புதன், 5 பிப்ரவரி, 2020

ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!


ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை *`ஆர்க்கிடெக் மார்வெல்’* என்கிறார்கள் வல்லுநர்கள்.

தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது. சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு, தி.மு.க ஆட்சியில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, குடமுழுக்கு ஏற்பாடுகளையும் பெரியகோயில் பற்றிய அபூர்வ தகவல்களையும் அறிந்துகொள்வோம்!

கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது

கி.பி 1003 - 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குடமுழுக்கின்போது கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கோபுரக் கலசம் ஆகிய 5 இடங்களிலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மந்திரம் சொல்லப்படும்; தமிழுக்குத் தகுந்த முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.

கூம்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்த அமைப்பில், பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் எழுப்பப்பட்டிருக்கிறது. பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை. எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது.

இதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.

கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட *தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப்* போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

`பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயிலில் பொறித்து வைத்திருக்கிறார், ராஜராஜன். இத்துடன், கோயில் கட்டுமானத்தில் யார் யாருக்கு பங்களிப்பு உண்டு என்கிற தகவல்களையும் அப்படியே கல்வெட்டில் பொறிக்கச் செய்து, கோயிலை ஒரு ஆவணக் காப்பகமாக உருவாக்கியுள்ளனர்.

`கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது நம் முன்னோர்கள் வாக்கு. பெரியகோயிலின் விமானம் முழுவதும் ராஜராஜன் காலத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது. இது பற்றிய தகவல், `ராஜ ராஜேஸ்வரமுடையார் ஸ்ரீ விமாநம் பொன் மேய்வித்தான்... ராஜராஜ’ என்று குறிப்பிடப்படும் கல்வெட்டு, கோயிலில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பிற்காலத்தில் இவை, முகலாயர்களாலும் சுல்தான்களாலும் கொள்ளையடிக்கப்பட்டன.

பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், சிறப்புகளையும் கொண்ட தஞ்ச

ைப் பெரியகோயில் குடமுழுக்குத் திருவிழாவால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழுக்கு விழா, நாளை 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை பூஜைகள் 1 - ம் தேதி தொடங்கியது. 110 யாக குண்டங்கள் கொண்டு, யாகசாலை பூஜைக்கான பந்தல் மட்டும் 11,900 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. யாக பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் திரள்வதால், பாதுகாப்புப் பணிக்கு என 4,492 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகம் மற்றும் தஞ்சை நகரப் பகுதிகள் என மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப் பகுதி முழுவதும் 17 இடங்களில் தற்காலிகக் காவல் உதவி மையங்களும், விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, கதவுகளுடன்கூடிய தடுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி என கோயிலுக்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றிலும் ஒருவழிப்பாதையில் அனுப்பப்படுவர். தீயணைப்புத்துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. மேலும், அதி நவீன தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக, நகரைச் சுற்றியுள்ள புறவழிச்சாலைப் பகுதியில் 21 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள புதுப்பட்டினத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் இறங்கும் மக்களை அழைத்துவந்து கோயிலுக்கு அருகாமையில் சுமார் ஒரு கி. மீ முன்னதாக இறக்கிவிடுவதற்கு, 200 பள்ளி மற்றும் தனியார்வேன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கோயில் குடமுழுக்கு விழா பணிக்காக 1,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக