ஞாயிறு, 16 ஜூலை, 2017

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!


கேரளத்தில் குறைந்த ஜாதியை சேர்ந்த  பெண்கள் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை  சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள்.  திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.

ஒரு நாள்  அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . 'சரி,   ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள். இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது.  கேரளத்தில் சேர்தலா அருகே 'முலைச்சிபுரம் 'என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று  சம்பவம்
நடந்துள்ளது.   ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ''  நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார்.

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ''  மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற் காலத்தவர்கள் மறந்து விட்டனர். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார்.

எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக