சனி, 22 ஜூலை, 2017

முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி


தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

•       1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

•       தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

•       1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

•       போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

•       தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

•       இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

•       இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

•       தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.

•       பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.

•       அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.


1 கருத்து:

  1. எல்லாம் சரி தேவேந்திர குல பெண்களை மேலாடை அணியக்கூடாது என்று முக்குலமும் சொல்லல ஐயா தேவரும் சொல்லல. இருவருக்கும் அரசியல் மற்றும் சாதிய வன்புணர்வு மட்டுமே .

    பதிலளிநீக்கு