புதன், 29 ஜனவரி, 2020

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள்


கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்: உலகப் புகழ்பெற்ற நாயக்கர்கால சிற்பங்கள்

கலையழகு மிளிரும்  16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சிற்பங்களுக்கும், சிற்பக்கலைக்கும் புகழ் பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும்; பாளையங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் பஞ்சாயத்து, கிருஷ்ணாபுரம் கிராமம் பின் கோடு 627 759 (அமைவிடம் 8° 36′ 43″ N அட்சரேகை (லாட்டிட்யூடு), மற்றும் 77° 58′ 19″ E தீர்க்கரேகை (லாங்கிட்யூடு). 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 1820 ஆகும். மொத்தம் 905.24 ஹெக்டேர் பரப்பளவுள்ள இவ்வூரில் 484 வீடுகள் உள்ளன.


பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை வானளாவிய இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கட்டிடக்கலைப்பணியில் அழகுற அமைந்த 16 ஆம் நூற்றாண்டுக் கோவில் இது. இக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் இருந்துள்ளன. ஆற்காட்டு நவாப் உத்தரவின்படி சந்தா சாஹிப் மூன்றாம் பிரகாரத்தை தரைமட்டமாக்கிவிட்டான். இதுமட்டுமல்ல இடித்த கற்களைக்கொண்டு பாளையங்கோட்டையில் கோட்டை ஒன்றையும் கட்டினானாம். இராஜகோபுரம் தாண்டியவுடன் துவஜஸ்தம்பத்தையும் பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடனையும் காணலாம்.

கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நன்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ சேவை சாதிக்கும் பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சேவை புடைசூழ காட்சியளிக்கிறார் கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்தமண்டப நுழைவாயில் ஆஜானுபவ தோற்றம்கொண்ட துவாரபாலகர்கள் காவலில் உள்ளது. அலர்மேல்மங்கைத் தாயாரின் தனி சன்னதி பிரகாரத்தில் உள்ளது.

இக்கோவிலில் பந்தல் மண்டபம், வாஹனமண்டபம், ரெங்கமண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம் என்ற பெயர்களில் சில மண்டபங்கள் உள்ளன. பந்தல் மண்டபத்து தூண்களில் புஷ்பப் பொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. விழாக்களின்போது ஊஞ்சல்மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் அமர்த்துகிறார்கள். வசந்தமண்டபம் கலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஜீயர் மண்டபத்தில் அழகான தூண்களில் .கேரளா கோவில்களைப்போல பாவைவிளக்கு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் ஜீயர்கள் இங்கு அமர்வதுண்டாம். சொர்க்கவாசல் யாகசாலை மண்டபத்திற்கு மேற்குப்புறத்தில் உள்ளது. மணிமண்டபத்தில் பல யாளி-யானை தூண்கள் அணிவகுத்துள்ளன.

கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைகள் நம்மை வரவேற்கின்றன. இக்கோவிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளைக் காணலாம். இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் இந்துப் புராணங்களில் காணும் சம்பவங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆடை அணிகலன்கள் தத்ரூபமாக காணப்படுகின்றன. கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரிகின்றன.

ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ள. தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது சிற்பிகளின் திறமைக்கு வலுவான சான்றாகும். இன்று இந்த சிற்பம் சற்று சிதைந்தும் வில்லின் ஒரு பகுதி பழுதுபட்டும் காணப்படுகிறது.

மன்மதன் மற்றும் ரதி சிற்பங்கள் நேரெதிர் தூண்களில்.

ரதி-மன்மதன் சிற்பங்கள் நேரெதிரில் உள்ள தூண்களில் காமரசம் ததும்ப வடிக்கப்பட்டுள்ளன. ரதியின் இடது கை மணிக்கட்டில் நரம்பு வரியோடுவதைக் காணலாம். வெற்றிலை பாக்கை மெல்லும் வாயைப் பார்த்து திகைக்கிறோம். ரதி இது உயிர்பெற்று நம் முன்பு நிற்கும் ரதி அல்ல, ரதியின் சிலை மட்டுமே என்ற உணர்வு பெறுவது சிரமம். ரதியின் எதிரில் 5 1/2 அடி உயரத்தில் மன்மதன் கையில் வில்லேந்தி உயிர்பெற்று நிற்கிறார். இந்த ரதி-மன்மதன் சிற்பங்கள் சாகாவரம் பெற்றவை.

பீமன், வியக்ரபாலகன் (சிவனடியார்) மற்றும் தர்மராஜா

பராக்கிரமம் வாய்ந்த புராண நாயகர்களின் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன என்பதை நம்ப முடியவில்லை! அதிசயம் ஆனால் உண்மை. இந்த அதிசய சிற்பத் தொகுப்பில் பீமனும் வியாக்ரபாலனும் சண்டைபோடுவதாகவும், இந்த சண்டைக்கு தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவர் வியாக்ரபலகன் வென்றதாக தீர்ப்பளிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த புராணக் கதைக்கேற்ப, தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும், பீமனின் திமிர் பிடித்த முகபாவத்துடனும் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர்.

வீரபத்ரர்

பெரிய மீசையுடன் கம்பீரமாக நிற்கும் வீரபத்ரர் தன் அடியவரை கருணை கொஞ்சும் விழிகளுடன் நோக்குகிறார். இந்தச் சிற்பத்திலும் கை நரம்புகள் தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளன.

ரம்பா

அப்சரஸ்கள் தேவலோகத்தில் பார்வதிதேவியின் தோழிகளாவர். பாற்கடலைக் கடையும் போது அப்சரஸ்கள் தோன்றியதாகவும் இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களில் ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்களைத்தான் காவியங்களும், இலக்கியங்களும் பேசுகின்றன. தேவலோக அப்சரஸ்களின் தலைவி ரம்பா. தேவலோக அழகியான ரம்பாவை எப்படி காட்டினால் சிறப்பு என்று யோசித்து சிற்பிகள் ஒரு ரம்பையை மண்டபத்தின் நுழைவாயிலில் வலதுபுறம் அமைந்த தூணில் இரத்தமும் சதையுமாய் நிறுத்தியுள்ளார்கள். நீண்ட கூரிய நாசி, பெரிய காதணிகள், உடற்கூறியல்படி கட்டமைப்பான உடல் – இந்த மண்டபத்தில் உள்ளது போலவே ரம்பா இருந்திருப்பார் என்று நம்பலாம்.


இளவரசன் கர்ணன்

இளவரசனுக்குரிய மீசையுடனுடன், கையில் பெரிய (பிற்காலத்தில் சிலையில் வில் ஒடிந்துவிட்டது…) வில்லைப் பற்றியபடி மகாபாரதத்தின் கதாநாயகன் கர்ணன் கனகம்பீரமாக நிற்கிறார். அங்க தேசத்து அரசனாக துரியோதனனால் முடிசூட்டப்பட்ட வில்வீரனை இங்கு காணலாம்.

அர்ஜுனனின் தவம்

கர்ணன் இருந்தால் அர்ஜுனன் இருக்க வேண்டுமல்லவா! கர்ணனுக்குப் பக்கத்திலேயே நீண்ண்ண்..ட தாடியுடன் ஆழ்ந்த தவக்கோலத்தில் அர்ஜுனனைக் காணலாம். கையில் நீளமாக வளர்ந்த நகங்கள் அர்ஜுனனின் நீண்டநாள் தவ வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. உயிர்த்து எழுந்து நிற்கும் சிற்பம்.

யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம்

ஒரே கல்லில் யானையும் காளையும் கலந்த (ரிஷப குஞ்சரம்) சிற்பம் . இரண்டும் நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போன்று இருக்கும். யானையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் காளை போலவும், காளையின் உடலை மறைத்து விட்டு பார்த்தால் யானை போலவும் தோன்றும்.


அரசியை தோளில் சுமக்கும் அரசன்

உணர்ச்சி ததும்பும் உயிரோவியம். ஒரு அரசன் தன் அரசியை தோளில் சுமந்தபடியே எதிரிகளுடன் சண்டை போடுகிறார். அரசியின் உடல் எடையை சுமப்பதால் அரசனின் கைகளில் தசைகள் முறுக்கேறியுள்ளன, விலா எலும்புகள் விரிவடைந்துள்ளது. உடற்கூற்றியல்படி உயிர்பெற்ற சிற்பங்கள். அரசனின் மூச்சுக்காற்று பட்டு அரசியின் முக்காடு தலையை விட்டு சற்று விலகுகிறது. அரசியை காப்பாற்றுவது ஒன்றே அரசனின் ஒற்றைக் குறிக்கோள்.

கடத்தப்பட்ட தன் அரசியை காப்பாற்றும் அரசன் சிற்பத்தொகுப்பு

கிருஷ்ணாபுரத்தின் மற்றோரு தலைசிறந்த கலைப்படைப்பு இந்த சிற்பம். இந்தத் தொகுப்பில் அரசன் தன் குதிரையில் அமர்ந்து கடத்தப்பட்ட தன் அரசியை மீட்க ஆக்ரோஷத்துடன் துரத்துகிறான். போர்க்களத்தில் ஒரு முன்னங்காலை தரையில் ஊன்றியும், மறுகாலை தூக்கியபடியும் கோபம் ததும்ப விரையும் குதிரையை இங்கு மட்டுமே காணமுடியும். அரசியை கடத்தியவனை தன் பார்வையிலிருந்து நழுவவிட்ட போதிலும் விரைந்து சென்று அவனை நோக்கி வெறியுடன் முன்னேறும் அரசனின் உணர்வுகள் காண்போர் கண்களுக்கு விருந்து.

கொஞ்சும் அழகுடைய ஒரு பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி அமர்ந்துள்ளது. ஒரு பிச்சைக்காரன் தோளில் மலங்க மலங்க விழித்தபடி ஒரு குரங்கு அமர்ந்துள்ளது. இவை சிற்பக்கலையின் உன்னதம்.

இரண்டு காதலர்கள் மற்றோரு தூணில் ஒய்யாரமாய் நின்று காதல் புரிகிறார்கள்.

அடுத்த தூணில் வீரன் ஒருவனும் நாடோடி மங்கை ஒருத்தியும் நடனமாடும் மற்றோரு அழகியை வியந்து பார்த்தபடி உள்ளார்கள்.

வேறொரு தூணில் தன்னை வெறியுடன் கற்பழிக்க முயலும் ஒரு சாமியாரிடம் தன்னைக் காத்துக்கொள்ள அவனுடைய தாடியைப் பிடித்து வலுவாக இழுத்து தள்ளும் கற்பரசி ஒருத்தியின் போராட்டம் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


வைணவக் கோவில்கள் தற்பொழுது சைவ கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1975 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இக்கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் இக்கோவிலைப் நேர்தியாகப் பராமரித்து வருகிறது. புதுவண்ணப் பூச்சுடன் இக்கோவில் இன்று மிளிர்கிறது.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

சோழர்காலக் கோயில்கள்


சோழர்காலக் கோயில்கள்

பேரூர் பட்டீசுவரர் கோவில்.
வரலாற்று மற்றும் இலக்கியச்சிறப்பும், தொண்மையும், கோவில்களிலே தலயாய கோவில் என்ற புகழையும் பெற்றது, பேரூர் பட்டீசுவரர் கோவில். மூவேந்தர்களுடன் தொடர்புடைய இக்கோவில் கட்டி ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இரண்டாயிரமாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 சோழர்காலத்தில் கட்டப்பட்ட கட்டடக்கலைக்கு பேரூரே முதல் உதாரணமாக விளங்குகிறது. கரிகாற்சோழன், விக்கிரமசோழன், வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச்சோழர்களின் கல்வெட்டுகள் இன்னமும் காட்சியளிக்கின்றன. சிற்பவளத்திலும், இலக்கிய வளத்திலும் பெருமை பொருந்திய பேரூர் உலக அளவில் பெருமையை பெற்றுள்ளது. பேரூர் கல்வெட்டுகள் மற்றும் கோவிலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் கற்பனை, இலக்கியச்சுவை, பொருட்சுவை, தத்துவக்கருத்து, வழிபாடு ஆகியவை பரவிக்கிடக்கின்றன. கோவிலின் மேற்பரப்பில் வரைப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் சைவசமயத்தை தழைக்கச்செய்த 64 நாயன்மார்களை பற்றிய பாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரை பற்றிய வரலாற்றை சுருக்கமாகவும், பேரூர் பற்றிய செய்தியை விரிவாகவும் அதற்கேற்ற படத்தை ஓவியமாக வரைந்துள்ளனர். பேரூர் புராணத்தை கச்சியப்ப முனிவர் செய்யுளாகவே எழுதியிருந்தார். இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உரைநடையாக எழுதி பேரூருக்கு மேலும் பெருமையை சேர்த்தவர் கோவைகிழார். கோவிலில் உள்ள புகழ்பெற்ற கனகசபை மண்டபத்தில் கோமுனி, பட்டிமுனி ஆகிய இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜரின் வடிவம் மிகவும் அழகானது. இது பார்ப்போரை ரசிக்க செய்வதோடு மெய்மறக்கச்செய்கிறது. சைவ சமயச்சார்புள்ள இறைவடிவங்களின் எழில்மிகு வேலைப்பாடுகள், மனிதனின் சிந்தையை கவர்கிறது. கோபுர விமானம் அங்கு வடிக்கப்பட்டுள்ள தாமரை மலர், கல்லாலான சங்கிலி, சிறிய தூண்களில் காட்டப்பட்டுள்ள புராணக்கதைகளில் அன்றைய சிற்பிகள், கலையில் புகுந்து விளையாடியுள்ளனர். புராதனமான கோவிலின் கற்பக்கிரஹத்தை கரிகாற்சோழன் அமைத்துள்ளார். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பேரூரை புகழ்ந்து பாடியுள்ளார்.  ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் பேரூருக்கு வருகை புரிந்து இறைவனை வழிபாடு செய்து தேவாரம் பாடியுள்ளார்.

12 முதல் 13ம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் கட்டினர்.  பேரூர் கோவிலில் மொத்தம் 6 கோபுரங்கள் உள்ளன. வரலாற்று கால கணக்குப்படி பேரூர் ரோமானியர் காலத்திலேயே அந்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அக்காலத்திய நாணயங்களின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கோவிலின் முகப்பில் உள்ள தெப்பக்குளம்  பதினாறு வளைவுகளை கொண்ட நான்கடுக்குகளை கொண்டுள்ளது. சிறியதும், பெரியதுமான தேர்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிமாநதி என்றழைக்கப்படும்.நொய்யல் நதி அதன் இரு பக்கங்களிலும் காட்சியளிக்கும் தென்னந் தோப்புகள், சோழன் துறை என்றழைக்கப்படும் நொய்யல் படித்துறை ஆகியவை இன்றளவும் உள்ளன. பேரூரை வடக்குப்பகுதியிலும், தெற்கு பகுதியிலும் அரனாக நின்று பாதுகாப்பது வடகைலாய நாதர் கோவில், பட்டீசுவரர் கோவிலை தென்கைலாய நாதர் கோவில் என்றழைக்கின்றனர்.

தமிழகத்தில் கொங்கில் அளிக்காஞ்சிவாய்ப் பேரூர் எனச் சிறப்பித்துக் கூறும் மேலைச் சிதம்பரமாகிய இத்தலம், தொன்மைச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், கோயிற் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றது.  பழங்கற்சின்னமும், முதுமக்கள் தாழியும், உரோமானியக் காசும் இப்பகுதியில் மிகுதியாய்க் கிடைப்பது தொன்மைக்குச் சான்றாகும்.

திருக்கோயிலழகும் சிற்பச் சிறப்பும் உடையது என்கிற நற்பெயரைப் பொதுவாகத் தட்டிக்கொண்டு போவது தஞ்சை மாவட்டம் தான்.  இந்தப் பெருமைக்குப் போட்டி போடும் விகதமாக அமைந்திருப்பது கோவை மாவட்டத்திலுள்ள திருப்பேரூர் ஆகும்.

‘ஆரூரார் பேரூரர் என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும் என்றும் அப்பர் சுவாமிகள் சுவாமிகள் தனது சேஷத்திரக்  கோவையில்; இரண்டிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே சுமார் கி.பி. 650-க்கு முன்னரே பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.  பேரூர் பற்றிய தனித் தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரம்
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.  கிழக்கு பார்த்த வாசல்.  ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன

‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற செப்பேடு பேரூர்க் கோயிலை கரிகாலன் கட்டியதாகக் கூறுகிறது. பேரூரில் உள்ள காஞ்சி யாற்றுத் துறைக்குக் கரிகாற் சோழன் துறை என்று பெயர்.  கரிகாற் சோழன், விக்கிரம சோழன், வீர ராசேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச் சோழர் கல்வெட்டுக்கள் இங்கு மிகுதியாக உள்ளன.  இதனால் சோழர் தொடர்பு புலனாகிறது.

ஆதாரங்கள்
கோவிலுக்கு வடக்கே காஞ்சி நதியில் கட்டப்பட்டுள்ள சோழன் படித்துறை கரிகாற் சோழனால் அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

கொங்குநாட்டின் வரலாற்றையே இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

கொங்கு சோழர் கட்டிய அர்த்தமண்டபம், மைசூர் அரசர் வெட்டிய 16 கோணமுள்ள   திருக்குளம், ஹோசைலர்களின் திருப்பணி இவை தவிர பல செப்புப் பட்டயங்களும் உள்ளன.

பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், அக்கோயிலில் பலவிதக் கலைப் பாணிகளும் சங்கமித்துள்ளது.  அதிசயமில்லை என்று புரிகிறது.  அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர்.

முற்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் வரலாற்றை வகை செய்யுமாற்றை நோக்குங்கால் ஆரம்பகாலச் சோழர்கள் பல்லவமன்னர்கள். கையாண்ட கட்டிட மரபையே பின்பற்றிக் கட்டிடங்களை அமைத்தனர். சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர்,கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.

இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

10ம் நூற்றாண்டுவரை இவர்கள் கட்டிய ஏராளமான கோயில்கள் சிறியனவாகவே உள்ளன. இவற்றுட் பெரும்பாலனவற்றைப் புதுக்கோட்டை மாவட்டத்திற் காணமுடிகிறது. பல்லவர்பாணி படிப்படியாக மாற்றிச் சோழர்பாணியாக வடிவெடுப்பதை இக்கோயில்களிற் காணலாம். இதற்கு நல்ல உதாரணமாக நார்த்தமலையிலுள்ள விஜயாலய சோழீச்வரத்தைக் குறிப்பிடலாம்.

மேற்குநோக்கி அமைந்த இக்கோயில் ஆரம்பகாலச் சோழர்பாணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இதன் அமைப்பு அசாதாரணமானது. சதுரமான பிராகாரத்தின் உள்ளே வட்டமான கருப்பக்கிருகம் காணப்படுகிறது. கருப்பக்கிருகத்துக்கும் பிராகாரத்துக்கும் மேலேயுள்ள விமானம் போகப்போக அளவிற் குறைந்திருக்கும் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் மூன்று மாடிகளும் சதுரமாகவும், மேலேயுள்ளமாடி வட்டமாகவும் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்குமேலே வட்டமான கலசலமும் காணப்படுகின்றன. (நீலகண்ட சாஸ்திரி 1966:547)

கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்றுண்டு. சோழர்காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உண்டு. முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர்பாணியிலேயே உள்ளன. ஒருகாலின்மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் உள்ளன. ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இது முக்கிய அம்சமாகும். கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும், பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் அழகான சிறிய கோயிலாகும். இதுவும் மேற்படி பல்லவ பாணியையே பெரிதும் ஒத்திருக்கிறது.

கட்டிடகலை வளர்ச்சியின் அடுத்த வளர்ச்சியை சிறீநிவாச நல்லூரில் உள்ள கோரங்கநாதர் கோயிலிற் காணமுடிகிறது. இது முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தெழுந்ததென்பர். ஆனால் பாலசுப்பிரமணியம் இது ஆதித்த சோழன் காலத்திற்குரியதென்பர். (பாலசுப்பிரமணியம் 1966:61) நாகசாமியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். (1976:63) இக்கோயிலுள்ள கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம் ஆகிய உறுப்புக்கள் ஒரே காலத்திற் கட்டப்பட்டு இன்றும் சிதைவுறாமல் உள்ளன. அழவுக்கு மீறிய அலங்கார வேலைப்பாடுகளின்றி மிகவும் எளிமையான இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தூணின் மேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள பலகைப் பகுதியும், பல்லவபாணியிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றன.

திருப்பாசூர்
கரிகாலதிருப்பாசூர்
கரிகாலன் இக் கோயிலை கட்டினான் என்பது வரலாறு. தெற்கு ராஜகோபுரமே கோயிலின் பிரதான வாயில். இந்த வரலாற்றுக்குத் துணை சேர்ப்பதாக திருமழிசைப் பகுதியில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் ஆலயமும் கரிகால் சோழனால் கட்டபட்ட கோயிலாகும்.ராஜராஜ சோழன் காலத்திலும், குலோத்துங்கசோழன் காலத்திலும் கோயிலிக்கு நிவந்தமளித்த சான்றுகளுடன் கல்வெட்டுகள் நிறைய உள்ளன. தொண்டை மண்டலம் ஈக்காடு கோட்டம் காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர் என்பதுஇவ்வூருக்குக் கல்வெட்டுகளில் வழங்கிவரும் பெயராகும்.

கோச்செங்கண்ணன்
அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
ஆக்கூர்-609301 நாகப்பட்டினம் மாவட்டம்.
மூலவர் : தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்)

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய சிவாலயங்களுள் இது மாடக்கோயில் ஆகும். இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையுடைய தலம்.

உற்சவர் : ஆயிரத்தில் ஒருவர்
அம்மன்/தாயார் : வாள்நெடுங்கன்னி
தல விருட்சம் : கொன்றை,பாக்கு, வில்வம்
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : யாருக்கு ஊர்
ஊர் : ஆக்கூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு

தல வரலாறு
ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது.
மன்னனும் பல கோயில்கள் கட்டி வரும் போது ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.
உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி கோயிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள் ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும்.
மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, ""ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோயில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்'' என்று கெஞ்சுகிறான்.
ஆயிரத்தில் ஒருவர் : மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் "ஆயிரத்தில் ஒருவராக' அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், ""ஐயா, தாங்களுக்கு எந்த ஊர்'' என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் ""யாருக்கு ஊர்'' என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.
ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக "தான்தோன்றீசுவரர்' தோன்றுகிறார்.
கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாளை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக்காணலாம்.

பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்
கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 46வது தலம்.

திருவிழா
திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும். மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி, போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

விசயாலயன்
விசயாலயன் எனும் சோழன், தஞ்சையையும் வல்லத்தையும் வென்ற மகிழ்ச்சியில், தான் வழிபடும் தெய்வமாகிய நிசும்பசூதனி என்ற துர்க்கைக் கோயிலைத் தஞ்சாவூரில் கட்டியுள்ளான். பக்தியார்வத்தால் நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோளீச்சுவரம், காளியாபட்டியிலுள்ள சிவன் கோயில், பனங்குடியிலுள்ள அகத்தீசுவரம் என்ற பரமேசுவரன் கோயில், விராலியூரிலுள்ள பூமீசுவரர் கோயில், விசலூரிலுள்ள மார்க்கசகாயேசுவரம், திருப்பூரிலுள்ள சிவன் கோயில், ஏனாதியிலுள்ள சிவன் கோயில் ஆகியவை விசயாலயன் காலத்தவையாகும்.

இரண்டாம் ராசராசரான்
தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.

திருக்கண்ணபுரம்
திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால் இங்குள்ள பெருமாள்கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர் பாணியில் கட்டப்பட்டது. முனியதரையன் என்ற சிற்றரசன் அக்காலத்தில் ஏற்படுத்திய அறச்செயல்படி இன்றும் 'முனியதரையன் பொங்கல்' இக்கோயிலில் வழங்கப்படுகிறது. திருக்கண்ணபுரம் பொங்கலைப் பற்றி சோழ மண்டல சதகப் பாடல் ஒன்று உண்டு.

புனையும் குழலான் பரிந்தளித்த
பொங்கலமுதும் பொரிக்கறியும்
அனைய சவரிநாயருக்கே யாமென்று
அருந்தும் ஆதரவின்
முனைய தாயன் பொங்கலென்று
முகந்தற் கோதும் அமுது ஈந்து
வனையும் பெருமை எப்போதும்
வளஞ்சேர் சோழமண்டலமே.

முனையதரையன் பொங்கள்.
திருக்கண்ணபுரம் சோழநாட்டில் உள்ள 108 திருப்பதியில் ஒன்று திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில். இக்கோயில் கோபுரத்தின் அடியில் மதிற்சுவரில் மேற்க்கு பார்த்தபடி 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ள ஒரு விதியாசமான அமைப்பாகும். வைணவ தலங்களில் இரவு பூஜையில் பொங்கள் படைக்கும் பழக்கம் உள்ள ஒரே திருத்தலம் இதுவாகும். இப்பகுதியை ஆட்சி செய்த முனையதரையன் என்ற கள்ளர் குல குறுநில மன்னன் தினசரி பெருமாளை வணங்கி விட்டு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செவழித்து வறுமையில் வாடிய அவர் அரசனால் சிறை பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் சாதம் செய்து கொடுத்தாள் மனைவி. அதையும் அவர் பெருமாளுக்கு மானசீகமாக படைத்து சாப்பிட்டார். மறு நாள் காலை அர்ச்சகர் கோயிலை திறந்து கருவரைக்கு வந்தபோது சுவாமியின் வாயில் பொங்கல் சாதம் ஒட்டி இருந்ததை பார்த்து அரசனிடம் செய்தி தெருவிக்கப்பட்டது. அரசன் பொங்கள் சாதம் முனையதரையன் வீட்டு சாதம் என்பதனை அறிந்து பெருமகிழ்வடைந்தான். அன்று முதல் இன்று வரை இரவு பூஜையின் போது பொங்கள் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது முனையதரையன் பொங்கள் என்று அழைக்கப்படுகிறது. வேறு எந்த கோயில்க ளிலும் இவ்வித பெயர் சொல்லி அன்னம் படைப்பதிலை.

பராந்தக சோழன் காலத்திலும் பல கற்கோயில்கள் கட்டப்பட்டன. இவை ஆதித்த சோழன் காலமரபைப் பின்பற்றியே எழுந்தன. காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமாநாடு என்ற இடத்தில் பராந்தகனின் தந்தையாகிய ஆதித்த சோழன் இறந்தபோது ஒருஷபள்ளிப்படையை’ பராந்தகன் நிறுவினான். பள்ளிப்படை என்பது இறந்தவர் நினைவாக எடுக்கப்படும் கோயிலாகும். பராந்தகன் காலக் கோயில்களில் புள்ளமங்கையில் அமைந்துள்ளபசுபதி கோயில் சிறப்புடையது. இது ‘பிரமபுரீஸ்வரர்’ கோயில் என்றும் திருவாலந்துறை ;மகாதேவர் கோயில்’ என்றும் அழைக்கப்பட்டது.

திருவாவடுதுறை, திருவாமாத்தூர், நங்கவரம், திருமால்புரம், எறும்பூர், காட்டுமன்னார்குடி முதலிய ஊர்களில் உள்ள கோயில்களும் பராந்தகசோழன் காலத்தனவாகும். பராந்தக சோழனுக்குப் பின்னர் கண்டராதித்தர், அரிஞ்சயன் சுந்தரசோழன், உத்தமசோழன் முதலியோர் காலங்களிலும் கட்டப்பட்ட கோயில்கள் ஆதித்த சோழனது கலைமரபினை ஒத்தனவேயாகும்.

கண்டராதித்தரின் தேவியாரும், உத்தம சோழனின் தாயாருமான செம்பியன் மாதேவியார், பாடல் பெற்ற பல தலங்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தார். வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து, தெற்கே நாகபட்டனம் வரை இவ்வம்மையார் கோயில்களை அமைந்தார். இவர் கட்டுவித்த கோயில்கள் செம்பியன்மாதேவி, கோனேரிராசபுரம், ஆடுதுறை, திருக்கோடிகாவில், குற்றலாம், திருநாரையூர், கண்டராதித்தம், விருத்தாசலம், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. கண்டராதித்தர் தேவரின் நினைவாக ஒரு பள்ளிப்படையையும் இவர் எடுப்பித்தார்.

செம்பியன் மாதேவியார் காலத்துக்கு முன்பு மூன்று அல்லது ஐந்தாக இருந்த தேவகோஷ்டங்கள் இக்காலத்தில் ஒன்பது முதல் பதினாறுவரை விரிவாக்கப்பட்டன.

இடைக்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் கலைப்பாணியின் சிகரமெனலாம்
சோழ மன்னர்களுள் முதலாம் இராஜராஜன் தொடக்கம் முதலாம் குலோத்துங்கன் வரையில் ஆட்சிபுரிந்த காலப்பகுதியே தென்னக வரலாற்றில் காலச்சுவடுகளை காலமாகா வண்ணம் வகைசெய்த பெருமைக்கரியது. முதலாம் இராஜராஜனும் அவனுடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் பற்பல நாடுகளைக் கைப்பற்றிச் சோழ சாமராச்சியத்துடன் இணைத்தனர். ஆதனாற்பெற்ற பொன்னையும் பொருளையும் கொண்டு ஈடிணையற்ற பெரும் கோயில்களைக் கட்டினர். இவர்களின் கீழிருந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் கூடப் பற்பல கோயில்களை அமைக்கத் துணைநின்றனர்.

பழுவூரைத்தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த பழுவேட்டரையர்கள் பல கோயில்களைக் கட்டினர். மேலைப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில், கீழைப்பழுவ+ர், திருவாலந்துறை. மகாதேவர் கோயில். இடைப்பழுவூர் அகத்தீஸ்வரர் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இம்மூன்றினுள் அகத்தீஸ்வரம் மிகவும் சிறப்புவாய்ந்தது. ஒரே திருச்சுற்றில் இரண்டு விமானங்கள் அமைந்துள்ளன. ஓன்று, ‘வடவாயில் ஸ்ரீகோயில்’ என்றும், மற்றது ‘ தென்வாயில் ஸ்ரீகோயில்’ என்றும் பெயர் பெறுகின்றன. இரண்டு கோயில்களும் தனிக்கற்களாலான கற்றளிகளாகும். ஒன்று சதுரமான சிகரத்தையும், மற்றது, வட்டமான சிகரத்தையும் கொண்டுள்ளன. கோபுரத்தை நோக்கியுள்ள முகமண்டபம் மிகவும் எழிலாக அமைந்துள்ளது.

இருக்குவேளிர்கள் சோழர்களின் நெருங்கிய உறவினர்கள், இவர்கள் கொடும்பாள+ரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்களுள் ஒருவன் விக்கிரமகேசரிபூதி என்பவன். இவன் விக்கிரமகேசரீச்சுரம் எனும் கோயிலைக் கட்டினான். ஒரே திருச்சுற்றில் மூன்று விமானங்களையுடையது இக்கோயில். இவற்றை ‘விமானத்திரயம்’ எனக் கல்வெட்டுக் கூறுகின்றது. இம்மூன்று விமானங்களில் ஒன்று இப்பொழுது இடிந்து காணப்படுகிறது. மூன்று விமானங்களையும் சதுரமான சிகரத்தையும் கொண்டுள்ளன. ‘மூவர் கோயில்’ என்றும் அழைக்கப்படும் இதனுடன் காளாமுகர்களின் ஆசிரியரான மல்லிகார்சுனரின் குருமடம் ஒன்றும் இணைந்து காணப்படுகிறது.

குந்தவை தேவி
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும்
விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு
குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம்
அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை
பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும்
மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த
கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும்
விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை
குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும்
தெரியவருகிறது.

இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி,
பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக
மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள்
வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிரது. குந்தவை தேவி அளித்த
நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக்
கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின்
பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களை கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்
செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில்
குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.

அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000
கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப்
பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில்
சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை
திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்..

இராசேந்திர சோழன்
கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப் பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்தான். பின் இக்கோவிலையும் கட்டனான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
உலகப் பாரம்பரிய சின்னம் : 1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

Details for Editing
திருவாரூர்
பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். திருவாரூரையும் தியாகராசர் கோயிலும் பிரித்து வரலாறே எழுதமுடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

தஞ்சை
உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றியிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நடந்தது.கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான்.  இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜசோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.

மனித உருவங்கள் இந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்காமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன.

முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதாலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது. இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழாகீய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும்.

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்
பருத்தியப்பர் கோயில்
மேலவுளூர்
தஞ்சாவூர்.

மூலவர் :   பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர் 
உற்சவர்:   அம்மன்/தாயார்:  மங்களாம்பிகை,மங்களாம்பிகை 
தல விருட்சம்:   அரசு 
தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம்   
பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்   
புராண பெயர் :  பரிதிநியமம், திருப்பரிதி நியமம் 
ஊர் :   பரிதியப்பர்கோவில்
மாவட்டம் :  தஞ்சாவூர் 
மாநிலம் :  தமிழ்நாடு
பதிகம்   :  திருஞானசம்பந்தர் - 1
நாடு :  கீழ்வேங்கை

தல வரலாறு.
சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.

குதிரைச்சேவகன் குதிரைக்கு புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.

லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் சிபி சக்கரவர்த்தி கோயில் கட்டினான். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம்  சூர்யா குளத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். ஆலயத்திற்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம் பின்பும் உள்ளது. தலமரம் அரசமரம்.

தலச் சிறப்பு:
மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும்.
சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.
அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

திருவிழா:சித்திரை மாதம்-அட்சய திரிதியை,
மாசி மாதம்- ரத சப்தமி,
பங்குனி மாதம்- சூரிய பூஜை 10 நாள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பொது தகவல்:
மிக பழைமையான கோயில் - கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். இரண்டாம் கோபுரம் மூன்று நிலை. முதல் கோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாங் கோபுர வாயிலைக் கடந்து பிரகாரத்தில் வந்தால் விநயாகர், முருகன், கஜலட்சுமி, சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன் நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் படடுகிறார்.

துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் சுயம்ப மூர்த்தமாகத் திகழ்கின்ற மூலவரைத் தரிசிக்கலாம். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம் - அடுத்துச் சூரியன் வழிபடும்  நிலையில் உருவம் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. கோயிலுக்கு தென்புறம் பிடாரி கோயில் உள்ளது. கோயிலருகில் இடும்பன் கோயிலும் உள்ளது.

பிரார்த்தனை:
இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. 
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

பாடியவர்கள்:
சம்பந்தர், அப்பர், சுந்தரர் .

இராஜராஜன் காலத்திய கோயில்கள்.
( புதிதாக கட்டப்பட்டயைகளும், புதுப்பிக்கப்பட்டவைகளும்)

பெரிய கோயில்.  (இராஜராஜேஸ்வரம்) தஞ்சாவூர்
லோகமகா தேவீஸ்வரம்.  திருவையாறு
ஷேத்திரபாலர் கோயில்.  திருவலஞ்சுழி
உத்திரபடீஸ்வரர் கோயில்.  திருச்செங்காட்டங்குடி
திருராமநாததீஸ்வரம் கோயில்.  திருவீரனேஸ்வரம்
அமிர்தகடேஸ்வரர் கோயில்.  திருக்கடையூர்
கதரேரணஸ்வாமி கோயில்.  நாகப்பட்டினம்
பாரிஜாதவனேஸ்வரர் கோயில்.  திருக்கலூர்
திருமலைக்கடம்பூர் கோயில்.  நார்த்தமலை
திருநெடுங்கல்ஸ்நாதசுவாமி கோயில்.  திருநெடுங்கலம்
சாம்வேதீஸ்வரர் கோயில்.  திருமங்கலம்
குந்தன்குழி மகாதேவர் கோயில்.  மதகடிப்பட்டு
பூமீஸ்வரர் கோயில்.  மரக்காணம்
கயிலாயத்துப் பரமேஸ்வரன் கோயில்.  உலகாபுரம்
அரிஞ்சகை விண்ணகர் கோயில்.  உலகாபுரம்
சுந்தரசோழப் பெரும்பள்ளி கோயில்.  உலகாபுரம்
மகாசாஸ்தா கோயில். அகரம்
திருவாலந்துரைஉடைய பரமசிவன் கோயில்.  ஏமப்பேரூர்
பிரம்மபுரீஸ்வரர் கோயில்.  பிரம்மதேசம்
ராஜராஜ விண்ணகரம்.  எண்ணாயிரம்
திருஇராமேஸ்வரம் கோயில்.  ஈசாலம்
ரவுகுல மாணிக்கேஸ்வரர் கோயில்.   தாதாபுரம்
குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில்.  தாதாபுரம்
குந்தவை ஜீனாலயம்.  தாதாபுரம்
சிவலோகமுடைய பரமேஸ்வரம் கோயில்.  திருவக்கரை
வெங்கடேச பெருமாள் கோயில்.   திருமுக்கூடல்
ராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோயில்.  சிவபுரம்
திருவீரவிண்ணகர் ஆழ்வார் கோயில். ஆர்ப்பாக்கம்
முருகேஸ்வர சுவாமி கோயில்.  மாம்பாக்கம்
ராஜராஜேஸ்வரம்.  சோழபுரம்
ஜெயங்கொண்ட சோழீஸ்வரம்.  செங்குன்றம்
குந்தவை ஜீனாலயம்.   திருமலை
ராஜேந்திர சிம்மேஸ்வரம்.  மேல்பாடி
சோமீஸ்வரம்.  மேல்பாடி
பள்ளிகொண்டார் கோயில்.  (சோமேஸ்வரர் கோயில்) ஆற்றூர்
நெல்லையப்பர் கோயில்.   திருநெல்வேலி
கைலாசபதி கோயில். கங்கைகொண்டான்
நிகரிலிச் சோழ விண்ணகரம்.  சேரமாதேவி
கைலாசமுடையார் கோயில்.  சேரமாதேவி
திரு இராமேஸ்வரம் கோயில்.  திருவாலீஸ்வரம்
ஸோழீஸ்வரர் கோயில்.  நாகர்கோயில்
வானவன் மாதேவீஸ்வரம். (பள்ளிகொண்டா கோயில்) பொலன்ருவ (இலங்கை)
உத்தமசோழீஸ்வரம்.   பொலன்ருவா
அருள்மொழிதேவீஸ்வரம்.    மலூர்பட்னா
ஜெயங்கொண்ட சோழ விண்ணகர்.    மலூர்பட்னா
ராஜேந்திர சிம்மேஸ்வரம் (அப்பரமேய சுவாமி கோயில்)   மாலூர்
இராஜராஜேஸ்வரம்.   மாந்தோட்டம்
சொர்ணபுரீஸ்வரர் கோயில்.  அழாத்திரிபுத்தூர்
சூளாமணிவர்ம விகாரம்.   நாகப்பட்டினம்
கண்ணாயிநாதேஸ்வரன் கோயில்.    திருக்காரவாசல்

உலக மகாதேவி
பெரிய கோயிலைக் கட்டி முடிப்பதற்கு முன்னாலேயே  ராஜராஜனின் பட்டத்தரசியாரான உலக மகாதேவி (லோகமாதேவி, ஒலோகமாதேவி) திருவையாறு ஐயாறப்பர்  கோயில் வளாகத்தில் ஒரு கோயில் கட்டுகிறார். திருவையாற்று சுற்றுக் கோயில்களில் ஒன்றான வடகயிலாயம் அல்லது உத்தர கயிலாயம் என்று அழைக்கப்படுகிற உலோகமாதீச்சரத்தைக் கட்டி முடித்திருக்கிறார். கோயிலின் பெரிய பிரகாரத்தின் வடப்பக்கத்தில் இக்கோயில் காணப்படுகிறது. அக்கோயிலில் ஒரு கல்வெட்டுப் பொறிக்கிறார்:

“ ஸ்ரீராஜராஜ தேவர் தம் பிராட்டியர் தந்தி சக்தி விடங்கியராற  ஸ்ரீ ஒலோகமாதேவியார் வடகரை ராஜேந்திர சிம்ஹ வளநாட்டுப் பொய்கை நாட்டு திருவையாற்றுப்பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதீச்சரம்”

இக்கல்வெட்டில் இது தாம் கட்டிய கோயில் என்று தெரிவிக்கிறார். தரும காரியங்களைப் பெண்கள் தாமே விரும்பிச் செய்தாலும் அவற்றைத் தம் வீட்டு ஆடவர் பெயராலேயே விளங்கச் செய்வது வழக்கம். தம் பெயரால் இக்கோயிலை விளங்கச் செய்யும் சுதந்திரம் ஒலோக மாதேவிக்கு இருந்திருக்கிறது. எத்துணை ஆண்களுக்கு, குறிப்பாய் அரசர்களுக்கு இத்தகைய பெரிய மனம் இருக்கும்?!

 ராஜராஜன் தஞ்சையிலே சிவத் தொண்டிற்காக 400 ஆடற்பெண்களைக் குடியமர்த்திய செய்தியை உலகம் அறியும். லோகமாதேவி, அதற்கு முன்னாலேயே ஒலோகமாதீச்சிரத்தில் 32 ஆடல் மகளிரையும் நட்டுவர், மோர்வியன் ஆகியோரையும் நியமித்துவிட்டார். பக்க இசைக்காக வஸ்கியம், வீணை, உடுக்கை, உவச்சு- தலைப்பறை, மத்தளம், தாளம், கரடிகை, கண்டை, திமியை, கைம்மணி ஆகியவற்றைக் கையாளும் கருவியாளர்களையும் நியமித்துவிட்டார். அவர்களுக்கான ஊதியத்தையும் இவற்றோடு ஒரு கல்வெட்டிலே பதிவுசெய்து விட்டார். இங்கு பணியிலமர்த்தப்பட்ட ஆடல் மகளிர் தலைக்கோலி பட்டம் அளிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மன்னர், பின்னர் பெரிய கோயிலில் ஆடல் தொண்டு செய்ய ஆடல் மகளிரைப் பணி அமர்த்தி அவர்களது பட்டியலை ஒரு கல்வெட்டில் வெட்டி வைக்கிறார். இப்பட்டியல் லோகமாதீச்சரத்திலிருந்து வந்த பெண்ணிலிருந்தே தொடங்குகிறது:

“தெற்குத் தளிச்சேரி தென் சிறகு தலைவீடு திருவையாறு லோகமாதீச்சரத்து நக்கன் சேர மங்கை”.
அவர்கள் குடியமர்த்தப்பட்ட வீட்டின் கதவு இலக்கம், தெருப் பெயர், எந்த வரிசை, அவர் ஊர் அங்கு எக்கோயிலைச் சேர்ந்தவர், அவர் பெயர், அவளுடைய ஊதியம் ஆகிய அத்துணை விவரங்களும் தருகிறார். இதோடு, இவர்கள் எங்கிருந்து ஊதியம் பெற வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். அவர்கள் கோயில் பண்டாரத்திலிருந்தே ஊதியம் பெறுவார்கள். சோழ நாட்டுக் கருவூலத்திலிருந்து பெற வேண்டுவது இல்லை. எந்த அரச அலுவலரின் கீழும் அவர்கள் வரவில்லை. இறைவன் பணிக்காக அமர்த்தப்பட்டவர்கள், இறைவனுக்கே உளமாரப் பணிபுரிவார்கள். பெருவுடையாரின் கீழே பணிபுரிவார்கள்.

அறிவியலில் நம் குல மன்னர்கள் அமைத்த திருக்கோயில்கள்
காவிரிக்கரையில் தான் கோயில்கள் அதிகம், சோழர் ஆட்சியில் கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.அப்பர், சம்பந்தர் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 274ல், 190 காவிரிக்கரயில் உள்ளன. ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசங்களில் 40 காவிரிக்கரையில் இருக்கிறது.

திருவாரூர்
தொல்பழங்காலந்தொட்டு சிறந்து விளங்கும் தொன்மைப் பதியாகும் திருவாரூர்.காவிரிக்கரையின் கவின்மிகு ஊராகவும் சோழ மண்டலத்தின் தலைநகராகவும் அமைந்த ஊர் திருவாரூராகும்.

விண்மறந்து மண்மணந்த
மணவாளன் மகிழும் பேரூர்

வந்ததுதெரியாது வாழ்வதுதெரிகிறது,அந்த
வழிகளைப் புரியவைக்கும் வள்ளல் ஆரூர்

பிறக்கமுக்தி - பிறவாதார்க்கும் இந்தப்
பிறப்பிலே கர்ப்பவாசம் தந்துய்க்கும் சீரூர்

மூலாதாரக் கோயிலிதில்
மூன்றுலகும் வந்தடங்கும் மூதூர்

தெருவீதியில் திருவடிமணக்கும் தெய்வத்
தேரழகுத் திருவாரூர்.

திசை புகழும் திருவாரூர்த் தேரழகு.

காவிரியாற்றின் தென்கரையில் 87 ஆவது தலமாகும் திருவாரூர். பிரமன் கோயில் இல்லை என்ற மரபும் மாறி பிரமனுக்கும் கோயிலுண்டு திருவாரூரில். மா மன்னன் மனுநீதிச் சோழன் ஆண்ட தலைநகர் என்பதும், முசுக்குந்த சக்கரவர்த்தியின் மா நகரமும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய கோ நகரும் இதுவேயாகும்.

சோழன் கண்டராதித்தன் மனைவியும் 6 தலைமுறை வரை சோழ மன்னர்களை அரியனையில் அமரக்கண்ட கோப்பெருந்தேவி செம்பியன் மாதேவியார் சிவநேயச் செல்வம் சிறக்க எடுப்பித்த இறை நிலையங்களில் திருவாரூர் திருக்கோயிலை கற்றளியாக்கி பெருமை படைதவர். இக் கோயிலை முன்மாதிரியாகக் கொன்டே முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை தாபித்தான்.

பூங்கோயிலில் முதற்பிரகாரத்தில் சோழமகாராஜா உருவமும்,அழகிய சோழன் எடுத்த கோபுரமும், அழகிய சோழ விநாயகர் என்ற நாமமும், சோழன் ஒருவன் ஐங்கலப்பொற்காசு கொண்டு சமைத்த ஐங்கலப் பொற்காசு விநாயகரும், தென்னன் திருவாசலும், தியாகருக்கு இரத்தின சிங்காதனமிருப்பதும், எங்குமில்லாத வகையில் தியாகரின் பீடத்தில் வலமும் இடமுமாக இரண்டுவாளாயுதம் இருப்ப்தும், இராஜ நாரயணன் கட்டிய மண்டபமும்,கலிங்க வெற்றி கண்ட கருணாகரத் தொண்டைமான் வடக்குக் கோபுரத்திருப்பணி செய்துள்ளதும்,பொன்பரப்பிய வீதி என்ற பெயர் இருப்பதும்,செம்பியர் வாழ்பதி என்று சேக்கிழார் செப்பியதும், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், இராசாதித்தன்,முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகிய சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் இத்திருத்தலத்தில் இருப்பதும் சோழர்கள் இவ்வூரோடு கொண்ட பிரிக்கமுடியாத தொடர்புகளை வரலாற்றுச் சான்றுகளாக்கி உள்ளன.

கடாரம் கொண்ட இராசேந்திரன் அவ்வெற்றியின் பெயரால் உருவாக்கிய சில ஊர்களும் இங்குண்டு. ஆரூரின் கிழக்கே உள்ள கிடாரங்கொண்டான் இதன் சாட்சியாகும். கமலாலயத் தெங்கரயில் சோழ அரண்மனையின் ஒருபகுதி சிதைந்த நிலையில் உள்ளது. இதனை அரண்மனை கோடி என்று இன்றும் கூறுகிறனர். இராசராசன் திருவீதி, குலோத்துங்கன் திருவீதி என்று இருபத்தொருவீதிகள் திருக்கோயிலை மையமாக வைத்து அமைந்துள்ளன.

கல்வெட்டுகள்
முதலாம் இராசராசனின் மூன்று கல்வெட்டுகளும், முதலாம் இராசேந்திரனின் இரண்டும், இராசாதித்தனின் ஒன்றும், முதற்குலோத்துங்கனின் ஒன்றும், விக்கிரம சோழனுடையது ஒன்றும், இரண்டாம் குலோத்துங்கனுக்குரியவை இரண்டும், மூன்றாம் இராசேந்திரனுக்குரியது ஒன்றும், இரண்டாம் இராசராசனுக்குரியது ஒன்றும் பாண்டிய மன்னர்கள், அச்சுத்ப்ப நாயக்கன், சரபோஜி மன்னன் முதலியோரின் கல்வெட்டுகளுமாய் கணக்கெடுத்தவை மட்டும் 63 கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. 31-05-1123 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட விக்கரம சோழனின் கல்வெட்டில் மனுநீதிச்சோனின் தலைநகர் ஆரூர் என்று குறித்துள்ளான்

திருவாரூர் ஸ்ரீ தியாகராஸ்வாமி ஆலயம்.
முதலாம் ஆதித்த சோழனால் கி.பி 9ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோயில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜயநகர, மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. செங்கல் கட்டுமானத்துடன் இருந்த இக் கோயில் சோழப் பேராசி செம்பியன் மாதேவியால் கற்றாளியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.கோயிலின் கிழக்குப் பகுதியில் மனுநீதிச்சோழனின் கதையை விளக்கும் சிற்பமும் அமைந்துள்ளது. திருக்கோயிலின் பரப்பளவு 20 ஏக்கர். கமலாயத் தெப்பக்குளம் 25 ஏக்கராகும்.
பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்கு உரிய தலமாக திருவாரூர் ஸ்ரீ தியாகராஸ்வாமி ஆலயம் திகழ்கிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் கோயில் குறித்து அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டார் என்று அப்பர் பெருமான் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். தேவாரப் பதிகங்கள் 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவை பாடப் பெற்றது திருவாரூர். திருமந்திரத்தில் அஜபா மந்திரம் என்ற பகுதியிலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டில் காடவர்கோன் நாயன்மாராலும், 11ம் திருமுறையில் சேரமான் பெருமான் நம்பியாண்டார் நம்பியாலும்,சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல்களாலும்,அருனகிரிநாதரின் 11படல்களாலும், ராமலிங்க அடிகளின் திருவருட்பாவிலும் தனி இடம் பெற்ற தலம் திருவாரூர். அறுபத்துமூவரில் ஒருவரான நமிநந்தியடிகள், எண்ணெய்க்குப் பதிலாகக் குளத்து நீரை கொண்டு இறைவனுக்கு விளக்கு எரித்த திருத்தலம் இது. பாடல் பெற்ற 275 தலங்களில் உள்ள 68 வகையான தல விருட்சங்களும் இங்குள்ள நந்தவனத்தில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

திருவாரூர் ஈசனை ஆரூர் பெருமான், பவனி விடங்கர், அசைந்தாடும் பெருமான்,அடிக்காயிரம் பொன்னளிப்பவன், ரத்தின சிம்மாசனதிபதி, கருணாகரத் தொண்டைமான், கனகமணித் தியாகர், தியாக வினோதர், மணித்தண்டில் அசைந்தாடும் பெருமான்,செவ்வந்தித்தோடழகர்,செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத்தியாகர்,தேவசிந்தாமணி, தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர்,கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன் என்றும் அழைப்பதுண்டு.

திருவாரூர் ஈசனை வழிபட்டவர்களில், திருமால்,திருமகள், பிரம்மா, இந்திரன்,விஸ்வாமித்திரர்,அகத்தியர், மகாபலி, துர்வாசர்,மேனகை, முசுகுந்தன், தசரதன், ராமன், லவகுசர், யட்சர், சிவகணங்கள், சபந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்,தண்டியடிகள், சோமாசி மாறர், செம்பியன் மாதேவி, குமரகுருபரர் முதலியோர் அடங்குவர்.

திருவாரூர் ஈசனை
ஆரூர் பெருமான்,
பவனி விடங்கர்,
அசைந்தாடும் பெருமான்,
அடிக்காயிரம் பொன்னளிப்பவன்,
ரத்தின சிம்மாசனதிபதி,
கருணாகரத் தொண்டைமான்,
கனகமணித் தியாகர்,
தியாக வினோதர்,
மணித்தண்டில் அசைந்தாடும் பெருமான்,
செவ்வந்தித்தோடழகர்,
செம்பொற் சிம்மாசனாதிபதி,
இருந்தாடழகர்,
கம்பிக் காதழகர்,
வசந்த வைபோகத்தியாகர்,
தேவசிந்தாமணி,
தியாக சிந்தாமணி,
அந்திக் காப்பழகர்,
தியாகப் பெருமான்,
செம்பொன் தியாகர்,
கிண்கிணிக்காலழகர்,
தேவரகண்டன் என்றும் அழைப்பதுண்டு.

திருவாரூர் ஈசனை வழிபட்டவர்களில், திருமால்,திருமகள், பிரம்மா, இந்திரன்,விஸ்வாமித்திரர்,அகத்தியர், மகாபலி, துர்வாசர்,மேனகை, முசுகுந்தன், தசரதன், ராமன், லவகுசர், யட்சர், சிவகணங்கள், சபந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்,தண்டியடிகள், சோமாசி மாறர், செம்பியன் மாதேவி, குமரகுருபரர் முதலியோர் அடங்குவர்.

அரியவை நிறைந்த ஆரூர்

திருவாரூர் விடங்கர் தனிச்சிறப்பு
முசுகுந்த சோழ மன்னன் இந்திரனிடமிருந்து ஏழு தியாகராசர் திருவுருவங்களை பெற்று வந்தான் என்றும் அவை உளி கொண்டு செதுக்கப்படாதவையாகும் அதனால் அவை விடங்கர் எனப்பட்டது. டங்கர் என்றால் உளியால் செய்யப்பட்டது என்றாகும். இந்த ஏழு தியாகேசர்களையும் முசுகுந்த சோழ சக்கரவர்த்தி ஏழு திருப்பதிகளில் நிலைபெற செய்தான். இவ் ஏழு தலங்களும் சப்தவிடங்கத் தலங்களாகும்.
திரு நள்ளாற்றில் நகவிடங்கர் என்றும்
திரு நாகைக்காரோணத்தில் சுந்தரவிடங்கர் என்றும்
திரு காறாயிலில் ஆதிவிடங்கர் என்றும்
திரு கோளிலில் (திரு குவளை)அவனிவிடங்கர் என்றும்
திரு வாய்மூரில் நீலவிடங்கர் என்றும்
திரு மறைக்காட்டில் புவனிவிடங்கர் என்றும்
திரு ஆரூறில் வீதிவுடங்கர் என்றும் தியாகராசர் பெயர் கொண்டுள்ளார்.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைகாடு காராயில் - பேரான
ஒத்ததிரு வாய்மூர் உகந்ததிருக் கோளிலி
சத்தவிடங்கத் தலம்
என்ற தொகைச் செய்யுளால் இதனையறியலாம்

தஞ்சையையாண்ட முதலாம் இராசராசன் புத்த விகாரைக்காக ஆரூர்க்கருகில் ஆனைமங்கலம் என்ற ஊரையே தானமாகக் கொடுத்தான் என்று செப்பேடுகள் செப்புகின்றன. இந்த விகாரை இருந்த இடத்தில் தான் இன்று நீதி மன்றங்கள் உள்ளன. இங்கு புதை பொருளாய் எடுத்த புத்தர் சிலைகள் சென்னை அருங்காட்சியத்தில் வைத்துள்ளார்கள்.

கல்வெட்டில் கண்ட சில செய்திகள்
செம்பியன் மாதேவியார் அரநெறிக் கோயில் திருப்பணியால் செங்கல்லால் கட்டியிருந்த கோயிலை கருங்கல் கோயிலாக்கினார்.
முதலாம் இராசராசன் வீதிவிடங்கருக்கு பொற்பல்லக்குச் செய்தளித்தான்
முதற் குலோத்துங்கனை வீதிவிடங்கர் நம்தோழன் திரிபுவன வீரதேவன் என்று அசரீரிவாக்கால் மொழிந்தார்
சித்தரசன் மகனான நாகராசன் மேற்குக் கோபுரத்தை கட்டினான்
சுந்தரரின் தாயார் இசை ஞானியார் ஆரூர் சிவாச்சாரியரி மகள் என்ற உண்மை வெளிப்படுவது
விக்கிரமச் சோழன் கல்வெட்டு ஒன்றால் மனுநீதிச் சோழன் மந்திரி மகனுக்கு தந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டதாகிய செய்தி தெரிகிறது. இம் மாளிகை 120 குழி (16 880 சதுர அடி) பரப்பினை கொண்டது என்றும் அறிய முடிகிறது.

செப்பேட்டில் ஒரு வரலாறு
தில்லைச் செப்பேடுகள் திருவாரூர்ச் செபேடாகி வழங்குகின்றன. தில்லை அம்பலவானனின் செய்தி ஒன்றும் இதிலுண்டு. 24.12.1648 முதல் 14.11.1686 வரை (37 ஆண்டுகள் 10 திங்கள் 20 நாட்கள்) தில்லை நடராஜ பெருமான் தில்லை திருசிற்றம்பலத்தில் இல்லை. குடுமியான் மலை,மதுரை முதலிய ஊர்ட்தோறும் மறைத்து வைக்கப்பட்டு பிறகே தில்லைக்குத் திரும்பியுள்ளார். இதன் காரணம் பீஜ்ப்பூர் சுல்தானின் படையெடுப்பும் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் சைவத்தை விட வைணவத்தில் ஆர்வம் காட்டியதுமாகும்.

செப்பேட்டில் இருக்கும் செய்யுள்
விடையில்வந்த செம்பொன் அம்பலத்தான் அந்த
வெள்ளியம் பலத்திலே விரும்பி சென்ற
நடையில் வந்த வருஷமோ சர்வ தாரி
நாயமார் குழி இருபத்து ஐந்து நாளாம்
கடையில்வந்த வருஷங்கார்த் திகைஈரேழு
கதிர்வாரம் திரும்பவந்து கலந்த நாளாம்.
இடையில்வந்த வருஷம் எண்ணிப்பார்க்கில் முப்பத்து
எழுபத்து மாதம்நாள் இருபதாமே

ஆரூர் அருகில் அரிய தலங்கள்
அகத்தியான்பள்ளி
அம்பர் மாகாளம்
ஆலங்குடியாகிய திரு இரும்பூளை
திருக்களர்
கன்றாப்பூர்
காறாயில்
கீழ்வேளுர்
குடவாயில்
கைச்சினமாகிய கச்சனம்
கோட்டூர்
கோளிலி
சிக்கல்
செங்காட்டங்குடி
தேவூர்
நள்ளாறு
நன்னிலம்
நாகை
நெல்லிக்கா
திருப்புகலூர்
வர்த்தமா வீஸ்வரம்
மருகல்
மறைக்காடு
திருவாஞ்சியம்
வலிவலம்
வாய்மூர்
விற்குடி
வெண்ணியூர்

ஆரூர் தலப்பாடல்கள் பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருத்தொண்டத் தொகை
பெரியபுராணம்
தருமை சிவஞான தேசிகர்
அருணகிரி நாதர்
திருவிசைப்பா
முரகுருபரர்
திருவாரூர் உலா
திருப்பல்லாண்டு
கமலாம்பாள் துதி

ஏகௌரி அம்மன் கோயில். வல்லம்
தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் 12 வது கிலோ மீட்டரில் வல்லம், இங்கிருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.

சோழர்களால் ஆளப்பட்டு, தொல்காப்பியத்தில் பதியப்பட்டு பிற்காலத்தில் நாயக்க மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என ஆயிரமாயிரம் வருடங்களின் வரலாற்றுப் புகழை உள்ளடக்கியது தஞ்சையை அடுத்துள்ள வல்லம் எனும் சரித்திர நகரம். முற்கால சோழ மன்னன் வல்லபசோழன் வல்லபபுரியை தோற்றுவித்து ஆட்சி புரிந்தான் என்பது பண்டைய கல்வெட்டு செய்தி. அந்த வல்லபபுரி தான் இன்றைய வல்லம் என்று அழைக்கப்ப்டுகிறது. இங்கே தஞ்சை பெரிய கோயிலை விட மிகப் பழைமை ஆலயம் ஒன்று உண்டு. சோழ மன்னர்களின் காவல் தெய்வமாக விளங்கிய அன்னையின் ஆலயமே இது. கரிகாலன் காலத்தில் கரிகால்சோழ மாகாளி, முதற்பராந்தகன் காலத்தில் வல்லத்து பட்டராகி, முதலாம் ராஜராஜன் காலத்தில் வல்லத்து காளா பிடாரிகை தலைபூசல் நங்கை, நாயக்கர் காலத்தில் வல்லத்துக்காளி என்றும் தற்காலத்தில் ஏகௌரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். மாமரங்கள் நிறைந்த வனமான இப்பகுதியை தஞ்சாசுரன் என்னும் மன்னன் ஆண்டு வந்ததாவும்,இவன் மறைவுக்குப்பின் தஞ்சன் ஊர் என்று அழைக்கப்பட்டு இப்போது தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது.

சிதம்பரம்
பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில்40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீர்காழியில் பிரமபுரீஸ்வரர்,சட்டநாதர், கோனியம்மன் திருநிலை நாயகி கோவில்கள் உள்ளன.
உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி.
பொன்னம்பலத்தில் நமச்சிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்படுள்ள தங்க ஓடுகள் 21 ஆயிரத்து 600. மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையுமிதுவே!
இங்கு அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளின் எண்ணிக்கை 72 ஆயிரம், இது மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையாகும்.
கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலில் உள்ள 9 துவாரங்களை குறிக்கிறது.
5 எழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் 5 படிகள் உள்ளன.
64 ஆய கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன.
96 தத்துவங்களை குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும்
4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 5 பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நன்றி தினமலர் சர்வதேச பதிப்பு 8/12/2010

பிள்ளையார் பட்டி
தமிழகத்தின் முதல் குடவறைக்கோவில் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலாகும். இக் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ளது. இந்தகோவிலொரு குன்றைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையாரின் உருவங்களில் இது காலத்தால் முற்பட்டதாகும். மலை நெற்றியில் 6 அடிக்கு மேல் உயரத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கை சிறிய லிங்கத்தை ஏந்திய நிலையில் அமைந்துள்ளது. தும்பிக்கை வலம்புரியாக வளைந்து இருப்பது இதன் சிறப்பாகும். அனைத்து நவக்கிரகங்களும் அமர்ந்த நிலயிலேயே உள்ளன. கோவிலின் தென்புறத்தில் கிழக்கு மேற்காக
நீண்டு கிடக்கும் குன்றின் வடமுகமாக குடைந்து செதுக்கி கோவிலை வடிவமைத்துள்ளனர். சிவனை வடக்கு நோக்கி அமர்ந்து பிள்ளையார் பூஜித்ததற்கான ஐதீகம் கொண்டது இக் கோயில்.

தஞ்சை பெரிய கோயில்
பெரிய கோயிலருகே அமைந்துள்ளது சிவகங்கை பூங்கா. ராஜராஜ சோழன் பிரகதீஸ்வரர் ஆலய பூசை மலர்களுக்காக அமைத்த பூங்கா இது. ஆயிரமாண்டுகளையும் கடந்து நிற்கிறது. இங்கு அமைந்துள்ள குளத்திற்கு காவிரி புது ஆற்றில் இருந்து பாதாள வாய்க்கால்மூலம் தண்ணீர் வருகிறது. தண்ணீரை பூமிக்குள் இருக்கும் சுரங்க வாய்க்கால் வழியாக வெளியேற்றவும் வசதி உள்ளது.

நவக்கிரக ஆலயங்கள்
சூரியனார் கோவில் (ஞாயிறு)
சூரியனார் கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆடுதுரை சாலையில் ஆடுதுரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு மும்மூர்த்தியாக சூரியபகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் உள்ளனர். சூரிய பகவானுடன் 8 கிரகங்களும் தனித்தனி கோவில்களாக அவர்களுக்கு உரிய திசைகளில் அமைந்துள்ளன.

திங்களூர் சந்திரன் கோயில் (திங்கள்)
தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு அருகில் திங்களூரில் சந்திரன் கோயில் உள்ளது. பெரியநாயகி சமேத கைலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார்
திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள்

வைதீஸ்வரன் கோயில். (செவ்வாய்)
நாகை மாவட்டம் மயிலாடுதுரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது வைதீஸ்வரன் கோயில். அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான் இங்கு வீற்றிருக்கிறார்.இறந்தாலும்,பிறந்தாலும் போக மோட்சங்கள் கொடுக்கும் பெருமை உடையது இத்தலம்.வைத்தியநாதசாமியும், தையல்நாயகியம்மனும் இங்கு வீற்று இருக்கின்றனர். இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டை நோய்களை நீக்கும் என்பது ஐதீகம்.

திருவெங்காடு புதன் பகவான் (புதன்)
நாகை மாவட்டம் சீர்காழி பூம்புகார் சாலையில் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் இறவனாகவும்,பிரம்ம வித்தியாம்பிகையை இறைவியாகவும் கொண்ட இக்கோயில் காசிக்கு சமமாக கருதப்படுகிறது.

ஆலங்குடி குரு பரிகார தலம் (வியாழன்)
திருவாரூர் மாவட்டம் நீடாமங்களம் அருகே குடந்தை மன்னார்குடி சாலையிலமைந்துள்ளது ஆலங்குடி. இங்கு குரு பகவான் வீற்று இருக்கிறார். குரு பார்க்க கோடிநன்மை உண்டாம்.

கஞ்சனூர் சுக்கிரன் தலம் (வெள்ளி)
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கல்லணை பூம்புகார் சாலயில் 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது கஞ்சனூர். வெள்ளி நிறத்தில் சுக்கிரபகவான் இங்கு காட்சி அளிக்கிறார்

திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயம் (சனி)
புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது திருநள்ளாறு. கோவில்மூலவராக நள்ளாற்றீசுவரர் லிங்கவடிவில் வீற்றிருக்கிறார். கோவிலின் பலிபீடம் சற்று விலகி நிற்பது இங்கு மட்டும் தான் என்பது தனிச்சிறப்பு.

திருநாகேசுவரம் ராகு பகவான்
தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரத்தில் ராகுபவான் கோவில் கொண்டுள்ளார். பால் அபிசேகம் செய்யும்போது திருமேனி நீல நிறமாக்

மார்க்க பந்தீஸ்வரர். திருவிரிஞ்சிபுரம். வேலூர்.
முடிசாய்ந்த மகாலிங்கமாக ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் காட்சி அளிக்கும் சிவன்
சிவ தலங்களில் சிறத்தவை 1008. அதில் மேலானவை 108, அதிலும் விஷேமானவை 18. இந்த 18ல் உன்னதமானது திரு விருஞ்சை சிவத்தலம்.
இத் திருக்கோயில் பெங்களூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு இராசராச சோழன், பல்லவமன்னர்கள்,விஜயநகர பேரரசர்கள் திருப்பணிகள் செய்துள்ளதாக இங்குள்ள 18 கல்வெட்டுகள் கூறுகின்றன. இத் திருத்தலத்திற்கு
கவுரிபுரம், விரிஞ்சைமூதூர்,விரிஞ்சையம்பதி, திருவிரிஞ்சிபுரம், விஷ்ணுபுரம், கரபுரம், பிரம்மபுரம் என பன்முக பெயர்கள் உண்டு. த்ற்போது விரிஞ்சிபுரமென்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள ஒரு வரலாற்றுச் சின்னம் அரைவட்டவடிவில் உள்ள கல் கடிகாரம். இக்கடிகாரத்தின் மேல் ஒரு குச்சியை வைத்தால் அப்பொழுதைய நேரத்தை சரியாகக்காட்டும். 1008 லிங்கங்களை ஒருருவில் கொண்ட லிங்கம் ஒன்றும் இவ்வாலயத்தில் உள்ளது. இத் தலத்தை பற்றி அப்பர்,சுந்தரர் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுளார்கள். அருணகிரிநாதரும், ஆதிசங்கரரும் இத்தலத்திற்கு வந்து பூசனை செய்துள்ளனர்.

சாலை மகாதேவர். வலியசால. திருவனந்தபுரம்
நந்தியை வணங்கும் சாலை மகாதேவர்
இவ்வாலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. தமிழக சிற்பக்கலையின் நுணுக்கங்களை இக்கோவிலில் பல இடங்களில் காணமுடிகிறது. ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட கொடிய நாகமும், வலைந்திருக்கும் அதன் வாலை இருக்கிப்பிடித்திருக்கும் கல் சங்கிலியும் சிற்பக்கலையின் அற்புதம். கலிங்கத்துப்பரணியில் காந்தளூர் போர் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. சேரமன்னன் ஒருபக்கமாகவும் சோழனும் பாண்டியனும் இன்னொரு பக்கமாகவும் நின்ற போரில் மூன்று அரசர்களும் இறந்து போனார்கள். கலிங்கத்துப்பரணி குறிப்பிடும் காந்தலூர் சாலை தான் இன்று சாலை, வலியசாலை,கிள்ளிபாலம் தொடங்கி சங்குமுகம் கடற்கரை வரையுள்ள பகுதியாகும். பாரத நாட்டில் பிரசித்தமாயிருந்த நாளந்தா. தட்சசீலம் போன்று காந்தளூர் சாலை வித்யாபீடமும் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மிகவும் பிரசித்தமாக இருந்தது. பிரதான மூர்த்தி சிவனாக என்றாலும் மும்மூர்த்திக்ளும் தனித்தனியாகஇருந்து அருள் பாலிக்கின்றனர்.


சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானவர் திருமலைக்கொழுந்தர்
மலைக்கோட்டை
திருச்சி.
குளம்: காவிரி, சிவகங்கை

பதிகங்கள்: நன்றுடை -1 -98 திருஞானசம்பந்தர்
மட்டுவார்..செல்வரே -5 -85 திருநாவுக்கரசர்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்று. இரயில், பேருந்து வசதிகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்திடங்களிலிருந்தும் செல்லலாம். இத்தலம் மிக விளக்க மானது. மலைக்காட்சியின் முதலிடமாக உள்ளது. காவிரிக்குத் தென் கரையில் அமைந்தது. கலாசாலைகளும், கல்லூரிகளும் நிறைந்தது. எல்லாவிதமான அறிவுத்துறையிலும் வளர்ச்சிக்குரிய இடமாக இருக்கிறது.

சரித்திர காலத்திலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தே விளங்கிவருவது. சோழர் தலைநகரங்களில் ஒன்றாகிய உறையூரைத் தன்னகத்துக்கொண்டு விளங்குவது.

பெயர்க்காரணம்:

திரிசிராப்பள்ளி என்பதற்கு, திரிசிரன் என்னும் அரக்கன் பூசித்துப் பேறுபெற்றதனால், இப்பெயர்பெற்றது என்று புராணங் கூறும். இம்மலைக்கே மூன்று சிகரங்கள் உள்ளன. அதனால் திரிசிராப் பள்ளியெனப் பெற்றது என்று செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தப் பொருள்களில் வழங்கிய திருசிரப்பள்ளி திரிசிராப்பள்ளி ஆதற்கு என்ன விதியுண்டு என்பதை அறிஞர்கள் ஆய்ந்து முடிவுகாண்பார்களாக.

நமது சமயாசாரியப் பெருந்தகையார்கள் `சிராப்பள்ளிக் குன்றுடையானை`, `சிராப்பள்ளிச் செல்வன்` `சிரகிரி` எனவே வழங்குகின்றார்கள். திரிசிரா என்பதில் திரி என்பது மூன்று என்ற பொருள் குறித்த சொல்லாயின் அதனை விடுத்துச் சிராப்பள்ளி என்று வழங்கியிரார்கள். ஆதலால் அவர்கள் காலத்தில் திரு என்பதை அடைமொழியாகக் கொண்டதே சிராப்பள்ளி என்பதற்கு வேறு பொருள் இருந்திருக்கவேண்டும் என்பதனைக் கருத இடந்தருகின்றது.

``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.

ஊர்ப்பெயரும்-கோயிற் பெயரும்.
ஊர்ப்பெயர் சிற்றம்பர். கோயிற்பெயர் சிராப்பள்ளி. இதனை நன்கு விளக்குவது, இராஜராஜன் Iஆட்சியாண்டு 16 இல் வெட்டப் பெற்ற விக்கிரமசிங்க மூவேந்த வேளான் விளத்தூர் நாட்டில் நிலம் வாங்கி அதனைஉறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தான் என்ற கல்வெட்டுப் பகுதியாகும். வரகுண பாண்டியன் II ஆம் ஆண்டுக் கல்வெட்டும் இதனையே குறிக்கிறது. இன்னும் சில பகுதிகளிலும் சிற்றம்பர், சிற்றம்பர்நகர், சிற்றம்பர் பதியென இத்தலம் வழங்கப்படுகின்றது. ஆதலால் ஊர் சிற்றம்பர் எனவும், கோயில் சிராப்பள்ளி எனவும் வழங்கிவந்தமை தெளிவு.

மூர்த்தி
இறைவன்பெயர் தாயுமானவர் திருமலைக்கொழுந்தர், செவ்வந்திநாதர் எனவும், அம்மையின்பெயர் மட்டுவார்குழலம்மை எனவும் வழங்கும். வடமொழிவாணர் மாதுருபூதேசுவரர், சுகந்தகுந்தளாம்பிகையெனக் கூறுவர். கல்வெட்டுக்களில் இறைவன் திருமலைப் பெருமான் அடிகள் என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றனர். உச்சிப் பிள்ளையார், மாணிக்கவிநாயகர் ஆலயங்களும், மௌனமடம் முருகன் கோயிலும் மிகச்சிறப்புடையன.

தீர்த்தங்கள்.
காவிரி,சிவகங்கை, நன்றுடையான், தீயதில்லான், பிரமதீர்த் தம் முதலியன உள்ளன. அவற்றுள் `நன்றுடையான்` `தீயதில்லான்` என்ற தீர்த்தங்கள் ஞானசம்பந்தர் தெய்வவாக்கிலும் திகழ்வன. இவையன்றித் தெப்பக்குளம் ஒன்றுண்டு. அது 16 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட விசுவநாத நாயகர் வெட்டுவித்தது.

இது மேருவின் சிகரங்களில் ஒன்று. ஆதிசேடனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த சொற்போட்டியால் பிரிந்த சிகரங்களில், ஒன்று திருக்காளத்தி, மற்றொன்று திரிகோணமலை, மற்றொன்று திரிசிராமலை என்று புராணம் கூறும். கருவுயிர்க்க வருந்திய இரத்தினாவதியின் நிறைந்த அன்பிற்கிரங்கிப் பெருமானே தாயாக எழுந்தருளிப் பணிபல புரிந்து பாதுகாத்தார். ஆதலால் தாயுமானார் ஆயினார்.

செவ்வந்திப்பூவைத் திருடிய சிவத்திரவியாபகாரியான பூவாணிகனைக் கண்டிக்காத பராந்தகனது அரச அநீதியைக் கண்டு, சாரமாமுனிவர் வேண்டுகோட்படி பெருமான் மேற்குப் பக்கமாக உறையூரைப் பார்க்கத் திரும்பினார். மண் மாரியால் நகர் அழிந்தது. மன்னன் அழிந்தான். மன்னன் மனைவி கருவுற்றிருந்தாள். காவிரியில் வீழ்ந்தாள். அந்தணன் ஒருவன் பாதுகாத்தான். கரிகாலன் பிறந்தான். கருவுற்ற ஆதித்தசோழன் மனைவியாகிய காந்திமதிக்கு இறைவன் தானே தோன்றிக் காட்சி கொடுத்து, தான்றோன்றீசர் என்ற திருநாமம் பெற்ற வரலாறுகளும் புராணங்களில் பேசப்படுகின்றன.

கல்வெட்டு
இங்குக் குகைகள் உள்ளன. இவை மகேந்திரன் காலத்தனவே என்பது குறிப்பிடப்பட்டது. ஒன்று மலைமேலுள்ளது. மற்றொன்று அடி வாரத்திலுள்ளது. மலைமேலுள்ள கோயில்களிலேயே கல்வெட்டுக் கள் மிகுதியாக உள்ளன. வடமொழியிலமைந்த எட்டு சுலோகங்கள் மகேந்திரவர்மனது மதமாற்றத்தையும் அதனால் அவன் செய்த சிவப்பணிகளையும் தெரிவிக்கின்றன. அவற்றில் கல்தச்சராலே இந்த அரசனுடைய புகழ் விரிந்து நீடித்திருக்க வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது ஒரு சுலோகம். இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நிரம்ப உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுந்த பிராமி எழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டாகும்(139 of 1938).

தொடர்ச்சியாகப் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பல்லவ கிரந்தத்தாலும், தமிழாலும் ஆக்கப்பெற்றன.

இராஜகேசரிவர்மன்.
இவன் ஆட்சி பதினாறாம் ஆண்டில் சாகுபடிக்குக் கொண்டு வரப்படாத நிலங்களைக் குறைந்தவிலையாக ஐந்து கழஞ்சுக்கு விற்று, நிலம் விளைச்சலுக்கு வந்த பிறகு. நிலம் வாங்கியவர்கள் திருவிழாக் காலங்களில் சித்திரைத் திருநாளில் ஒன்பது நாட்களுக்குப் பன்மா கேசுவரர்களுக்கும் உணவு இடும்படி உத்தரவிட்டான்.(985 of 1013)

பாண்டியன் மாறன் சடையன்.
இவன் ஆட்சி 4-ஆம் ஆண்டில் நிலமளித்திருக்கிறான். இதில் இறைவன் திருமலைப் பெருமான் என்றழைக்கப்படுகிறான்.(413,414 of 1904) வேங்கட தேவமகாராயர் சகம் 1351 வீரப்ப நாயக்கருடைய மேன்மைக்காக நிலமளித்தார். மதுரை விஜயரங்க சொக்கநாத நாயக்கருடைய காலத் தில் நரசபந்துலு என்னும் தன்வந்திரி வைத்தியருக்கு இறையிலியாக நிலமளிக்கப்பட்டது.(E.P.R. 1911 page 90)

அவ்வாறே திருமலைஅப்பராயத் தொண்டைமான் மகனும், திருமலைராயத் தொண்டைமான் பேரனுமான இராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் சகம் 1772-இல் கி.பி. 1805-இல் ஒராண்டிக்கோடி கிராமத்தைத் தேனாம்பட்டணம் இருளப்ப முதலியாரிடம் அளித்து, திருச்சிராப்பள்ளியில் அறச்சாலைநடத்த ஏற்பாடுசெய்தான் நல்லப்ப காலாட்க தோழராலும், ரங்கப்ப காலாட்க தோழராலும் அளிக்கப்பட்ட தேவதானங்களை அறிவிக்கும் செப்புப்பட்டயங்கள் உள.

கல் வெட்டுக்களில் சிறப்பாகக் குகைக்கோயில் பின்சுவரில் திரிசிராமலை அந்தாதியொன்று எழுதப் பெற்றுள்ளது. அது 103 பாடல்களை உடையது. அதில் 104 ஆம் பாடலாக ``மாட மதுரை மணலூர் மதில் வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூரின் - நீடிய , நற்பதிக்கோன் நாரா யணன்சி ராமலைமேல், கற்பதித்தான் சொன்ன கவி`` என்றதால் நாராயணன் என்பவன் கல்வெட்டுவித்தான் என்று குறிப்பிடப்படுகிறது.


பெரணமல்லூர்இறைவன்:  திருக்கரையீஸ்வரர்
இறைவி:  திரிபுர சுந்தரி
தீர்த்தம்:  கோச்செங்கட்சோழன் தீர்த்தம்
கிராமம்/நகரம்:  பெரணமல்லூர்மாவட்டம் திருவண்ணாமலைமாநிலம் தமிழ்நாடு
வரலாறு : சிவபக்தனான கோச்செங்கட்சோழன், கட்டிய கோயில் இது. முற்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனையாறு ஓடியது. இதன் கரையில் மன்னன் கோயிலைக் கட்டினான். அம்பாள் திரிபுர சுந்தரிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. கரையில் கோயில் கொண்டதாலும், பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோட்சமாகிய கரைக்கு கரையேற்றி விடுவதாலும் இத்தல சிவனுக்கு "திருக்கரை ஈஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

திருவிழா :
பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்
சிறப்பு : கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள சன்னதியில் சிவன், சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல் :
இக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் உள்ள எறும்பூர், ஆவணியாபுரம், இஞ்சிமேடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் சிவன் கோயில்கள் உள்ளன. தவிர, வீற்றிருந்த பெருமாள், வளர்கிரி வேல்முருகன், கண்ணன், வரத ஆஞ்சநேயர், அங்காள பரமேஸ்வரி மற்றும் சமணர் கோயில்களும் உள்ளன. இவ்வூரின் வடக்கு திசையில் எட்டியம்மன் கோயில் உள்ளது. இவளே இவ்வூரில் காவல் தெய்வமாவாள். இந்த அம்பிகையின் எதிரே பலிபீடம், யானை சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் அருகில் அழகிய ஆண் சிலை ஒன்றுள்ளது.

பிரார்த்தனை :
பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோட்சமாகிய கரைக்கு கரையேற்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.
தல சிறப்பு : இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.

மன்னன் பெயரில் தீர்த்தம்:
கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள சன்னதியில் சிவன், சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். சிலந்தி ஒன்று, தான் செய்த சிவ புண்ணியத்தால் மறுபிறப்பில் கோச்செங்கட்சோழ மன்னனாகப் பிறந்ததாக ஒரு தகவல் உண்டு. இவன் கட்டிய கோயில் என்பதை உணர்த்தும் விதமாக இங்குள்ள மண்டப தூணில் யானை, சிலந்தியின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தீர்த்தக்குளமும்  இவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள தூண்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. விதானத்தில் (மேல் சுவர்) நாக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான வாசல் தென்திசையில் உள்ளது. வெளியில் தீபஸ்தம்பம் உள்ளது. இதில் சிவனுக்குரிய சூலம், சூரியன், சந்திரன், நந்தி, விநாயகர் மற்றும் முருகன் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி கோஷ்டத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சுரக்கும் சிற்பம் உள்ளது.

விசேஷ விநாயகர்:
பிரகாரத்தில் மிகவும் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிலை உள்ளது. இவர் புடைப்புச்சிற்பமாக, இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் இருக்கிறார். ஐப்பசி பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடக்கும். பவுர்ணமி, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா உள்ளனர். பிரகாரத்தில் முருகன், நவக்கிரகம், பைரவர் சன்னதிகள் உள்ளன.

ஜேஷ்டாதேவி:
இக்கோயிலில் மகாலட்சுமியின் சகோதரி ஜேஷ்டாதேவி சிலை, ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இவள் இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறாள். இவள் கையில் காகக் கொடி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே கழுதை வாகனம் உள்ளது. உடன் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில், பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

திருக்கோணமலை சுவாமி மலை கோணேஸ்வரர் ஆலயம்
வரராமதேவன் என்ற சோழ மன்னன் திருக்கோணமலையிலுள்ள சுவாமி மலையின் தவப் பெருமையைப் புராண வாயிலாக அறிந்து கடல் கடந்து திருமலை வந்து சுவாமி மலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைக்கும் திருப்பணி வேலைகளைச் செய்து வந்தான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.

அந்தநன் மொழியைக் கேளா
அரும் குறள் அடைவிற் கூறும்
முந் தொர் ஞான்று வெற்பின்
மொய்கதிர்க் குலத்து வேந்தன்
மந்திரம் அனைய பொற்றோள்
வரராம தேவன் என்போன்
வந்திவன் ஈசற்காக வான்
திருப்பணிகள் செய்தான்
குறள் - பூதம்

தந்தை வரராமதேவன் திருமலையில் கட்டிய கோணேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கத் தனயனான குளக்கோட்டன் படைகளுடன் திருமலை வந்தான். திருக்கோணமலைக்குத் தெற்கே உள்ள தம்பலகாமத்தில் ஒரு பெரும் சிவாலயம் இடிபட்டு அழிந்து கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்டான். தந்தையைப்போல் தானும் ஒரு சிவாலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனாதலால், உடனே அங்கு விரைந்து உடைபட்ட கோயிலில் கட்டடச் சிதைவுகளைப் படைவீரர்களைக் கொண்டு அப்புறப்படுத்திக் கோயில் குடியிருப்பு என்ற இடத்திலேயே கோயிலைத் திரும்பக் கட்டி ஆலய பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களையும் தென்னந்தோப்புக் களையும் ஆக்கி இவைகளுக்கு நீர்பாய்ச்சக் குளம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற யோசனையோடு இளவரசன் அங்கு தங்கி இருந்தான்.

அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆளும் மனுநேய கயவாகு மன்னன் வேட்டையாடப் படைகளுடன் கரையோரப் பகுதிகளுக்கு வந்து கூடாரமிட்டுத் தங்கியிருந்தான்.கடலில் பேழைபோன்று மிதந்து வந்து ஒதுங்கும் செய்தி அறிவிக்கப்பட்டதும் மன்னன் கடற்கரைக்கு விரைந்து சென்று பேழையை எடுத்து ஆவலோடு திறந்தான். என்னே அதிசயம்! பேழைக்குள் தங்க விக்கிரகம் போலக் குழந்தை ஒன்று படுத்துக் கிடப்பதைக் கண்ட அரசன், குழந்தையை வாரி எடுத்து மக்கள் செல்வம் இல்லாத வறியோனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை... என்று இயம்பி, தாமரைப் பூப்போன்ற குழந்தையின் அழகிய வதனத்தில் முத்தமிட்டான். அந்த அதிசயக் குழந்தை மன்னன் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கச் சிரித்தது. பால் மணம் மாறாப் பச்சிளம் குழவி சிரித்த காரணத்தால் மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ள அந்த ஊருக்கு பானகை என்ற காரணப் பெயர் ஏற்பட்டு காலப்போக்கில் திரிந்து பாணகை என்று இன்று அழைக்கப்பட்டு வருகின்றது.

நித்திய தரித்திரனுக்கு பெருந்தனம் கிடைத்ததுபோல் மகிழ்ந்து மன்னன் கண்ணை இமை காப்பதுபோல் அரசனும், இராணியும் குழந்தையைக் கண்ணும், கருத்துமாக வளர்த்து வந்தனர். அரசர் மதியூகியான தனது பிரதம மந்திரிக்கு கடலில் வந்த இக்குழந்தை பற்றிய எல்லா விபரங்களையும் கூறியதுடன் பேழையில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச் சுருளையும் காட்டினார். அதில் ஆடக சௌந்தரி என்று எழுத் தாணியால் வரையப்பட்டிருந்தது. அப்பெயரே அப்பெண்ணுக்குப் பிற்காலம் பெயராக நிலைத்தது. சிறுகுழந்தையிலே சிங்கள மன்னனால் வளர்க்கப் பட்ட ஆடக சௌந்தரி தான் ஒரு சிங்களப் பெண் என்றே எண்ணி இருந்தாள். தலைமை அமைச்சர் யாவும் அறிவார் ஆயினும், சமயம் வரும்போது சொல்லலாம் என்று எண்ணி இருந்தார்.

வயது முதிர்ந்த அரசர் ஆடக சௌந்தரிக்கு வரன்தேடி திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் மந்திரியிடமே ஒப்படைத்திருந்தார். மனுநேய கயவாகு காலமானதும், அவன் வளர்ப்பு மகளான ஆடக சௌந்தரி அனுராதபுர இராஜ்யத்தின் அரசு கட்டில் ஏறினாள். தம்பலகாமத்தில் சைவன் ஒருவன் கோயில் கட்டுவதாக அறிந்த அரசி, தந்தையின் ஸ்தானத்திலுள்ள பிரதமரை அழைத்து, ஆலோசித்ததுடன் ஒரு படையை அனுப்பிச் சைவனை இந்தியாவுக்கு துரத்தி விடுமாறும் கேட்டுக் கொண்டாள். பிரதமர் தாமே படையுடன் போய் வருவதாகக் கூறிச் சென்றார். சேனைகளை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு கோயில் கட்டும் இடத்திற்குத் தனித்துப்போய்க் குளக்கோட்டனைச் சந்தித்தார்.

இளவரசனின் தெய்வீகக்களை ததும்பும் முகத்தைக் கண்டதும் அரசிக்குத் தகுந்த வரன் இவர்தான் என்று எண்ணி மகிழ்ந்த மந்திரி ஆடக சௌந்தரியின் வரலாறு முழுவதையும் கூறி ஆடக சௌந்தரியை திருமணம் செய்துகொள்ள இசைந்தால், மன்னன் ஆக்க எண்ணும் குள அமைப்பைத் தானே முடித்துத் தருவதாக உறுதிகூறி விவாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் திரும்பியவுடன் ஆடகசௌந்தரியின் தலைமை அமைச்சர், சோழ இளவரசனின் தெய்வீகக்கலை பொலியும் சௌந்தரியம், அவனுடன் குளம் கட்டித் தருவதாகத் தான் செய்துகொண்ட விவாக ஒப்பந்தம், ஆகிய முழு விபரங்களையும் மறைந்த மன்னர் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பான பணிகளையும் விபரமாகக் கூறினார். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் கேட்ட ஆடகசௌந்தரி தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தாள். புத்திசேர் அமைச்சர்களின் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் திருக்குளம் என்ற பெயரில் கந்தளாய் நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டது. அணைக்கட்டின் உச்சியில் நின்று பார்த்தால் குளத்தின் நீர்ப்பரப்பு பெரிய கடல்போல் தெரியும். கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியைப் பார்த்தால் அணை பெரிய மலைபோலத் தெரியும். குளம் பிரமாண்டமாக இருந்தது என்று குளக்கோட்டுக் காவியம் கூறுகின்றது.

கந்தளாய்க் குளத்தை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் வியப்பில் ஆளாமல் இருக்க முடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற பழைய காலத்தில் இரண்டு மைல்வரை, மலைபோல் அணையை அமைத்திருக் கிறார்களே! தினமும் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யினும் இப்படி ஒர் அணையை அமைக்கப் பலவருடங்கள் செல்லுமே! என்ற எண்ணம் குளத்தையும் அணையையும் பார்ப்பவர்கள் மனத்தில் எழவே செய்யும். குள அமைப்பு முடிவுற்றதும் ஒப்பந்தப் பிரகாரம் அரசரை மேள வாத்தியங்கள் முழங்க படைகள் சூழ்ந்துவர அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று குளக்கோட்டனுக்கும் ஆடகசௌந்தரிக்கும் அமைச்சர் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தார்.

கட்டி முடிக்கப்பட்ட திருக்குளத்தைப் பார்வையிட இரு திறப்படைகளும் கடலெனச் சூழந்து வர அரச தம்பதியினர் கந்தளாய் வந்தனர். கடலென விரிந்து காணப்பட்ட குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தபோது கிழக்கு அணையில் ஒரு இடம் பதிந்து இருத்தலைக் கண்ட அரசி ஆடகசௌந்தரி ஒரு கல்லைத்தூக்கி அந்தப் பதிவில் வைத்தார். அரசியைத் தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும் கற்களைத் தூக்கி வைத்து உயரமாகக் கட்டினர். பெண்கள் கட்டியதால் கந்தளாய்க் குளத்துக்கு கிழக்கு அணை, பெண்டுகள் கட்டு என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

சோழகங்க தேவன் (கி.பி. 1223 - 1260 ஆட்சிக்காலம்-மகாவம்சக் குறிப்பு) என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த குளக்கோட்டன் இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். இவனைப் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டிலும் வருகிறது.

இவனது மனைவி பெயர் ஆடக சவுந்தரி ஆகும். அவளது கட்டளையில் நூற்றுக்கணக்கான தோழிகளும் கற்களைத் தூக்கி வைத்து மன்னவன் கந்தளாய் குளம் கட்டினான் என்பது சரித்திரம்.
நன்றி முக்கால மன்னர்கள்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

குடியரசு தினம் உருவான வரலாறு



குடியரசு தினம் உருவான வரலாறு

மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்குள்ளேயே சிறு சிறு பகுதிகளாக அந்த அந்த பகுதியை சேர்ந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இந்த கருத்தினை அறிந்த

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வந்து வணிகம் செய்ய வந்தனர். வந்தவர்கள் வணிகம் செய்ததோடு மட்டுமின்றி பின்னாளில் இந்தியாவில் அவர்களது கொடுங்கோல் ஆட்சியினை புரியத்துவங்கினர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர் .பின்னர் 1947 ஆம் ஆண்டுஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

அதன் பிறகு மக்களை ஒன்றுபடுத்தி அவர்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அரசியலமைப்பு மூலம் மக்களாட்சி அமைத்து நெறிப்படுத்தும் முனைப்பில் தலைவர்கள் செயல்பட்டனர். குடியரசு தினம் உருவான வரலாறு தெரிய இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்.

வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் :

முதன் முதலில் போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்தார். அவர் இந்தியாவில் உள்ள வளத்தினை அறிந்து இந்தியாவில் வணிகம் செய்ய போர்ச்சுகீசிய வணிகத்தினரை இந்தியாவிற்குள் கொண்டுவந்தார். பிறகு இந்தியாவில் வணிகம் சிறக்க அவர்களை பின்பற்றி டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் காரர்கள் மெல்ல மெல்ல இந்தியாவில் கால் பதித்தனர்.

போர்ச்சுகீசியர்கள் தங்களது வணிகத்தினை மட்டும் மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் உள்ள மன்னர்களின் பிரிவினை கண்டு அவர்களோடு கொண்ட நெருக்கத்தினை பயன்படுத்தி மெல்ல மெல்ல தங்களது ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கினர்.

பின்னர் இந்தியாவினை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கொடுங்கோல் ஆட்சி செய்ய துவங்கினர். அவர்களது பிடியில் சிக்கிய இந்தியா 200 ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. வணிகம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவினை ஆளதுவங்கினான்.



சுதந்திரம் அடைந்த இந்தியா :
இந்தியாவில் நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியினை வெறுத்த இந்திய மக்கள் தொடர்ந்து பல தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் மூலம் அவர்களை எதிர்க்க துவங்கினர். பிறகு நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான முழுமையான போராட்டத்தினை நடத்த துவங்கினர்.

‘அதன் தொடக்கமாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர்.

இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்திய மக்களின் ஒற்றுமையை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கடைசியில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து இந்தியாவை விட்டு வெளியேரினர்.

அரசியல் சாசனம் :

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் மூலம் இந்திய அரசியல் சாசனம் அமைக்க முடிவெடுக்க பட்டு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சாசனம் ஒரு பெரிய குழு மூலம் வரையறுக்கப்பட்டு இந்திய அரசியல் அமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் நன்மையினை மட்டுமே சிந்தித்து மன்னர் ஆட்சி கலைக்கப்பட்டு குடியாட்சி அமைந்தால் தான் நாடு சுதந்திரத்துடன் மேலும் பலமாக இருக்கும் என்று எண்ணி இந்த அரசியல் அமைப்புசாசனம் கொண்டுவரப்பட்டது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

குடியரசு என்பதன் விளக்கம் :

“மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி” மக்களாட்சி என்ற பொருளுண்டு. மக்களின் நல்வாழ்வினை மக்களே முன்னின்று நடத்தவேண்டும் என்று இந்தியாவில் 1950ஆம் ஆண்டு மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் நிகழும் என்று எண்ணி மக்களாட்சி கொண்டுவரப்பட்டது.


முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்ட தினம் :

காந்தியடிகள் சுதந்திரம் அடையும் முன்னரே இந்தியாவின் குடியரசு நாளினை ஜனவரி 26 அன்று செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தார் . இதனை நினைவில் கொண்டு இந்தியாவின் முதல் பிரதமரான “ஜவஹர்லால் நேரு” 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக மாறும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜனவரி 26 1950ஆம் ஆண்டு முதல் குடியரசு நாள் அன்று இந்தியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. அந்த கொடியினை ஏற்றியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் நேரு. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டு ஆண்டும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்தியா முழுவதும் கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.


குடியரசு தினத்தினை கொண்டாடும் முறை :

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் முதலில் டெல்லியில் பிரதமர் மூவண்ண இந்திய கொடியினை கம்பத்தில் பறக்கவிடுவார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் இந்திய கொடியினை ஏற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி குடியசு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

மேலும் இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவில் வைத்து சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகியநாட்களில் மக்கள் அனைவரும் இந்திய கொடியினை தங்களது ஆடையில் குத்திக்கொள்வர்.

இன்று இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளது. இதன்பின் பல தலைவர்களின் உயிர்த்தியாகம் மற்றும் பல மக்களின் ரத்தமும் உள்ளது என்பது மிகையாகாது. சாதி, மதம் மற்றும் மொழி கடந்து இன்று நாம் இந்தியர்கள் என்று கூறிக்கொள்ள நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.

“ஜெய் ஹிந்த் ”

வியாழன், 16 ஜனவரி, 2020

புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்


புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்

இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் கட்டிடக்கலையானது முகலாயர்களின் ஆட்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தது.

முதலில் வந்த முகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பைத் தவிர ஏனையோர் கட்டிடக்கலையைப் போற்றி பல நினைவுச்சின்னங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

முகலாயர்கள் உருவாக்கிய கோட்டைகள், மசூதிகள், தோட்டங்கள், நகரங்கள் இன்றும் புகழ் பெற்றவைகளாகவே திகழ்கின்றன.

முகலாய கட்டிடக்கலையானது ஷாஜகானின் ஆட்சியில் உச்ச நிலையை அடைந்தது. முகாலய கட்டிடக்கலைக்கு மகுடமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.

முகலாய கட்டிடக்கலையானது இந்திய, பெர்சிய, இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் கலப்பாகும்.

தாஜ்மஹால்

தாஜ்மஹால் உத்திரபிரதே மாநிலத்தில் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும்.

இம்மாளிகை 1631-ல் கட்ட ஆரம்பித்து 1654-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னம் இந்திய, பாரசீக, இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் கலப்பு ஆகும்.

இந்நினைவுச் சின்னத்தின் மையமானது மும்தாஜின் கல்லறை பகுதியாகும். இம்மையப் பகுதியானது குமிழ் வடிவ கூரையுடன் சுற்றிலும் சுமார் 40 மீ உயரம் உடைய தூண் கோபுரங்களுடன் காணப்படுகிறது.

ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்களுடன் இரண்டு பலகணிகளைக் கொண்டுள்ளது. இந்நினைவுச் சின்னத்தைச் சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் பூங்கா அமைந்துள்ளது.

இப்பூங்கா மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாளிகை இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களில் முக்கியமானதாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.

செங்கோட்டை

இவ்விடம் டெல்லியில் அமைந்துள்ளது. இக்கோட்டையை ஷாஜஹான் 1638-ல் கட்டத் தொடங்கினார். 1648-ல் இக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இக்கோட்டையை வடிவமைத்தவர் உஸ்தாத் அகமத் என்னும் கட்டிடக் கலைஞர் ஆவார்.

19-ம் நூற்றாண்டு வரை இக்கோட்டையில் அவ்வப்போது புதிய கட்டுமானங்கள் நிகழ்ந்தன. சிவப்புக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இவ்விடம் செங்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

உலகின் புகழ் பெற்ற கோட்டைகளில் ஒன்றாக இவ்விடம் உள்ளது. இக்கோட்டை சுமார் 2.41 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோட்டை முகலாயர்களிடமிருந்து 1857-ல் ஆங்கிலேயர்களின் வசம் வந்தது.

பின் 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய பிரதமர் ஜவர்கலால் நேரு இக்கோட்டையில் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார். அது முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இக்கோட்டை இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

2003-ல் இக்கோட்டை இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சுற்றலா மையமாக இவ்விடம் உள்ளது.

2007-ல் இக்கோட்டையானது இந்தியாவில் உள்ள உலக பராம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆக்ரா கோட்டை

இவ்விடம் உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் யமுனை நதியின் வலதுபுறத்தில் தாஜ்மகாலிருந்து 2.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இக்கோட்டையில் முகலாய மன்னர்களான பாபர், ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசீப் ஆகியோரும், சிக்கந்தர் லோடி, இப்ராஹிம் லோடி, ஷெர்ஷா முதலியோரும் வாழ்ந்தனர்.

ஆரம்பத்தில் ராஜபுத்திரர்களின் கோட்டையாக விளங்கிய இவ்விடத்தை டெல்லி சுல்தானான சிக்கந்தர் லோடி தனது இருப்பிடமாக மாற்றினார்.

பின் இப்ராஹிம் லோடி இக்கோட்டையில் வசித்து வந்தார். முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடி கொல்லப்பட்டபின் பாபர் இக்கோட்டையை தன் வசமாக்கினார்.

அதன்பின் ஹுமாயூன் இக்கோட்டையில் அரசராக முடிசூட்டப்பட்டார். பின் ஹுமாயூனிடமிருந்து இக்கோட்டையை ஷெர்ஷா தன் வசமாக்கினார்.

மீண்டும் முகலாயர் வசமான செங்கற்களால் ஆன இக்கோட்டையை அக்பர் சிவப்பு மணற்கற்களால் புதுப்பித்தார். ஷாஜஹான் இக்கோட்டையை வெள்ளை நிற சலவைக் கற்களால் மாற்றியமைத்தார். இக்கோட்டையில்தான் ஷாஜஹான் பின்னாளில் சிறை வைக்கப்பட்டார்.


ஃபத்தேப்பூர் சிக்ரி

இந்நகரானது உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகர் முகலாய பேரரசர் அக்பரால் கிபி 1570-ல் அமைக்கப்பட்டது.

அக்பர் இந்நகரை உருவாக்கியபின் தலைநகரை ஆக்ராவிலிருந்து இந்நகருக்கு மாற்றினார். கிபி 1571 முதல் 1585 வரை அக்பரின் தலைநகரமாக இந்நகர் விளங்கியது.இந்நகரில் அரண்மனைகள், மசூதி, நீதிமன்றங்கள், பிற பயன்பாட்டு கட்டிடங்கள் ஆகியவற்றை அக்பர் அமைத்தார்.

அக்பர் சித்தூர், ரன்தம்பூர் கோட்டைகளை கைபற்றிய பின்பு சூஃபி முனிவரான சலிம் சிசுத்தி என்பவரை கௌரவிக்கும் பொருட்டு இந்நகரை உருவாக்கி அதற்கு ஃபத்தேகாபாத் என பெயரிட்டார். பின்னாளில் இந்நகர் ஃபத்தேபூர் சிக்ரி என்று வழங்கப்பட்டது.

புலந்தர்வாசா, பாஞ்ச் மகால், பீர்பால் மாளிகை, ஜமா மஸ்ஜித், சலிம் சிசுத்தி கல்லறை, ஹிரன் மினார் ஆகியவை இந்நகரில் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.  இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக இவ்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜாமா மஸ்ஜித்

ஜாமா மஸ்ஜித் என்ழைக்கப்படும் இம்மசூதி முகலாய மன்னன் ஷாஜஹானால் கிபி 1656-ல் டில்லியில் கட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இம்மசூதி மஸ்ஜிதி-இ-ஜஹான்-நும்மா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதற்கு பாரசீக மொழியில் உலகைப் பிரதிபலிக்கும் மசூதி என்று பொருள்.

இம்மசூதியில் ஒரே நேரத்தில் 25000 பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் இடவசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மசூதி மூன்று நுழைவுவாயில்களையும், நான்கு பெரிய தூண் கோபுரங்களையும் கொண்டுள்ளது. இத்தூண்கள் சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெண்நிற கிரானைட் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இவ்விடம் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.


புலாண்ட் தர்வாசா

புலாண்ட் தர்வாசா என்பது பேரரசர் அக்பரால் கட்டப்பட்ட மிகப்பெரிய வாயில் ஆகும். இவ்விடம் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் அருகில் உள்ள ஃபத்தேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.

புலாண்ட் தர்வாசா என்ற சொல்லுக்கு பாரசீகத்தில் பெரு வாயில் என்பது பொருளாகும். உலகின் மிகப் பெரிய வாயில் கட்டிடம் என்ற பெருமை இவ்விடத்தைச் சாரும்.

பேரரசர் அக்பர் குஜராத்தை வெற்றி கொண்டதன் நினைவாக, இவ்வாயில் 1602-ல் கட்டப்பட்டது. 53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் உடைய இவ்வாயில் 42 படிகளை உடையது.

இக்கட்டிடம் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டு வெள்ளைநிற சலவை கற்களின் உட்பதிப்புகளை உடையது. இவ்வாயில் மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது.


சிக்கந்தரா

இவ்விடம் உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில்தான் பேரரசர் அக்பரின் கல்லறை அமைந்துள்ளது.

அக்பர் தனது கல்லறை அமைவதற்கான இடத்தை தானே தேர்வு செய்து கல்லறையைக் கட்டத் தொடங்கினார். பின் இக்கலறையானது ஜஹாங்கீரால் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கல்லறையானது இந்து, கிருத்துவ, இஸ்லாமிய, பௌத்த, சமண சமயங்களின் கட்டிடக்கலைகளின் கலவையாகும்.

இக்கல்லறையின் நான்கு மூலைகளிலும் மூன்று அடுக்குகளுடன் கூடிய தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இக்கல்லறை சிவப்பு மணற்கற்கள் மற்றும் மார்பிள்களால் கட்டப்பட்டு பின்னர் மார்பிள்களால் மட்டும் புணரமைக்கப்பட்டது.


ஹுமாயூனின் சமாதி

இந்நினைவுச் சின்னம் டெல்லியில் நிஜாமுதீன் கிழக்குப் பகுதியில் ஹுமாயூன் கட்டுவித்த, புராணாக்கிலா என்னும் நகருக்கு அருகில் உள்ளது. இச்சமாதியை ஹுமாயூனின் முதல் மனைவியான அமீதா பானு பேகம் என்பவர் 1565-1572 வரை கட்டி முடித்தார்.

இதனை வடிவமைத்தவர் மிராத் மிர்சாக் கியாத் என்ற பாரசீகக் கலைஞர் ஆவார். சிவப்பு நிற மணற்கற்களைப் பயன்படுத்தி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இச்சமாதிக் கட்டிடத்தினுள் ஹுமாயூன் சமாதி, ஹுமாயூனின் மனைவியான அமீதா பானு பேகத்தின் சமாதி, இரண்டாம் ஆலம்கீர் உள்ளிட்டோர்களின் சமாதிகளும் உள்ளன. 1993-ல் இவ்விடம் இந்தியாவில் உள்ள உலக பராம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலானது 2016-ஆம் ஆண்டு சுமார் 108 நாடுகளில் 4300 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் முதல் 14 இடங்களில் இந்தியாவில் உள்ள நகரங்கள் இருக்கின்றன என்பது அதிர்ச்சி கலந்த வேதனையான விசயமாகும். காற்று மாசுபாட்டினை உலக சுகாதார நிறுவனம் அமைதியான கொலைகாரன் என்று குறிப்பிடுகிறது.

இப்பட்டியலில் காற்றில் உள்ள துகள்களின் அளவுகளைக் கொண்டு மாசுபாடு வரையறை செய்யப்பட்டுள்ளது.

பிஎம் 10, பிஎம் 2.5 என்றால் என்ன?
காற்று மாசுபாடு அடைந்தள்ளது என்பதை காற்றில் உள்ள துகள்களின் அளவுகளால் அதாவது பிஎம்10, பிஎம்2.5 என்ற அளவுகளை வைத்து நிர்ணயம் செய்கின்றனர்.

பிஎம்10 என்பது காற்றில் உள்ள கரடுமுரடான துகள்களின் விட்டமானது 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை இருக்கும்.

பிஎம் 10-யானது மனிதனின் முடியை விட 25 முதல் 100 மடங்கு வரை சிறியது. பிஎம் 10 துகளானது  சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரம் வரை காற்றில் இருக்கும். மேலும் இது 30 மைல் தூரம் வரை செல்லும் ஆற்றல் உடையது.

பிஎம்2.5 என்பது காற்றில் உள்ள கரடுமுரடான துகள்களின் விட்டமானது 2.5 மைக்ரோ மீட்டரைவிட குறைவாக இருக்கும்.

பிஎம் 2.5-யானது மனிதனின் முடியை விட 100 மடங்குக்கு மேல் சிறியது. பிஎம் 2.5 துகளானது காற்றில் சில நாட்களிலிருந்து சில வாரம் வரை காற்றில் இருக்கும். இத்துகளானது பல மைல் தூரம் வரை செல்லும் ஆற்றல் உடையது.

ஓர் இடத்தில் காற்றில் உள்ள துகள்களின் ஆண்டின் சராசரி அளவாக‌ பிஎம்10 துகள் 20 மைக்ரோகிராம் / கனமீட்டர் என்ற அளவிலும், பிஎம்2.5 துகள் 10மைக்ரோகிராம் / கனமீட்டர் என்ற அளவிலும் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. இதுவே பாதுகாப்பான வரம்பாகும்.

இவ்வரம்பினைத் தாண்டும்போது காற்றானது உயிர்களுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கிறது.

உலகின் பல இடங்களில் காற்றின் மாசுபாடானது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவினைவிட மிக அதிகமாக உள்ளது.

பிஎம்2.5-ல் மிகவும் நுண்ணிய துகள்களான நைட்ரேட், சல்பேட், கார்பன் ஆகிய உடலுக்கு பெரும் ஊறுவிளைவிக்கக்கூடிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இனி உலக அளவில் காற்று மாசுபாட்டில் முதல் பதினைந்து இடங்களைப் பெற்றுள்ள நகரங்களின் பட்டியலைப் பார்ப்போம்.



வ. எண் நகரம் (மாநிலம்) பிஎம் 2.5ன் அளவு தரவரிசை
1 கான்பூர் (உத்திரப்பிரதேசம்) 173 1
2 பரீதாபாத் (அரியானா) 172 2
3 வாரணாசி (உத்திரப்பிரதேசம்) 151 3
4 கயா (பீகார்) 149 4
5 பாட்னா (பீகார்) 144 5
6 டெல்லி (டெல்லி) 143 6
7 லக்னோ (உத்திரப்பிரதேசம்) 138 7
8 ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) 131 8
9 முசப்பார்பூர் (பீகார்) 120 9
10 ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) 113 10
11 குர்கான் (அரியானா) 113 11
12 ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) 105 12
13 பாட்டியாலா (பஞ்சாப்) 101 13
14 ஜோத்பூர் (இராஜஸ்தான்) 98 14
15 அலி சபா அல் சலாம்  (குவைத் நாடு) 94 15
இந்தியா என்றாலே அது மாசடைந்த நாடு என்று பொருள் ஏற்படுவதாகத்தான் உள்ளது.



 உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி பார்த்தால் பெரும்பாலான இந்திய நகரங்கள் நச்சுக் காற்றினையே கொண்டிருக்கின்றன.

உலகில் உள்ள 10-ல் 9 பேர் நச்சுக் காற்றினை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் 3.8 மில்லியன் மக்கள் வீட்டு காற்று மாசுபாட்டினாலும், 4.2 மில்லியன் மக்கள் சுற்றுப்புற காற்று மாசுபாட்டினாலும் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலகில் 7 மில்லியன் மக்கள் சிறுதுகள்களைக் கொண்ட நச்சுக் காற்றினால் இறக்கின்றனர் என்று கணக்கிட்டுள்ளது.

இந்த சிறுதுகள்கள் கொண்ட காற்றினை சுவாசிக்கும் போது இந்த துகள்கள் இதயம் மற்றும் சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

இதனால் பக்கவாதம், இதயநோய், நுரையீரல் புற்றுநோய், நிமோனியா உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.

7 மில்லியன் மக்களில் 34 சதவீதம் பேர் குருதியோட்ட குறை இதய நோயாலும், 21 சதவீத மக்கள் நிமோனியாவாலும் இறக்கின்றனர். 20 சதவீத மக்கள் பக்கவாதத்தாலும் 19 சதவீதம் பேர் நுரையீல் நோயாலும், 7 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயலும் இறக்கின்றனர்.

உலகில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல்பிரதேசம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் 3 பில்லியன் மக்கள் (40 சதவீதம்) சமையல் எரிபொருளால் வீட்டு காற்று மாசுபாட்டால் அவதியுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுண்துகள்களைக் கொண்ட காற்றுமாசுபாடானது வீடுகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து சாதனங்கள், வேளாண்மை, நிலக்கரியைக்கொண்டு மின்சாரம் தயார்செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவைகளில் பயன்படுத்தப்படும் முறையற்ற எரிபொருள் பயன்பாடினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் மற்றும் பாலைவன தூசு, கழிவுகளை எரித்தல், காடுகளை அழித்தல் ஆகியவையும் காற்று மாசுபாட்டிற்கு காரணங்களாகின்றன என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது.

“காற்று மாசு எல்லைகளை அடையாளம் காணவில்லை. காற்றின் தரத்தை மேம்படுத்துதல் அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கோருகிறது” என்று காற்று மாசுபாட்டில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னேற்றம் என்ற பெயரில் நாம் தொடர்ந்து காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தினால் இந்திய மக்களின் வாழ்க்கை என்பது நரக வாழ்க்கையாகத்தான் அமையும்.