சிந்துவெளியில் சிவன்
தமிழறிந்த சிவனும்
தமிழறியா ருத்திரனும்
தமிழ்க் கடவுளுக்குத்
தமிழா தெரியாது ?
சிந்துவெளி நாகரிகத்தின் தனித்தலைமை , முழுமுதற் கடவுள் சிவனே . அயிலன் என்னும் வேலன் , காடுறைவாளாகிய வனா இல்லி கொற்றவை , காலனாகியக் கடவுள் இருளன் ஆகியோர் பெரிதும் பேசப்பட்டாலும் தலைமைக்கடவுள் சிவனேதான் . சிந்து எழுத்தைப் படித்தால் இந்தியாவின் பண்பாடு , வழிபாட்டு முறைகள் , மெய்யியல் சிந்தனைகள் சிவனை வைத்தே உருப்பெற்றுள்ளதை உணர்கிறோம் . இன்று சிவனை வைத்துப் பிழைப்பு நடத்தும் உடான்ஸ் யோகா குருக்கள் சிவனுக்கே தமிழ் தெரியாது என்று இழித்துப் பேசும் அவல நிலையைக் காண்கிறோம் . தமிழரின் உண்மையான சிவனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது .
ஆரியரின் ரிக் வேதம் தெய்வீகமோ , பண்பாட்டுணர்வோ இல்லாத ஒரு நாடோடிச் சிறுகுழுவின் குலதெய்வ வழிபாட்டுப் பாடல்களே . இந்திரன் என்னும் ஆரியப்படைத் தலைவன் ; சோம பானமும் , இளங்கன்றின் ஈரலையும் வைத்துப் படைத்தால் எந்தப் படுபாவத்தையும் செய்யக்கூடிய குலதெய்வம் . வருணன் , அக்கினி என்னும் நீருக்கும் , நெருப்புக்குமான தேவதைகள் . மருத்துவத்துக்குரிய மருத்யூக்களின் அதிதேவதை எனப்படும் ருத்திரன் . யாகத்தில் சிறு அளவு அவிபாகம் பெரும் விஷ்ணு , தான் படைத்த பெண்ணையே கூடிக் குலவிளக்கம் செய்த பிரம்மன் இவர்களைத் தவிர வேறு பெரிய முழுமுதற் கடவுளர் எவரும் ரிக் வேதத்தில் இல்லை .
ருத்திரன் மருந்து நோய் தீர்க்கும் தேவதையாகவும் மருத்யூக்களின்
தலைவனாகவும் (1-114-6, 2-32-2 , 1-114-6,9 ) சில பாடல்கள் குறிப்பிடுகின்றன . விஷ்ணு தனது காலடிகளால் மூவுலகையும் அளந்து , நிலைபெற வைப்பவன் (1-54-1,1-154- 3 ) என ஒரு சில பாடல்களே பெற்றுள்ளனர் . இவர்களில் ருத்திரனை சிவனோடும் , விஷ்ணுவை இருளனோடும் ( கிருஷ்ணன் ) இணைத்துவிட்ட பிறகு புராணங்களில் கூறப்படும் தவ முக்கண் , உலக இயக்கமென்னும் நடனம் , இறைவிக்குத் தன்னுடம்பில் பாதியை அளித்தவன் போன்ற எவ்வித கருத்தாக்கமும் ரிக்கில் இல்லை . ஏன் , ஆரியர்கள் பாற்கடலை அசுரர்களோடு சேர்ந்து கடைந்து அமிழ்தம் எடுத்தது , உலகம் காக்க சிவன் தோன்றிய நஞ்சினை உண்டதென எதுவுமே இல்லை . விஷ்ணு மூவடியால் உலகளப்பது தவிர மகாபலி மன்னன் கதை விஷ்ணுவுடன் இணைத்துப் பேசப்படவில்லை . ஆகவே ஆரியருக்கு தனித்தலைமை - முழுமுதற் கடவுளென்னும் கருத்தாக்கம் இந்தியா வரும்வரை கிடையாது என்பதே உண்மை .
கிமு 2600-1750 ஆண்டுகளில் நிலவிய சிந்துவெளி நாகரிகம் அழிந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு , கிமு 1100 அளவில் உருவான ரிக் வேதத்தில் சிந்து மக்களின் சிவன் , இருளனுக்கு ஈடான முழுமுதற் கடவுள் எவருமில்லை என்பதே உண்மை . பின்னர் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பின்போது இந்திய மக்களின் கடவுளர்களான சிவன் , இருளன் ( கிருஷ்ணன் ) ஆகியோருக்கு இணையான கடவுளர் எவரும் தங்களிடம் இல்லாததால் இருந்த சிறு தெய்வங்களான ருத்திரனையும் , விஷ்ணுவையும் அவர்களுடன் இணைத்து திருப்திப்பட்டுக் கொண்டனர் . ஆனால் கிமு 2600-1500 அளவிலிருந்த முதிர் சிந்து (mature Harappan ) , பிற்கால சிந்து (post Indus) ஆகிய நாகரிகங்களின் காலத்தில் எழுதப்பட்ட சிந்துவெளி - குஜராத்திய முத்திரைக் குறிப்புகள் காட்டும் இறைநிலை என்பது மிகவும் உன்னதமானது . அதிலும் சிவன் - சிவம் குறித்த விளக்கங்கள் ஓர் உயர்நாகரிக மக்களினத்தின் மேன்மையான சிந்தனையின் வெளிப்பாடேயாகும் .
சித்தாந்திகள் கண்டுள்ள பண்பாடு மிக்க மக்களின் இறைநிலைகள் இருவகைப்படும் . ஒன்று மனிதன் தனது பட்டறிவின் அடிப்படையில் சிந்தித்து தன்னை இயக்கும் இறைவன் தன்னைப்போல் மனித வடிவிலேயே இருப்பான் என்று கருதுவது . இரண்டாவது , இறைவன் பேராற்றலாளன் - இவ்வுலகை இயக்கும் அப்பேராற்றலின் வடிவம் மனிதக் கற்பனைக்கும் எட்டாதது ; வடிவம் ,தன்மை , குணாம்சங்கள் ஏதுமற்ற பரம்பொருளாகிய இயங்காற்றல் என்று கருதுவது . இவற்றில் மனிதன் உலகிலேயே தனது வடிவமாகத் தனது இறைநிலையைக் காணும் முதல் நிலையின் உன்னதமான படைப்பு சிவமேயாகும் . பண்பாட்டுணர்வின் - உயர்நாகரிக நிலையின் தாக்கத்தால் தோன்றிய வடிவமாகும் . நாம் முனபே பார்த்தவாறு உலக இயக்கமாகிய நடனம் , தவ ஆற்றலாகிய மூன்றாவது கண் , தன்னுடலின் பாதியைத் தன் மணாளிக்கு அளித்தல் , யோகநிலையில் உயர்ஞானம் பெற்று மிளிர்தல் போன்ற கருத்துருக்கள் சிவமென்னும் மெய்ப்பொருளின் மேன்மையைக் காட்டுவதாகும் . புராணங்கள் காட்டும் சிவன் இவரல்ல . இவர் இம்பன இயையாதவர் ( உலகியலோடு இயையாதவர் ) . இவரே இருடி - இருடிகளின் ( துறவியர் ) தலைவராவார் .யோகநிலையில் வீற்றிருக்கும் ஆதிசிவன் - ஞான வடிவானவர் . இவர் பிச்சாடனர் உருவில் சென்று ரிஷி பத்தினிகளுக்குப் பாலியல் தொல்லை தராத அறநிலையாளர் ; தன்னைப்போல் ஐந்து தலைகள் கொண்டிருந்ததால் தன் மனையாள் குழப்பமடைவாளென்று படைப்புக் கடவுளின் தலையையே கிள்ளி எறிந்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்துக்கு இடங்கொடாத சான்றான்மையாளர் .
அப்படியானால் சிந்துவெளி நாகரிகத்தின் செந்தமிழ்க் கடவுள் எப்படிப்பட்டவர் ? தமிழால் மட்டுமே இவரைத் துதிப்பதால் - வேற்றுமொழிக் கலப்பற்றதால் இவர் சமஸ்கிருதம் - தவறு , வேதமொழி அறியாத தனித்தமிழ் - முழுமுதல் தலைமைக் கடவுள் . இவரது இயல்புகளாகச் சிந்து எழுத்து முத்திரைகள் காட்டுவது -
1 . இவர் சிவண்ணல் , ஆறு சூடிய சிவன்பர் .( 1035, 2651)
2 . இவர் ஆமுகர் அல்லது ஆமுக அண்ணலின் தலைவர் ( 1070,2061)
3. ஈமத்தில் உள்ளவர் , தமக்கென ஈமங்கொள்ளாதவர் (1426)
4. உலக இயக்கமென்னும் விண்ணக நடனம் செய்பவர் (2056,4262).
5. அம்மையொடு பொருந்திய அமயார்த்தனன் ; இறைவி இவரது உடலின் இடப்பக்கம் இடம் பெற்றதால் ஆணானவர் (2169,1626)
6. முகங்கள் ஐந்துடையவர் - ஐம்முகன் . (2442).
7. நாகத்தை உடலில் சூடியவர்(2317)
8. ஐந்தொழிலார் -ஐந்தானவர் , ஐயாற்றின் தலைவர்(4319,4337)
9 . கட ஆ - கடமாவின் ( கடம் + ஆ ) காட்டுப் பசு மூலம் தோன்றியவர் (4113)
10. இருடிகளின் - துறவிகளின் தலைவர் (2621)
11. ஆண்டவராகிய தவம் மூத்த ஈசன் (2420)
12. மிக்க ஞானம் உடைய யோகர் (4096)
13. மேலும் ஒரு கண் - தவமாகிய நெற்றிக்கண் உள்ளவர் (9278, 4340)
இத்தனை இயல்புகளும் சிந்து நாகரிக சிவனுக்கே உரியதாகும் . ரிக் வேதகால ருத்திரனுக்கல்ல . தமிழில் நாம் இறைவன் , கடவுள் என்பதுபோல ஆரியர் தங்கள் கடவுளை தேவர்கள் (Dhevas ) என்றனர் . தேவர்களை வணங்குபவர்கள் தேவர்கள் ( Dhevas ) எனப்பட்டனர் . இது இருளனை வணங்குபவர் இருளர் எனப்பட்டது போன்றது . ஆகவேதான் ஆரியரல்லாதவர்களை தேவரல்லாதவர் அதேவா (Adhevas) எனப்பட்டனர் . தேவர்களை வணங்குபவர்கள் பேசும் பாஷை தேவ பாஷா எனப்பட்டது . கடவுள் பாஷை என்ற பொருளில் அல்ல தேவர்களை வணங்குவோரது பாஷை என்பது இதன் பொருள் . இதைத்தான் பிற்காலத்தில் தேவ பாஷா என்று பெருமைப்படுத்திக் கொண்டனர் . அதனால் தமிழை நீச பாஷை என்றனர் . சமஸ்கிருதம் தேவ பாஷையும் அல்ல , தமழ் நீச பாஷையும் அல்ல . அனைத்தும் மனித பாஷையே .
மேற்காண்பவற்றுள் சிந்துவில் இல்லாதது பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் , சிவன் அதிலிருந்து தோன்றிய நஞ்சை உண்டதும் புராணக் கதை . ஆரியவியலாளர்கள் இதனை ஆரியரது கருத்தாக்கம் என்பர் . ஆரியரின் ஆதித்தாயகம் மத்திய ஆசியாவில் காஸ்பியன் கடல் பகுதியாகும் . கடல் நடுவே நெடிது நிற்கும் பாறைகள் கொண்டது . அக்கடலில் நெடும்பாறைகள் நிற்பதைக் கண்டதாலும் , பறைகள் நிறைந்திருப்பதால் அலைகள் நிறைந்த நீர்ப்பரப்பு வெண்ணுரையால் பால் போல் தோற்றங் கொண்டிருப்பதாலும் ஆரியர் இக்கருத்துருவைப் பெற்றனர் என்பர் . இவ்வாறு பாலைக் கடைவது இடையர்களான ஆரியரது இயல்பாதலாலும் அவர்களுக்கு இக்கருத்துரு தோன்றியது என்பர் . இக்கதை ஆரியரும் கருப்பின தமிழர்களும் பண்பாட்டுக் கலப்படைந்த பிறகு தோன்றியதாகும் . இக்கதை ஆரியர் எவ்வாறு தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அப்பகுதி மக்களை ஏமாற்றிப் பிழைத்தனரென்று உணர்த்துகிறது . ஆனால் இந்திய மக்களின் கடவுளாகிய சிவபெருமான் பால் கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினால் ஏற்பட்ட அழிவைத் தானே ஏற்று அதனை உண்டு உலகைக் காப்பாற்றும் தியாகம் செய்தார் என உணர முடிகிறது .
இக்கதை சிந்துவில் இல்லை . புராணங்களிலும் , சங்க இலக்கியங்களிலும் உள்ளது . சிவன் உலகைக் காக்க நஞ்சுண்ட தியாகம் தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்ததால்
"" நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே ""
என்று தனக்குக் கிடைத்த அரிதான நெல்லிக்கனியைத் தானுண்னாமல் தனக்குக் கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வை பாடினார் . ஆனால் அசுரருடன் சேர்ந்து ப்ல் கடலைக் கடையும் இத்தகைய நிகழ்வு சிந்துவில் இருக்க முடியாது . காரணம் அங்கு அப்போது ஆரியர் கிடையாது . அப்போது சிந்தவெளிச் சிவனின் உடுக்கையின் இரண்டு பக்கமும் தமிழ் என்றே எழுதப்பட்டிருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை . ருத்திரர் தொடர்பான குறிப்பும் , விஷ்ணுவை நெடுமால் என்னும் வழக்கும் தமிழகம் வந்த ஆரிய பிராமணர் வழியே வந்ததாகும் . ருத்திரனைத் தமிழ்க்கடவுள் என்பது வரலாற்றுப் பிழையாகும் .
சிவ வழிபாடு தமிழரின் வரலாற்று வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்துக்குரியதாகும் . முதலில் புதியகற் காலத்தில் மலைக்குகைகளில் வேடர்களாக (குறிஞ்சி ) வாழ்ந்தபோது வேலன் என்னும் முருகன் தோன்றினான் . சிவனோ செம்புக்கற்கால (Chalcolithic period ) சிந்து நாகரிகக் கடவுளாவான் . ஆகவே சிவனின் வரலாற்று வளர்ச்சி செம்புக்கற் கால தோற்றத்துடன் 6000 ஆண்டுகளுக்குரியதாகும் . முருக வழிபாடும் , சிவ வழிபாடும் ஒன்றுடன் ஒன்றாய்க் கலந்ததாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக