வியாழன், 16 ஜனவரி, 2020

புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்


புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள்

இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற‌ முகலாய நினைவு சின்னங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் கட்டிடக்கலையானது முகலாயர்களின் ஆட்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தது.

முதலில் வந்த முகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பைத் தவிர ஏனையோர் கட்டிடக்கலையைப் போற்றி பல நினைவுச்சின்னங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

முகலாயர்கள் உருவாக்கிய கோட்டைகள், மசூதிகள், தோட்டங்கள், நகரங்கள் இன்றும் புகழ் பெற்றவைகளாகவே திகழ்கின்றன.

முகலாய கட்டிடக்கலையானது ஷாஜகானின் ஆட்சியில் உச்ச நிலையை அடைந்தது. முகாலய கட்டிடக்கலைக்கு மகுடமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.

முகலாய கட்டிடக்கலையானது இந்திய, பெர்சிய, இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் கலப்பாகும்.

தாஜ்மஹால்

தாஜ்மஹால் உத்திரபிரதே மாநிலத்தில் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும்.

இம்மாளிகை 1631-ல் கட்ட ஆரம்பித்து 1654-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னம் இந்திய, பாரசீக, இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் கலப்பு ஆகும்.

இந்நினைவுச் சின்னத்தின் மையமானது மும்தாஜின் கல்லறை பகுதியாகும். இம்மையப் பகுதியானது குமிழ் வடிவ கூரையுடன் சுற்றிலும் சுமார் 40 மீ உயரம் உடைய தூண் கோபுரங்களுடன் காணப்படுகிறது.

ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்களுடன் இரண்டு பலகணிகளைக் கொண்டுள்ளது. இந்நினைவுச் சின்னத்தைச் சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் பூங்கா அமைந்துள்ளது.

இப்பூங்கா மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாளிகை இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களில் முக்கியமானதாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.

செங்கோட்டை

இவ்விடம் டெல்லியில் அமைந்துள்ளது. இக்கோட்டையை ஷாஜஹான் 1638-ல் கட்டத் தொடங்கினார். 1648-ல் இக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இக்கோட்டையை வடிவமைத்தவர் உஸ்தாத் அகமத் என்னும் கட்டிடக் கலைஞர் ஆவார்.

19-ம் நூற்றாண்டு வரை இக்கோட்டையில் அவ்வப்போது புதிய கட்டுமானங்கள் நிகழ்ந்தன. சிவப்புக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இவ்விடம் செங்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

உலகின் புகழ் பெற்ற கோட்டைகளில் ஒன்றாக இவ்விடம் உள்ளது. இக்கோட்டை சுமார் 2.41 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோட்டை முகலாயர்களிடமிருந்து 1857-ல் ஆங்கிலேயர்களின் வசம் வந்தது.

பின் 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்திய பிரதமர் ஜவர்கலால் நேரு இக்கோட்டையில் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார். அது முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இக்கோட்டை இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

2003-ல் இக்கோட்டை இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சுற்றலா மையமாக இவ்விடம் உள்ளது.

2007-ல் இக்கோட்டையானது இந்தியாவில் உள்ள உலக பராம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆக்ரா கோட்டை

இவ்விடம் உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் யமுனை நதியின் வலதுபுறத்தில் தாஜ்மகாலிருந்து 2.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இக்கோட்டையில் முகலாய மன்னர்களான பாபர், ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசீப் ஆகியோரும், சிக்கந்தர் லோடி, இப்ராஹிம் லோடி, ஷெர்ஷா முதலியோரும் வாழ்ந்தனர்.

ஆரம்பத்தில் ராஜபுத்திரர்களின் கோட்டையாக விளங்கிய இவ்விடத்தை டெல்லி சுல்தானான சிக்கந்தர் லோடி தனது இருப்பிடமாக மாற்றினார்.

பின் இப்ராஹிம் லோடி இக்கோட்டையில் வசித்து வந்தார். முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடி கொல்லப்பட்டபின் பாபர் இக்கோட்டையை தன் வசமாக்கினார்.

அதன்பின் ஹுமாயூன் இக்கோட்டையில் அரசராக முடிசூட்டப்பட்டார். பின் ஹுமாயூனிடமிருந்து இக்கோட்டையை ஷெர்ஷா தன் வசமாக்கினார்.

மீண்டும் முகலாயர் வசமான செங்கற்களால் ஆன இக்கோட்டையை அக்பர் சிவப்பு மணற்கற்களால் புதுப்பித்தார். ஷாஜஹான் இக்கோட்டையை வெள்ளை நிற சலவைக் கற்களால் மாற்றியமைத்தார். இக்கோட்டையில்தான் ஷாஜஹான் பின்னாளில் சிறை வைக்கப்பட்டார்.


ஃபத்தேப்பூர் சிக்ரி

இந்நகரானது உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகர் முகலாய பேரரசர் அக்பரால் கிபி 1570-ல் அமைக்கப்பட்டது.

அக்பர் இந்நகரை உருவாக்கியபின் தலைநகரை ஆக்ராவிலிருந்து இந்நகருக்கு மாற்றினார். கிபி 1571 முதல் 1585 வரை அக்பரின் தலைநகரமாக இந்நகர் விளங்கியது.இந்நகரில் அரண்மனைகள், மசூதி, நீதிமன்றங்கள், பிற பயன்பாட்டு கட்டிடங்கள் ஆகியவற்றை அக்பர் அமைத்தார்.

அக்பர் சித்தூர், ரன்தம்பூர் கோட்டைகளை கைபற்றிய பின்பு சூஃபி முனிவரான சலிம் சிசுத்தி என்பவரை கௌரவிக்கும் பொருட்டு இந்நகரை உருவாக்கி அதற்கு ஃபத்தேகாபாத் என பெயரிட்டார். பின்னாளில் இந்நகர் ஃபத்தேபூர் சிக்ரி என்று வழங்கப்பட்டது.

புலந்தர்வாசா, பாஞ்ச் மகால், பீர்பால் மாளிகை, ஜமா மஸ்ஜித், சலிம் சிசுத்தி கல்லறை, ஹிரன் மினார் ஆகியவை இந்நகரில் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.  இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக இவ்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜாமா மஸ்ஜித்

ஜாமா மஸ்ஜித் என்ழைக்கப்படும் இம்மசூதி முகலாய மன்னன் ஷாஜஹானால் கிபி 1656-ல் டில்லியில் கட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இம்மசூதி மஸ்ஜிதி-இ-ஜஹான்-நும்மா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதற்கு பாரசீக மொழியில் உலகைப் பிரதிபலிக்கும் மசூதி என்று பொருள்.

இம்மசூதியில் ஒரே நேரத்தில் 25000 பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் இடவசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மசூதி மூன்று நுழைவுவாயில்களையும், நான்கு பெரிய தூண் கோபுரங்களையும் கொண்டுள்ளது. இத்தூண்கள் சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெண்நிற கிரானைட் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இவ்விடம் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.


புலாண்ட் தர்வாசா

புலாண்ட் தர்வாசா என்பது பேரரசர் அக்பரால் கட்டப்பட்ட மிகப்பெரிய வாயில் ஆகும். இவ்விடம் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் அருகில் உள்ள ஃபத்தேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.

புலாண்ட் தர்வாசா என்ற சொல்லுக்கு பாரசீகத்தில் பெரு வாயில் என்பது பொருளாகும். உலகின் மிகப் பெரிய வாயில் கட்டிடம் என்ற பெருமை இவ்விடத்தைச் சாரும்.

பேரரசர் அக்பர் குஜராத்தை வெற்றி கொண்டதன் நினைவாக, இவ்வாயில் 1602-ல் கட்டப்பட்டது. 53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் உடைய இவ்வாயில் 42 படிகளை உடையது.

இக்கட்டிடம் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டு வெள்ளைநிற சலவை கற்களின் உட்பதிப்புகளை உடையது. இவ்வாயில் மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது.


சிக்கந்தரா

இவ்விடம் உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில்தான் பேரரசர் அக்பரின் கல்லறை அமைந்துள்ளது.

அக்பர் தனது கல்லறை அமைவதற்கான இடத்தை தானே தேர்வு செய்து கல்லறையைக் கட்டத் தொடங்கினார். பின் இக்கலறையானது ஜஹாங்கீரால் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கல்லறையானது இந்து, கிருத்துவ, இஸ்லாமிய, பௌத்த, சமண சமயங்களின் கட்டிடக்கலைகளின் கலவையாகும்.

இக்கல்லறையின் நான்கு மூலைகளிலும் மூன்று அடுக்குகளுடன் கூடிய தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இக்கல்லறை சிவப்பு மணற்கற்கள் மற்றும் மார்பிள்களால் கட்டப்பட்டு பின்னர் மார்பிள்களால் மட்டும் புணரமைக்கப்பட்டது.


ஹுமாயூனின் சமாதி

இந்நினைவுச் சின்னம் டெல்லியில் நிஜாமுதீன் கிழக்குப் பகுதியில் ஹுமாயூன் கட்டுவித்த, புராணாக்கிலா என்னும் நகருக்கு அருகில் உள்ளது. இச்சமாதியை ஹுமாயூனின் முதல் மனைவியான அமீதா பானு பேகம் என்பவர் 1565-1572 வரை கட்டி முடித்தார்.

இதனை வடிவமைத்தவர் மிராத் மிர்சாக் கியாத் என்ற பாரசீகக் கலைஞர் ஆவார். சிவப்பு நிற மணற்கற்களைப் பயன்படுத்தி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இச்சமாதிக் கட்டிடத்தினுள் ஹுமாயூன் சமாதி, ஹுமாயூனின் மனைவியான அமீதா பானு பேகத்தின் சமாதி, இரண்டாம் ஆலம்கீர் உள்ளிட்டோர்களின் சமாதிகளும் உள்ளன. 1993-ல் இவ்விடம் இந்தியாவில் உள்ள உலக பராம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக