ஞாயிறு, 17 நவம்பர், 2019

இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்



இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்

– கௌதம சன்னா.

கார்த்திகை மாதத்தின் பண்டகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் நமது சூழலில் அதை அதன் உள்பொருளோட கொண்டாடுகிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். புராணக் குப்பைகளில் நமது நாட்டின் ஏராளமான  மகத்துவங்கள் மறைந்துப் போய், குப்பைகளையே வணங்குதும், அதை கொண்டாடுவதமாக நமது சமூகம் மாறி நீண்டக் காலங்களாகிறது

கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் பல இட்டுக் கட்டியவைகள் என்றாலும் அந்த இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதைகளையும் அதன் சமூக அரசியலையும் யாரும் புரிந்துக் கொள்வதில்லை. வழக்கமாக திராவிட இயக்தினர் கார்த்திகை தீபத்தை போற்றும் புராணக் கதைகளை விமர்ச்சித்தும் மறுத்தும் எழுதும் கட்டுரைகள் ஒருபுறம் இருந்தாலும், புராணக் கதைகளுக்கு ஓர் அறிவியல் அடிப்படையை வகுக்க முயலும் செய்திகளைக் காண முடியும். ஏனெனில் நாகரீக உலகில் இந்துச் சமூகம் தலைக் காட்ட முடியாதபடி இருக்கிறது என்று அம்பேத்கர் சொன்னது இந்த அடிப்படையில்தான். நாகரீக சமூதாயத்தில் இந்து மதம் தனது தலையைக் காட்ட வேண்டுமெனில் தமது புராணக் குப்பைகளுக்கும், ஏற்றத்தாழ்வின் அடிப்படைகளுக்கும் ஓர் அறிவியல் அடிப்படையை வகுக்க வேண்டிய நெருக்கடியில் அது இருக்கிறது. அப்படியானால் கார்த்திகை தீபத்திற்கு என்ன அறிவியல் அடிப்படைகளை வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், விசாரணையினை இந்தக் கோணத்திலிருந்துத் தொடங்குவோம்.

முதல் கதை – கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது  அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்,  அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

இந்தக் கதையில் தமது நோக்கத்தை எளிதில் அடைந்து விடுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார், அதாவது பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் மட்டும்தான் தங்களில் யார் பெரியவன் என்ற போட்டி, சிவன் அந்தப் போட்டியில் இல்லை என்பதை முன்பே அறிவிப்பதின் மூலம் அவரின் மேலான நிலையை முதலிலேயே நிறுவிவிடுகிறார், அடுத்து அந்த இருவருக்கும் சிவன்தான் சோதனை வைக்கிறார் அதன் மூலம் இருவருக்கும் நடுவில் அவர் மட்டும்தான் இருக்கிறார், தமது மேண்மையை நிலைநிறுத்துகிறார். கடைசியாக இருவரும் சிவனிடம் சரணடைந்து அவரின் மேன்மையை ஏற்றுக் கொண்டு மக்களுக்கும் அதை வெளிபடுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர், அதை சிவனும் நிறைவேற்றுகிறார், கடைசியாக சிவனே மேலானவர் என்று முடிக்கிறார் சிவாச்சாரியார். தமது நோக்கத்தில் வெல்கிறார். பிரம்மனும் விஷ்ணுவும் ஏற்றுக் கொண்ட பிறகு சாமன்யரான உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது. என்ற மறைமுகமான எச்சரிக்கையும் சிவாச்சாரியார் விடுக்கிறார்.

இரண்டாம் கதை – இதையும் கந்தப் புராணத்திலே காணலாம். கதைபடி.. தங்களை வதைக்கும் சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும்போது மானாகவும் யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது, இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப் படுகிறார்கள். இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.  இந்த கார்த்திகேயனுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை தனியாக விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஏனெனில் புராணக் கதைப்படி இருவரும் வெவ்வேறானவர்கள், ஆனால் இந்துக்களின் நம்பிக்கைப்படி இருவரும் ஒருவர்தான்.

மூன்றாவது கதை – சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும்  சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள்  என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

karthikai deepamஇந்த மூன்று கதைகளில் எது நம்பக்கூடியக் கதை. இக்கதைகளின் படி கார்த்திகை நாள் சிவனுக்கு உரியதா? கார்த்திகேயனுக்கு உரியதா? அக்னி பகவானுக்கு உரியதா? கார்த்திகைப் பெண்களுக்கு உரியதா? ஆறு ரிஷிகளின் மனைவிகளுக்கு உரியதா, அல்லது முருகனுக்கு உரியதா? இதில் யாருக்கு உரியதாக இருந்தாலும் சொல்லப்பட்ட கதைகளில் என்ன அறிவியல் உண்மை இருக்கும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலான போட்டியை சுட்டிக்காட்டி அவர்கள் மனம் மாறுவதை விளக்கும்போது அவர்களது அகங்காரத்தை சிவன் அடக்கினார் எனவே கார்த்திகையின்போது அகங்காரத்தை விட்டொழிக்கலாம் என்று புராணவாதிகள் விளக்கம் கூறலாம், ஆயினும் நாகரீகமடைந்திருக்கும் உலகில் இக்கதைகளை அறிவியல் ஆதாரமாகக் காட்ட முடியுமா?

எனினும் எல்லாப் பண்டகைகளுக்கும் ஓர் அறிவியல் அடிப்படை இருக்கத்தான் வேண்டும் என்பது சமூக அறிவியல் கற்றுத் தரும் பாடம், அந்த அடிப்படையில் பார்க்கும் போது கார்த்திகை தீபத்திற்கான அறிவியல் அடிப்டையிலான வராற்று உண்மையைக் காண இரண்டு சான்றுகள் இருக்கின்றன.

சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபத்தைப் போல சாயல் கொண்ட நிகழ்வுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பலபேர் சொல்லுவதைப்போல் ஏராளமான சான்றுகள் உள்ளன என்பதெல்லாம் ஏற்றிக்கூறும் கதைகளென்றாலும் இருக்கும் சொற்பமான சான்றுகளில் உள்ள உண்மைத் தன்மையினை பரிசோதிக்கும் போதுதான் உண்மை வரலாறு கிட்டும்.

சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்களில் நற்றிணை சிறப்பான ஒரு தொகுப்பு. அதில் வரும் 58வது பாடலை முதுகூற்றனார் என்பவர் எழுதியுள்ளார்  அப்பாடலில் தீபத்தைப் பற்றினக் குறிப்பு உள்ளது. அதில்

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்

சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின்

கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக்

கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்

வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்

கையற வந்த பொழுதோடு மெய்சேர்த்து,

அவல நெஞ்சினம் பெயரஇ உயர்திரை

நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன்

ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே..

இப்பாடலை சிலர் முல்லை நிலத்துக்கு உரியன எனச் சொன்னாலும் இதில் துலங்கும் காட்சி நெய்தல் நிலத்துக்கு உரியது. கடலுக்குச் சென்றத் தலைவனுக்கு காத்திருக்கும் தலைவி வருத்தடைகிறாள். பரந்த கடலில் சென்றத் தலைவன் பெரியவர்கள் தோளில் மாட்டிய சிறு பறையை அடிப்பதுபோல விரைவாய் துடுப்பிட்டு அலைந்துக் கொண்டிருக்கிறான்.. அப்போது, வீரை என்ற இடத்திலிருந்து ஆட்சி புரியும் சோழநாட்டு வேளிர் குடியைச் சேர்ந்த வெளியன் தித்தன் ஆட்சி நடக்கிறது. பனிக்காலத்தின் குளிர்ந்த மாலை வருகிறது, பனி பெய்கிறது, அப்போது சங்கு ஊத, முரசில் பெரிய விளக்கேற்றி வைக்கிறான் தித்தன். தலைவின் அவலம் மனத்தில் கூடுகிறது. அது எப்படி இருக்கிறதென்றால் ஒன்றன் பின் ஒன்றாக ஓடும் தேரினைப் போல கடலில் எழும் பெரிய அலைகள் நெடு நீரில் கலப்பது போல கலங்குகிறாள். என்று புலவர் விளக்குகிறார்.

இக்கவிதை காட்டும் காட்சிபடி, முரசில் விளக்கினை ஏற்றினான், என்பதைத்தான் கார்த்திகை தீபத்திற்கான ஆதாராமாகக் காட்டுகிறார்கள். கவிதையில் வரும் காட்சிபடி பெரிய முரசில் விளக்கை ஏற்றினான் என்றால் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஏற்றினான் என்று பொருள் கொள்ள முடியும், இன்னும் ஒரு விளக்கம் இக்கவிதைக்குத் தரப்படுகிறது, அதன்படி உப்புத் தொழில் செய்பவர்கள் தித்தன் ஏற்றிய விளக்கின் ஒளியில் உப்பள வேலை செய்தன்ர் என்கிறது. ஒரு வேளை அது கலங்கரை விளக்கமாகக்கூட இருக்கலாம். அதில் குறிப்பிடப்படும் வீரை என்ற ஊர் எங்கிருக்கிருக்கிறது எனத் தெரியவில்லை. சிலர் சேலத்திற்கு பக்கத்தில் உள்ள வீரகனூர் என்று சொல்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டால் காட்சியே மாறிவிடுகிறது. அதாவது முல்லை நிலத்திற்கு உரிய காட்சியாக மாறிவிடுகிறது. அப்படி மாறினால் விளக்கமும் மாறிவிடும் போருக்குச் சென்ற தலைவனுக்காக தலைவி வருந்துகிறாள். மாலையில் விளக்கை அரசன் ஏற்றியும் அவன் திரும்பவில்லை… என பொருள் கொள்ளலாம், எது எப்படியாயினும் பெரிய முரசில் அதாவது கொப்பரையில் விளக்கை ஏற்றினான் என்பது விளங்குகிறது.

இதற்கும் கார்த்திகை தீபத்திற்கும் என்னத் தொடர்பு என்று சந்தேகம் வரலாம். இது பனிக் காலத்தில் மன்னன் விளக்கேற்றினான் என்பதால் அது கார்த்திகையாய் இருக்கலாம் என்பது ஒரு யூகம்தான். அதாவது அதை ஒரு சான்றாக வைத்துக் கொள்ளலாம்.. அப்படியே வைத்துக் கொண்டாலும் அது முதற் சான்று அல்ல. முதற் சான்றாய் ஏற்றுக் கொண்டால் கார்த்திகை தீபத்திற்கான கடவுள்களே தேவையில்லை என்றாகிவிடும், அதை எந்த இந்து இலக்கியவாதியும் ஒப்புக் கொள்ளமாட்டான்.

அடுத்தாக நம்மிடையே நீண்ட காலமாக இருக்கம் பழமொழி ‘குன்றிலிட்ட விளக்குபோல’ என்பதாகும். குன்றிலிட்ட விளக்கு பரந்துபட்ட ஒளியைத் தரும்.அண்ணாமலைத் தீபத்தை இதற்குச் சான்றாகக் கொள்ள முடியும். என்றாலும் இந்தப் பழமொழி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வழங்குவதால் திருவண்ணமலைக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க முடியாது. குன்றில் ஏற்றிய விளக்கு ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில்தான் இருந்திருக்க வேண்டும். அது கார்த்திகை தீபத்தின் மர்ம்மத்தையும் அவிழ்க்கலாம் அல்லவா?

ayothidasarஇந்நிலையில் இதற்கு கைக் கொடுப்பவர் அயோத்திதாப் பண்டிதர் அவர்கள் மட்டும்தான். அவர் என்ன சொல்கிறார் என்பதை இனி பார்ப்போம்.

மலாடபுரம் என்ற ஊரில் இருந்த பௌத்த சங்கத்தின் சேர்ந்த பிக்குகள் மக்களுக்குப் பயன்தரும் பல ஆய்வுகளைச் செய்து வந்தனர். பல மருந்துகளையும் கண்டுபிடித்து மக்களுக்கு அளித்தனர். அவ்வாறான பணியில் பேராமணக்கு விதையிலிருந்தும், சிற்றாமணக்கு விதையிலிருந்தும் நெய்யை வடித்து எடுத்தனர். அது அக்காலத்திற்கு பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அந்த நெய்கள் பலவாறாக பயன்படுத்த முடியும் என்பதுடன் அப்போது பெரிய பிரச்சனையாக இருந்த இரவின் இருளைப் போக்க அது பெரிதும் உதவும் என நம்பினர். ஏனெனில் இருட்டில் விளக்கை ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. காய்ந்த மரத்தினை வெட்டி அதைக் தீயிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும், ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது. விறகின் வெளிச்சத்தை பரலாக்க முடியாது, அதில் அனல் அதிகமாக இருக்கும், வெளிச்சமும் நீண்ட நேரம் கிடைக்காது, அவிந்துப் போனால் உண்டாகும் புகை பலவகையான மூச்சு நோய்களை உருவாக்கியது, திணருலும் வரும். எப்படிப்பார்த்தாலும் விறகின் வெளிச்சப்பயன்கள் குறைவுதான், அந்த கையறு நிலையில்தான் ஆமணக்கு விதைகளில் கிடைத்த நெய் பெரிய வரமாக அமைந்தது. பிக்குகள் கண்டறிந்த நெய்யில் தீபத்தை ஏற்றி சோதனை செய்தனர். அப்போது பிரகாசமான ஒளி கிடைத்தது, அனல் மிகக்குறைவாக இருந்தது. சுருக்கமாக சொல்வதென்றால் குளிர்ந்த ஒளி கிடைத்தது. சிறிய இடத்திலிருந்து பெரிய ஒளி.. இது பிக்குகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, தமது கண்டுபிடிப்பை மக்களுக்கு பயன்படுத்த முனைந்தார்கள். ஆனால் மக்கள் உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் முதலில் மன்னனின் இசைவைப் பெற விரும்பினார்கள்.

மன்னன் உடனே இசையவில்லை. ஏனெனில் நெருப்பினால் உண்டாகும் புகை பலவிதமான நோய்களை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, நெருப்பைக் காத்து வருவது என்பது ஒரு கிராமத்தின் கடமையாகவே இருந்து வந்த அக்காலத்தில் எளிதில் கொண்டு செல்லத்தக்க ஒரு நெருப்பினால் பலவித பிரச்சனைகள் உண்டாகலாம் என்று மன்னன் அச்சப்பட்டான். அதனால் அந்த நெய்களை சோதிக்க விரும்பினான். அதன்படி யாருக்கும் தீங்கு நேராவண்ணம், தனது நகருக்கு அருகில் உள்ள அண்ணாந்து குன்றின் உச்சியில் ஒரு பள்ளத்தை வெட்டச் செய்தான். அதற்குள் நிறைய ஆமணக்கு நெய்யை தயாரிக்கச் செய்து அதை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் வெட்டிய பள்ளத்தில் ஊற்றி, பெரிய திரியை ஏற்றி கொளுத்தச் சொன்னான், அதன்படி சேவுகர்கள் செய்தார்கள். குன்றின் உச்சியில் பெரிய தீபம் எரிந்ததைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். அந்த ஒளியினால் எந்த மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவிதமான தீங்கு விளையாதைத் கண்டனர். அனைவருக்கும் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

மக்களின் நம்பிக்கையை உணர்ந்த மன்னர் அனைவரும் தத்தமது வீடுகளில் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதித்தான். அதன்படி முதல் மூன்று நாட்கள் மக்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து சோதித்துக் கொண்டனர். அதனால் தீங்கேதும் விளையாததைக் கண்ட பின்னரே வீட்டுக்குள் கொண்டு சென்றனர். அதுமுதற்கொண்டு அனைவருக்கும் வீட்டிலேயே நெருப்பை வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது. பணக்காரர்களின் அல்லது ஒரு கிராமத்தின் சொத்தாக இருந்த நெறுப்பு அனைத்து வீடுகளுக்கும் வந்தது என்பது எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு.

அப்படி பௌத்த பிக்குகள் கண்டுபிடித்த அந்த ஆமணக்கு நெய்கள் சோதிக்கப்பட்ட இடம் அண்ணாந்துமலை என்ற திருவண்ணாமலையாகும் என்பதைச் சொல்லத்தேவையில்லை. பிக்குகள் தமது கண்டுபிடிப்பை சோதித்த காலம் முன்பனிக்காலமாகும். பௌத்த வழக்கப்படி எதையும் அவர்கள் பௌர்ணமி அன்றுதான் தொடங்குவார்கள். அதனால் மழைக்காலம் முடிந்து முன்பனித் தொங்கும் காலத்தின் முதல் பௌர்ணமியில் அவர்கள் தமது சோதனையைச் செய்தனர். கார்காலமும் முன்பனிக் காலமும் இணையும் நாட்கள் குளிராகவும் இருட்டாகவும் இருக்கும். கார் என்பதற்கு இருள், கருமை என்று பொருள். கரிய கார் காலத்தின் இருட்டை துலக்கும் ஆமணக்கு நெய் கண்டுபிடிக்கப்பட்டதால் அம்மாதத்திற்கு காரை துலக்கும் எனப் பொருள்படும் கார்த்துல மாதம் என்ற பெயர் உண்டானது. இந்த பெயரே மருவி காத்திகை மாதம் என்றானது.

பௌத்தர்களின் கண்டுபிடிப்புகள் பௌத்த மதம் பரவிய நாடுகளில் பரவுவதுபோல இந்த கண்டுபிடிப்பும் பரவியது. சீனப் பயணிகள் இதைப்பற்றினக் குறிப்பை எழுதியுள்ளனர். அவர்கள் நாட்டிலும் ஆமணக்கு நெய்யை அறிமுகப்படுத்தினர். அவர்களும் அந்நாளைக் கொண்டாடி வருகின்றனர் என்று பண்டிதர் எழுதுகிறார். எள்நெய்யை கண்டுபிடித்து அது மனித குலத்திற்கு பயனுள்ளதாக மாறியதோ அப்படித்தான் ஆமணக்கு நெய்யும் மாறியது. மக்கள் தமக்கு பயன் விளைவிக்கும் யாவற்றையும் கொண்டாடத்தானே செய்வார்கள். அப்படித்தான் கார்த்துலக்கும் தீப நாளையும் கொண்டாடி வருகின்றனர். இப்போது குன்றின் மேலிட்ட விளக்கு என்பதற்கான விளக்கமும் புரிந்திருக்கும்.

எனவே. கார்த்திகை பண்டகை என்பது பௌத்தர்கள் அறிமுகப்படுத்திய பண்டகை என்பதை யார் மறுக்க முடியும். ஆனால் இதில் எழும் கேள்வி என்னவென்றால். மலாட புரம் என்ற இடம் எங்கிருக்கிறது. திருவண்ணமாலை நகருக்கு அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லவாடி எனும் கிராமமாக இருக்கலாம் என்பது எனது யோசனை. பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்பு திருவண்ணமலை அண்ணாமலை என்றுதான் அழைக்கப்பட்டது. சைவக் குரவர்கள் அங்குள்ள சிவன் கோயிலை பாடியப் பிறகுதான் அது திருவண்ணமாலை என்றானது.

அண்(ணா) என்றால் உயர்ந்த என்று பொருள், அதானால்தான் மூத்த உடன்பிறப்பை அண்+அவன் = அண்ணன் என்று அழைக்கிறோம். எனவே செங்குத்தாய் உயர்ந்த குன்று அண்ணாந்து பார்க்க வைப்பதால் அது அண்ணாமலை என்றானதில் வியப்பில்லை. ஆனால் மலாடப்புரத்தின் அரசன் யார் என்பதுதான் ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கும், அது பற்றி பண்டிதர் சொல்லும்போது அதற்கான குறிப்பு அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் காட்டிய ஆதாரங்கள் பெரும்பாலும் .ஓலைச்சுவடிகளை மையமாகக் கொண்டதுதான். எனவே அது அழிந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

எது எப்படி இருந்தாலும் கார்த்திகை தீபம் என்பது இந்து புராணக் குப்பைகள் காட்டும் அருவெறுப்பான கதைகளால் ஆனது அல்ல, அது பௌத்தர்களின் கொடை. நமது காலத்திய மக்கள் பண்டகைகளின் வரலாறுத் தெரியாமல் வெறும் கேளிக்கைகளாக மட்டும் பார்க்கக்கூடிய மோசமான மனநிலையில் சிக்கிச் சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல பட்டாசுகளை வெடிப்பார்கள். யாரோ மூளை நோகக் கண்டுபிடித்தவற்றை எந்தவிதமான குற்ற உணர்வும், நன்றயுணர்ச்சியும் இல்லாமல் அனுபவிப்பதைவிட மோசமான போக்கு ஒன்றுமில்லை. அதனால் சமூகத்தின் படைப்புத் திறன் முற்றிலுமாக காயடிக்கப்படுகிறது. படைப்புத் திறனை முற்றிலும் இழந்தச் சமூகத்திற்கு கேளிக்கைகள் மட்டுமே வாய்க்கும், அதுவும் ஒரு காலத்தில் சுமையாகவும், சலிப்பாகவும் மாறிவிடும், அப்போது பௌத்த கண்டுபிடிப்பாளர்களின் படைப்புகள் மட்டுமல்ல அத்தியாவசிய படைப்புகளை உருவாக்கியவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் புரியும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக