மாவீரன் அழகுமுத்துக்கோன் :
தாய் மண்ணின் உரிமைக்காகவும்
சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரன்
அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர்
சந்திக்க பயந்த கும்பினியப்படை அவரது
கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப்
பூட்டி பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட
விலங்குகளோடு அவரது ஆறு துணைத்
தளபதிகளும் நிறுத்தப்பட்டார்கள்.
“எங்களை எதிர்ப்போருக்கு இதுதான் கதி”
என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி
அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. ‘ம்’
என்றால் பீரங்கிகள் முழங்கும்.
அழகுமுத்துக்கோனும் அவரது வீரர்களும்
உடல் சிதறிப் போவார்கள். அதைப்
பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய
நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய்
வெடித்து சுட்டு எரிந்து
கொண்டிருந்தது.
“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே
விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால்
மட்டுமே உயிர் மிஞ்சும்” என்று
கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் “தாய் நாட்டின் மானத்துக்காக
மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்”
என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக்
கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.
248 வீரர்களின் தோள்கள் வெட்டிச்
சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு
பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் 3
தளபதிகளையும் வலப்பக்கம் 3
தளபதிகளையும் நடுவில் வீரன்
அழகுமுத்துக் கோனையும்
நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர
மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது
நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின்
விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல்
காணிக்கையாக்கி இந்திய விடுதலை
வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக்
கொண்டார் அழகுமுத்துக்கோன்.
தாய் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர
முழக்கமிட்ட வீரனைத் தந்து யாதவ சமூகம்
பெருமை கொண்டது.
தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த
சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம்.
இவர்கள் இடையர்கள். ஆயர்கள். கோனார்
என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர்.
வட இந்தியாவில் யாதவ் என்று
அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின்
யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு
ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும்,
அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக்
கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின்
தொழிலாகவும் இன்றும் இருக்கிறது.
தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி.
‘இடை’ (நடு) என்றத் தமிழ்ச் சொல்லில்
இருந்து ‘இடையர்’ என்ற பெயர் வந்ததாகக்
கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் ‘முல்லை’ என்ற நடுக்காட்டில் புல்வெளி
நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே
இது எடுத்துக் காட்டுகிறது. “விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு
பிரிவினர்களுக்குன் இடையே ஒரு தொடர்
கண்ணியாக இடையர்கள் இருந்ததால்
அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது” என
பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல்
புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இடையர்கள்தான் தங்கள் பெயர்களுடன்
பிற்காலத்தில் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்து
கொண்டுள்ளனர். 1891-ஆம் ஆண்டு
மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் ‘பிள்ளை, கரையாளர்’ என்ற பட்டப்
பெயர்களையும் இவர்கள்
பயன்படுத்திக்கொண்டது
பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக்
கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள்
கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதே.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை,
ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற
மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.
தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில்
குறும்படை என்ற பெயரில் அதிகளவு
இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்
என்பதால் இவர்களில் அநேகர் வைணவ
வழியைப் பின்பற்றுகின்றனர்.
இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம்
இருக்கிறது. ரிக் வேதத்தில்
குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே
என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில்
இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம்
கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக்
குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான்
யாதவர்கள் என சொல்லப்படுகிறது.
அரசியலிலும் இலக்கியத்திலும்
இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு
உண்டு. தமிழகத்தில் பதிப்புத் துறை
பெரிதும் வளர்ச்சியடையாத
காலத்திலேயே மதுரையில் பதிப்புத்
துறையில் ஈடுபட்ட இ.மா.
கோபாலகிருஷ்ணக் கோனார்,
பொன்னையக் கோனார் போன்றவர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள்.
தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர்
கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள்,
கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு
உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை
எழுதி வெளியிட்டவர். பள்ளி,
கல்லூரிகளில் தமிழையும்
தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து
வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும்
தமிழாசிரியர்களுக்கும் உரிய
மரியாதையை வாங்கிக் கொடுத்து
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி,
கல்லூரிகளுக்கு உரிய நூல்களை
வெளியிட்டு சிறப்பு செய்தவர்.
மாணவர்களிடையே தமிழார்வத்தை
வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில்
கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ்
வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில்
புதுவடிவத்தையும் எளிமையையும்
ஏற்படுத்தியவர் இவரே.
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய
வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய
ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும்
இந்த சமூகம்தான். வரலாறு எழுதுவது
என்பது வேறு. வரலாறாக வாழ்வது
என்பது வேறு. இந்த இரண்டையுமே
செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த
நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக
ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).
அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல்
போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த ஒரு முழுமையான தமிழக
வரலாறு நமக்குக் கிடைக்காமலே
போயிருந்திருக்கும்.
சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர்,
ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின்
உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத்
துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு
ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி
பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல்
உலகில் முதன்மையும்
முன்னுரிமையையும் பெற்றார். இந்தக்
காலத்தில் அவர் எழுதிய
நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
ஆனந்த ரங்கராட் சந்தமு, ஆனந்தரங்கக்
கோவை, ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்
என்று இவர் குறித்துப் பல இலக்கியங்கள்
உருவாகும் அளவுக்கு அவர் வரலாற்று
நாயகராக விளங்கியவர். அந்தப் பெருமை
யாதவர்குல சமூகத்துக்கே.
யாதவ சமூகத்தார் இந்திய சுதந்திரத்துக்கு
ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ்
இந்திய நாட்டின் விடுதலைக்காகப்
போராடியவர் சென்னை மேயர்
ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில்
சென்னை மக்களுக்கு பல வழிகளில்
உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக
இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ்
நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை
மாநகராட்சி நிறைவேற்றி அதில்
வெற்றியும் கண்டது. இவரது
காலத்தைத்தான் ‘மாநகராட்சியின்
பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.
‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதி தமிழ் இலக்கிய
உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர்
ராதாகிருஷ்ணப்பிள்ளை.
யாதவர்கள் வைஷ்ணவ சமயத்தைச்
சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப்
பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர்.
அவர்கள் சனிக் கிழமையைப் புனித
நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக
முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள்
நடக்கும் உறியடி
உதசவத்தின்போதுகிருஷ்ணரின்
குழந்தைப்பருவ லீலைகளாகிய
வெண்ணெய் திருடுதல், வெண்ணெய்
மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல்
முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில்
வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற
சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக்
கூறப்படுகிறது.
முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது
மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே
பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன்,
மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது
மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர்
இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில்
ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும்
வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு.
இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய
சத்துக்களை வழங்குகிறார்கள்.
யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக
இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி
வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன்
மணமகளை மணக்க முடியும் என்ற நிலை
இருந்தது. இன்று அது வழக்கொழிந்து
போய்விட்டது.
முன்பு வயதுக்கு வந்த பெண்கள்
பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சீக்கிரமே திருமணம் செய்து
கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக்
கட்டுப்பாடு வேகமாக மறைந்து
வருகிறது.
சிலர் அக்காள் மகளைத் த்ருமணம்
செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும்
யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை
மட்டுமே மணக்கும் வழக்கத்தைக்
கொண்டுள்ளனர்.
மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும்,
மணமகளின் வெட்கத்தை மாற்றும்
பொருட்டும் திருமணத்தின்போது சில
கேலி விளையாட்டுகள்
நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த
பானையில் ஒரு த்ங்க மோதிரத்தைப்
போட்டு, அதை மணமக்களை எடுக்கச்
சொல்கிறார்கள்.
மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது
மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து
நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா,
பெண்குழந்தை வேண்டுமா’ என்று
கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே
வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு
சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே
வழக்கொழிந்து போய்விட்டன.
தொழில் துறையில் ரோஜா தீப்பெட்டி
அதிபர் கோபால் கிருஷ்ண யாதவர் பங்கு
மகத்தானது. அதேபோல், மதுரை யாதவர்
கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்விப் பணிகளை
இச்சமூகத்தினர் செய்து வருகின்றனர்
என்றாலும், யாதவ சமுதாய மக்களில்
பெரும்பாலானோர் இப்போதும் பின்தங்கிய
நிலையிலேயே உள்ளனர். அவர்களை
மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
யாதவ நட்சத்திரங்கள் சிலர்:
வீரன் அழகுமுத்துக்கோன்: 18-ஆம்
நூற்றாண்டிலேயே இந்திய
சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த வீரர். 37
ஊர்களுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த
கட்டலங்குளத்தைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டவர். வெள்ளையருக்கு கப்பம் கட்ட
மாட்டோம் என்று முதன் முதலாக
வீரமுழக்கமிட்டவர்.
கவியரசு வேகடாசலம் பிள்ளை:
தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர்
ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை: இளைய
தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா
என்று அழைக்கப்பட்டவர். சங்க
இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்
இலக்கணங்களிலும் வித்தகராக
விளங்கியவ்ர்.
கார்மேகக் கோனார்: மதுரை அமெரிக்கன்
கல்லூரித் தலைமத் தமிழ்ப்பேராசிரியர்.
தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய
அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். பதிப்புச்
செம்மல். செந்நாப்புலவர். கோனார் நோட்ஸ்
மூலம் தமிழ் மாணவர்களின் மனதைக்
கொள்ளை கொண்டவர்.
ம. ராதாகிருஷ்ணன்: சென்னை நகரத்தின்
மேயராக இருந்து அரும்பணி ஆற்றிய
அரசியல் அறிஞர்.
ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன்: காலத்தை
வென்ற வரலாற்று பொக்கிஷங்களான
செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி
கோட்டையையும் கட்டிய ஆனந்தக்கோன்,
கிருஷ்ணக்கோன் என்ற சிற்றரசர்களைத்
தந்து யாதவர் சமூகம் அரசர்கள் வரலாற்றில்
இடம் பெற்றுள்ளது.
ஆனந்தரங்கம் பிள்ளை: 18-ஆம் நூற்றாண்டு
தென்னிந்திய வரலாற்றை முழுமையாகப்
பதிவு செய்தவர். பிரெஞ்சு ஆளுநரின்
துபாஷியாக இருந்து அரசியல்
சதுரங்கக்காய்களை நகர்த்தியவர். தமிழ்,
பிரெஞ்சு, தெலுங்கு, ஆங்கிலம்,
பெர்ஷியன் என்று பன்மொழிப் புலமை
பெற்றிருந்தும், தமிழிலேயே ‘ரங்கப்பன்’ என
கையெழுத்திட்டு தமிழ் உணர்வை
வெளிப்படுத்தியவர். ஆளுநருக்கு
இணையாக கையெழுத்து இடும்போதும்
தமிழிலேயே கையெழுத்திட்டது
குறிப்பிடத்தக்கது.
சட்டநாதக் கரையாளர்: காங்கிரஸ்
தலைவர்களில் ஒருவர். சட்டநாதக் கமிஷனை
அரசியல் வரலாறு மறக்காது. (அவரைப்
பற்றி மேலதிகத் தகவல்கள் கீழே பார்க்கலாம்
நண்பர் நக்கீரன் பாண்டியன் தயவில்)
தமிழ்க்குடிமகன்: திமுக ஆட்சியில்
சபாநாயகராகவும், அமைச்சராகவும்
இருந்தவர். மதுரை யாதவர் கல்லூரி
முதல்வராக இருந்து கல்விப்
பணியாற்றியவர். சிறந்த மேடைப்பேச்சாளர்.
கொங்கு மண்டல வரலாறு எழுதிய
முத்துசாமிக் கோனார், அண்ணாவின்
நண்பரும் குடிசை மாற்று வாரியத்
தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு
உதவிய அரங்கண்ணல். ‘கோனார் உரை’யை
உருவாக்கித் தந்து தமிழக
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கல்வியில் பேருதவியாக இருந்த
அய்யம்பெருமாள் கோனார். தமிழ்நாட்டில்
கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய
பங்காற்றிய முள்ளிக்குளம் ராமசாமிக்
கோனார். கல்வித் தொண்டாற்றிய
இராஜம்மாள் தேவதாஸ், கவிக்கொண்டல்
கவிஞர் வாணிதாசன், பொதுத் தொண்டர்
கா.வே. திருவேங்கடம் பிள்ளை,
நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும்
பேரா.தி.அ. சொக்கலிங்கம், முன்னாள்
எதிர்க்கட்சித் தலைவர் சோ.ப., அதிமுக
அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன்,
முன்னாள் இந்திய வங்கித் தலைவர்
கோபாலகிருஷ்ணன் என்று
எண்ணற்றவர்களித் தந்து பெருமை தேடிக்
கொண்ட சமூகம் யாதவர் சமூகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக