர்களை குடியேற்றி பாதுகாத்தார். பின்னர் திருமதிலைச் சுற்றி நந்தவனம் அமைத்து இரும்பு வேலி போடச் செய்தார்..


ககோளம் – பூகோளம்

மீனாட்சி கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் மிகவும் அதிசயப்படுவீர்கள். உங்கள் ஊரில் பாலாறு ஓடுகிறதா, தேனாறு ஓடுகிறதா என்று மேடைகளில் பேசி கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை எல்லாம் பார்க்கலாம்.
ககோளம் : சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது.
மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகத்தை பாதுகாப்பதற்காக தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்த விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது.
அக்கால தேவர் உலகை இந்த ஓவியத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.
பூகோளம் : இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பதுபோல மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது.
பாற்கடல், எண்ணெய்க்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை இந்த ஓவியத்தில் பார்க்கலாம்.

வியாழன், 25 ஜனவரி, 2018

அம்பேத்கரின் கர்ஜனை:



அம்பேத்கரின் கர்ஜனை:

உங்களை மனிதராகவே ஏற்றுக் கொள்ளாத மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டு இருக்கிறீர்கள்..?

உங்களை கல்வி கற்கவே அனுமதிக்காத மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்..?

உங்களை கோயிலுக்குள் நுழைவதை தடுக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.?

தண்ணீருக்கான உரிமையைக் கூட தர மறுக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்..?

உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளுக்கு தடையாக இருக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள். .?

ஒவ்வொரு நிலையிலும் உங்களை அவமதிக்கும்  மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள். .?

மனிதருக்கும் மனிதருக்குமான நியாயமான  உறவுகளைக் கூட ஒரு மதம் மறுக்குமென்றால் அது மதமல்ல;
வன்முறையின் வடிவம்.

ஒருவரை மனிதராகவே ஏற்றுக்கொள்ளாத மதம், மதமல்ல; நோய்!

விலங்குகள் கூடத் தொடலாம்; ஆனால், மனிதன் தொட்டால் தீட்டு என்று விரட்டும் மதம், மதமல்ல;
கேலிக்கூத்து!

ஒரு வகுப்பாரையே கல்வி கற்காதே, சொத்து சேர்க்காதே, ஆயுதம் தரிக்காதே என்று சொல்லும் மதம், மதம் அல்ல;
மனித வாழ்வையே ஏளனப் படுத்தும் பகடி!

படிக்காதவனை படிக்காதவனாகவே இரு,
வறியவனை  வறியவனாகவே இரு என்று கட்டாயப்படுத்தும் மதம், மதமல்ல;
தண்டனை!

இது முக்கியமான காலகட்டம்.
நீங்கள் இன்று எடுக்க போகும் முடிவு தான் நாளைய உங்கள் தலைமுறைகளின்  ஒளிமயமான வாழ்க்கைக்கான பாதையை அமைத்துத் தரப் போகிறது.
இன்று நீங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தால், நாளைய உங்கள் தலைமுறை விடுதலை பெற்றதாய் இருக்கும்.

இல்லை, அடிமைகளாகவே  இருப்போம் என்று முடிவெடுத்தீர்களேயானால் நாளைய தலைமுறை அடிமையாகவே இருக்கும்.

முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய கடினமான பொறுப்பு உங்களையே சேர்ந்தது.

   - புரட்சியாளர் அம்பேத்கர்.
(27-06-1936. ஜனதா இதழ்)

புரட்சியாளருக்கு வீரவணக்கம்!! ஜெய்பீம்.. 

1000வருடத்திற்கும் முந்தைய இந்த தமிழனின் பண்பாட்டு கலைநயம்.


1000வருடத்திற்கும் முந்தைய இந்த தமிழனின் பண்பாட்டு கலைநயம்.

7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள்  பகவான் ஶ்ரீ் கிருஷ்ணருக்கு மாலை சூடுவதற்கு முன் கண்ணாடியில் தான் சூடி அழகு பார்க்கும் பழக்கம் கொண்டவர்

 11ஆம் நூற்றாண்டு 1080யில்தான் ஆக்ஸ்பர்க் கண்ணாடியை கண்டறிந்தார் என்பதற்கு பதில்  சொல்லும் விதமாய்

1000வருடத்திற்கும் முந்தைய இந்த தமிழனின் பண்பாட்டு கலைநயத்திற்கு பதில் சொல்லவும்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

ஆரியர் யார்? திராவிடர் யார்?


ஆரியர் யார்? திராவிடர் யார்?
-
மஹாபாரதத்தில் அர்ஜுனனை பார்த்து,ஆர்யனே என்று கிருஷ்ணர் கூறுகிறார்.ஆர்யன் போரின்போது பின்வாங்கமாட்டான்.ஆர்யன் தீர்க்கமாக முடிவெடுப்பவன் போன்ற பொருளில் அவர் பயன்படுத்துகிறார்.இனத்தை குறிக்க பயன்படுத்தப்படவில்லை. அந்த காலத்தில் பல இனங்கள் இருந்தன விருஷ்ணி குலம்,யாதவகுலம் போன்ற பல பெயர்கள் மஹாபாரதத்தில் வருகின்றன.ஆனால் ஆரிய குலம் என்ற ஒன்று காணப்படவில்லை. பாரதபோரில்  பாண்டிய மன்னனும் கலந்துகொண்டுள்ளான்.அவன் ஆரியல் அல்லாதவன் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.பாண்டிய மன்னனை சிறந்தவீரன் என்றுதான்  குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பண்டைய காலத்தில் அச்வமேதயாகம் என்ற ஒன்று நடத்துவார்கள். பல அரசர்களில் சக்கரவர்த்தி யார் என்பதை நிர்ணயிப்பதற்கான நடத்தப்படும் யாகம்தான் அது.யாரை அனைவரும் சக்கரவர்த்தி என்று ஏற்றுக்கொள்கிறார்களோ அவரே அனைத்து தேசத்து அரசரைவிட உயர்ந்தவர்.அவ்வாறு சக்கரவர்த்தியால் ஆளப்படும் நாடு பாரதம் . மஹாபாரதம் என்பது பல்வேறு நாட்டு அரசர்களுக்கிடையே நடந்த போரைப்பற்றி கூறுகிறது.மகாபாரத்தில் பாண்டிய மன்னன் இடம்பெற்றிருக்கிறான் என்றால் அவன் பாரத நாட்டின் சொந்தக்காரன்தானே!. அவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனை திராவிடன் என்று சொல்வது பாண்டினை அவமதிப்பதாகும்.
-
மகாபாரத காலத்தில் வடஇந்திய மக்கள் பேசிய மொழி என்பது சமஸ்கிருதத்திற்கு முன்பு இருந்த மொழியாகும்.
அது தற்போதுள்ள  தமிழுக்கு முன்பு இருந்த மொழி. அந்த பழைய காலத்து மொழி ஒரே மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் உள்ள வடஇந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்தவை.தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தவை.ஆனால் மகாபாரத காலத்து மொழி என்பது ஒரேமொழிதான். தெற்கிலிருந்து சென்ற பாண்டி மன்னனால் மற்ற மன்னர்களுடன் கலந்து பழக முடிந்துள்ளது. அவர்களுக்கிடையில் மொழி பாகுபாடு இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை.அதேபோல் ராவணன் பேசிய மொழியும் ராமர் பேசிய மொழியும் ஒன்றாகவே இருந்துள்ளது. ராவணனின் தம்பி விபீஷணன், ராமரிடம் அடைக்கலம் வந்த பிறகு அவர்களுக்கிடையில் பல உரையாடல்கள் நடக்கின்றன. அப்போது விபீஷணன் வேறு மொழி பேசியதாக ராமாணத்தில் சொல்லப்படவில்லை
-
சமஸ்கிருதம் சிறிதளவு படித்தவன் என்ற முறையில் தற்கால சமஸ்கிருதத்திற்கும் ,தற்கால தமிழுக்கும் இடையில் உள்ள இலக்கணம் பெரும்பாலும் ஒத்து காணப்படுகிறது. வெளிநாட்டு மொழியான சீன மொழியையும் தழிழையும் ஒப்பிடமுடியாது.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். அதேபோல் அரேபிய மொழியையும் தமிழையும் ஒப்பிட முடியாது. பக்கத்திலே வராது. ஆனால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் ஒப்பிட முடியும். அவைகளுக்கிடையில் ஒள்ள வேறுபாடு மிகக்குறைவுதான். தற்போதுள்ள சமஸ்கிருதம் தோன்றி 3000 ஆண்டுகள் ஆகிறது. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு முந்தைய மொழியான வேதமொழியும்,தொல்காப்பிய காலத்து தமிழும் மிக நெருங்கிய மொழியாக இருந்திருக்கும். தொல்காப்பிய இலக்கணமும்.பண்டைய சமஸ்கிருத இலக்கணமும் பெருமளவு ஒத்து காணப்படுவதாக இரண்டையும் கற்றறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.
-
ஆகவே மகாபாரத காலத்தில் பாரதம் முழுவதும் ஒரே மொழிதான் பேசப்பட்டன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒரு பண்பாடு நிலவியதையும் காணலாம்.உதாரணமாக ராமர் சிவபெருமானின் பக்தர்.அதேபோல் ராவணனும் சிவபெருமானின் பக்தர். அர்ஜுனன் சிவபக்தர்,பாண்டிய மன்னன் சிவபக்தர். ஆகவே பழைய காலத்தில் வழிபாட்டு முறைகளில்கூட வேறுபாடு இல்லை. பண்டைய தமிழ் இலக்கியத்தில் இந்திரனை வழிபட்டது பற்றிய குறிப்பு உள்ளது. மகாபாரத்திலும் இந்திரவழிபாடு உள்ளது.
முற்கால பாரதம் என்பது தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,நேபாளம்,இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
-
இந்த வேறுபாடுகள் எப்படி உருவாகின? சமஸ்கிருதம் தோன்றிய பிறகு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம். பண்டைய மொழியைவிட சிறப்பான மொழியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் பாணிணி முனிவர் சமஸ்கிருதத்தை உருவாக்கினார்.அதன்பிறகு சமஸ்கிருதத்தில் பல இலக்கியங்கள் உருவாக ஆரம்பித்தன. பண்டைய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் மொழிரீதியாக வேறுபாடு தோன்றியது. தென் இந்திய இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டன. வட இந்தியர்களால்,தென்இந்திய இலக்கியத்தை படிக்கமுடியவில்லை. தென் இந்தியவர்களால் வடஇந்திய இலக்கியத்தை படிக்க முடிக்கவில்லை. இவ்வாறு மொழி அடிப்படையில் இரண்டு இனங்கள் உருவாகின.சமஸ்கிருதம் அதன்பிறகு ஹிந்தி,பெங்காலி போன்ற பல மொழிகளாக பிரிந்துபோனது. தமிழ் மொழியும் தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளாக பிரிந்துபோனது.
-
கலாச்சாரரீதியாக ஒரே இனத்தவராக இருந்த இந்தியரை,  மொழிரீதியாக   தனித்தனியே பிரிப்பதற்கு வெள்ளைக்காரன் திராவிடன் என்ற பெயரை பிரபலப்படுத்தினான். அதன்பிறகு நமது பிரிவினைவாதிகள் அந்த பெயரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
-
முடிவுரை
-
ஆரியன் என்பது ஒரு இனத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல என்பதை மகாபாரதம் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.ராவணன்,பாண்டிய மன்னன் உட்பட தென் இந்தியாவில் வாழ்ந்த அனைவரும் பேசிய மொழி ஒரே மொழிதான்,இருவருக்குள் உள்ள கலாச்சாரம் ஒன்றேதான். பாரதம்,மஹாபாரதமாக உயரவேண்டுமானால் திராவிடம் என்ற போலி சித்தாந்தம் ஒழிய வேண்டும். பிரிவினைவாதிகளின் கருத்துக்களை மக்கள் ஒதுக்கவேண்டும்.
- கட்டுரை சுவாமி வித்யானந்தர் 

செவ்வாய், 16 ஜனவரி, 2018

ஆண்டாள் தாசி-- முழு விளக்க ஆதாரபூர்வமான கட்டுரை... விளக்கம்



ஆண்டாள் தாசி-- முழு விளக்க ஆதாரபூர்வமான கட்டுரை... விளக்கம் வேண்டுவோர் முழுதும் படிக்கவும்... பார்ப்பனீய புரட்டுகளை புரிந்துகொள்ளவும்...

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி'யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் - அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.

Andal was herself a Devadasi who lived and died in srirangam temple

ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.

இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல - அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட  Indian Movement some aspects of dissent, protest and reform  நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?

1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘ஊருக்கு இளைத்தவர்தானா இந்தப் பிள்ளையார் கோவில் ஆண்டி?'

இதில் மிக முக்கியமான நோக்கத்தக்க கருத்துண்டு. ஆண்டாள் தேவதாசிஎன்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்கவேண்டும்?

இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே - தேவர்களுக்குத் தாசி என்று.

தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!

சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடுவதா? தேவர்களுக்குத் தாசியாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?

அன்று சட்டசபையில் நடந்தது என்ன?

திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச் சார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்கவேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்' என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்துவிடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்' தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆசையையும் ஊட்டுவதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத் திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசீயப் பத்திரிகைகளும், ‘தேசீய வீரர்'களும் அனு கூலமாயிருப்பார்களா என்பது இவர்களுடன் யோக்கி யர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு', 10.2.1929)

தேவதாசிக்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார்குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.

‘‘தேவதாசியாக இருப்பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண் ணியத்தை அனுபவித்தது போதும் - போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் - எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை'' என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத்தி னாரே டாக்டர் முத்துலட்சுமி! வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விடவில் லையா?

சத்தியமூர்த்தி அய்யர்வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பிகளுக்குத் தெரியாதோ!

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!

இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.

ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்' இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி கவிப்பேரரசு எழுதியது கண்டு இவுர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப்படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவதாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டினால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக' இருக்கும் அல்லவா!

இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:

‘‘ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.

தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறைவ னான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள். இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.

ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தி லும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.

ஓர் ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து  அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னாள் சிறிதுநேரம் நின்றே மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப்படும்!''

இவ்வளவுப் பிரமாதமாக இந்து மதக் கண் ணோட்டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவதாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீய ராகட்டும், இந்துத்துவா பேர்வழிகளாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?

திராவிடர் கழகத் தலைவர், ‘‘ஆண்டாள் என்ற பாத் திரமே கற்பனையானது'' என்று ராஜாஜி சொன்னதை எடுத்துக் கூறியுள்ளாரே!
கவிஞர் வைரமுத்துவை காயும் கூட்டம் ராஜாஜியைக் கண்டிக்கத் தயார்தானா?

சொல்லப்போனால், ராஜாஜி கடைந்தெடுத்த வைணவர் ஆயிற்றே - ஆண்டாள்மீது அவருக்கு இல்லாத அக்கறையா இந்த அம்பிகளுக்கு?

ஆண்டாளை ஆவர்த்தனம் செய்யும் அட அய்யன்மார்களே, அய்யங்கார்மார்களே, பெண்ணான ஆண்டாள் பாடிய பாடலின் தரமென்ன? விரக தாபமெடுத்த ஒரு பெண்ணின் காமக் கூச்சலாக இல்லையா?

2009 ஆம் ஆண்டில் இராகவன் என்ற பார்ப்பனர், ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி (வெளியீடு கிழக்குப் பதிப்பகம்) என்று நூல் எழுதி வெளிவந்ததே - அப்பொழுதெல்லாம் இந்த அம்பிகள் எங்கே போனார்களாம்?

(ஆண்டாளின் காமக் குரோதப் பாடல்கள் பெட்டி செய்தி காண்க).

கவிப்பேரரசு எழுதியதோடு, பேசியதோடு விட்டி ருந்தால் அந்த அளவோடு முடிந்திருக்கும். பார்ப்பனர் கள் தேவையில்லாமல் சீண்டப் போய் அஸ்தி வாரத்தையெல்லாம் தோண்டக்கூடிய ஒரு நிலையை யல்லவா ஏற்படுத்தி விட்டார்கள்.

பார்ப்பான் படித்தவனே தவிர அறிவாளியல்ல என்று அண்ணல் அம்பேத்கர் காரணமில்லாமலா சொல்லுவார்?

பார்ப்பானுக்கு ஏது முன்புத்தி?

மற்றொரு கேள்விக்குத் தமிழர் தலைவர் வெகுநேர்த்தியாகப் பதில் சொல்லியுள்ளார்.

மதங்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை என்பதற்கு எண்ணாயிரம் சமணர்களை, சைவர்கள் கழுவேற்றிக் கொன்றதை எடுத்துக் கூறியிருக்கிறார்.

கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக்கப் பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வினுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!

ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி

ஆஃப் சயின்ஸ்  என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘The Hindu', 20.10.1996).

கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.

ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்கு வமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே - அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்றும், மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர்களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவையும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்' என்று அம்பிகள் அலறுவார்கள் - அய்யோ பரிதாபம்!

ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படுவோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும்,  வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத்துள்ளீர்களே!

அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடுகிறீர்களே - நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?

குறிப்பு: வைரமுத்து அவர்களைக் கடித்துக் குதறும் அய்யன்மார்கள், அந்த ஆய்வுரைக்கு ஏற்பாடு செய்த - அந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்பற்றி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? உரசாதது ஏன்? ஏன்? அதுதான் அவாளுக்கே உரிய முழு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘இனப்பற்று!'

கொக்கோகம் தோற்றோடும் பாடலுக்குச் சொந்தக்காரர் ஆண்டாள்!

ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் உள்ளபடி....

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:

முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!

(கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!)

காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!

எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! விரகதாபம் எடுத்த ஒரு பெண்ணின் காமப் பீறிடல்கள்தானே இவை?

கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!

இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லு வதோ!

‘ஆண்டாள்' கதை பொய் -
ஆச்சாரியார் கூறுகிறார்!

வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றிப் புகழப் படுபவரும், ‘சூடிக் கொடுத்த நாச்சியார்' என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே ‘பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப்பெறும் பாடல் களுக்கு உரிமை உடைய வர் என்று கூறப்படுபவருமான ‘ஆண்டாள்' என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச் சாரியார் கூறி இருக்கிறார்.

"ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண் டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று ‘‘திரிவேணி'' என்னும் ஆங்கில மாதப் பத் திரிகை யில் 1946ஆம் ஆண்டு செப் டம்பர் இதழில் ராச கோபா லாச்சாரியார் எழுதி யுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைணவர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர் கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள்வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?

நன்றி:  இராஜன் கொச்சி மோன்

திங்கள், 15 ஜனவரி, 2018

தைப்பொங்கல் வரலாறு: பொங்கலின் பழமையும் பழக்கமும்!!



தைப்பொங்கல் வரலாறு: பொங்கலின் பழமையும் பழக்கமும்!!

ச ங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை
சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இரண்டாம் நாள் தைப்பொங்கல்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க, பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில்
சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி. மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் விழா. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று, அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள்.
இவ்வகையில் தமிழர் திருநாள் நன்முறையில் அனைத்து வகை மக்களாலும் கொண்டாடப்படும்.

வியாழன், 11 ஜனவரி, 2018

எது தமிழ் புத்தாண்டு?: வரலாறு அறிவோம்!


எது தமிழ் புத்தாண்டு?: வரலாறு அறிவோம்!

*தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!*

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் ‘சஷ்டி பூர்த்தி’ என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார். கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த ‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்’கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.


தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.

தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கலைஞர் அவர்களை பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, “சோறு” எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,

*“நித்திரையில் இருக்கும் தமிழா!*
*சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு*
*அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே*
*அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்*
*தரணி ஆண்ட தமிழனுக்கு*
*தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”*
-பாரதிதாசன்.