கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?
தோழர் Chandra Mohan அவர்களின் பதிவு.
(1968 டிசம்பர் - 1980. டிசம்பர் வரை)
******************************************
“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.
வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை சாதியத் தன்மையும் கொண்டிருக்கிறது.....
தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் வெறித்தனத்தின் உச்சம் எந்நிலைக்கு சென்றது என்பதற்கு கீழ்வெண்மணி கிராமத்தின் சம்பவங்களை ஆராய்வோம்.
நிலப்பிரபுத்துவ நுகத்தடியின் கீழ்...
***************************************
தஞ்சையில் நிலச்சுவான்தார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் வைத்திருந்தது. இதில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெல்லே கூலியாக கொடுக்கப்பட்டது.
மேலும் வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை நேரத்தில் களைப்பாக இருந்தால் உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் தண்டிக்கப்பட்டனர். மாட்டுச் சாணியை தண்ணிருடன் கரைத்து குடிக்கச் சொல்லும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. மறுக்கும் கூலி தொழிலாளர்கள் அடியாட்களால் உதைக்கப்பட்டனர்.
1960-க்கு மேல் அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மையும், சீனிவாசராவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தி விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தனர்.
இராஜாஜி ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது´ என்று வர்ணித்ததும் அப்போதுதான்.
பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !
****************************************
உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெற்களுடன் மேலும் ஒருபடி நெற்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை.
ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை.
விவசாய தொழிலாளர் சங்கம் இருப்பதால் தான் விவசாய தொழிலாளிகள் துணிந்து நிற்கிறார்கள் என்று சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்தனர். சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை தாக்குவதும், சங்கத்தில் இருப்பவர்களுக்கு வேலை தர மறுத்து சங்கத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தனர்.
மேலும் நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில், ´நெல் உற்பத்தியாளர்´ சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.
நிலச்சுவான்தார்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட சங்கத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொல்லும்படி சதி திட்டம் தீட்டப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இணைந்து இச்சதி திட்டத்தை குறித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.
நிலைமை இழுபறியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் 25.12.1968-அன்று மாலை 5-மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் [நாயுடு] வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிலச்சுவான்தார் சவரிராஜ் [நாயுடு] வீட்டுக்கு வந்து முத்துச்சாமி, கணபதியின் கட்டை அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.
அப்போது நிலச்சுவான்தார் ஆட்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த நிலச்சுவான்தார்கள் ஆத்திரம் கொண்டனர். ´கோபால கிருஷ்ண´நாயுடு துப்பாக்கிகளுடன் காவல்துறை மற்றும் அடியாட்களோடு வெண்மணி கிராமத்துக்கு சென்றார்.
வெறிகொண்ட நிலப்பிரபுக்கள்!
எரிந்தது வெண்மணி !
************************************
கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர்.
தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48.
ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண நாயுடு குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது.
தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள்.
இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.
சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொன்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது.
மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.
பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத முற்பட்டது. ´இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்´ என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதையும் சொல்லியது.
நாளேடுகளில் முகப்பு செய்திகளாக கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தமிழகம் அதிர்ந்தது. கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். தி.க மற்றும் கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். சீனாவில் வானொலியில் தொடர்சியாக கீழ்வெண்மணி கொடூரம் குறித்து செய்தி வெளியிட்டது.
உலக நாடுகள் இந்தியாவில் வர்க்க வெறுப்பில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்து போனது. ‘பாட்ரியாட்´, ´நியுஏஜ்´ போன்ற டெல்லிப் பத்திரிகைகள் “நாட்டுக்கே அவமானம்” என்று எழுதின. கீழ்வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். [ஆதாரம்: பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி 1968-டிசம்பர் 27-ஆம் தேதியில் விடுதலையில் வந்திருக்கிறது.]
28.12.1968-அன்று கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள் குறித்து பெரியாரிடம் தெரிவிக்கப்பட்ட உடன் அன்று மாலையே வீடு திரும்பினார். கீழ்வெண்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளும் வெளியிட்டார்.
சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் சம்பவம் நடந்த அன்றே செய்தி தெரிந்ததும் கிளம்பி மறுதினமே கீழ்வெண்மணிக்கு வந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயக் கூலி தொழிலாளிகள் கீழ்வெண்மணியில் முற்றுகையிட்டனர். எப்போது என்ன நடக்கும் என்று உணரமுடியாத வண்ணம் பதட்ட நிலையில் இருந்தது. எல்லாரிடமும் மிராசுதாரையும், அடியாட்களையும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மிகுந்திருந்தது.
கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமசாமி அம்மக்களை அமைதிப்படுத்தி நீண்ட நேரம் உரையாற்றினார். கொடூரமாக நடைப்பெற்ற நிகழ்வுக்கு சட்டப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து புகார் தரப்பட்டது. கீழ்வெண்மணி படுகொலையை நேரில் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிக்கு வந்தார்கள்.
கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் நிலசுவான்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேலையில் ஈடுபட்டது.
“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்” என்று நிலச்சுவான்தார்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில் செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இரையாக்கப்பட்டதற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?
முதல் தகவல் அறிக்கை FIR
-----------------------------------------------
கீழ்வெண்மணியை சாா்ந்த முனியன் என்பவா் கீவளூா் காவல்நிலையத்தில் 25.12.1968-அன்று இரவு 11.15மணிக்கு புகாா் அளிித்தாா்.
குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது
புகாாில்....
"இன்று இரவு பத்துமணிக்கு
இரிஞ்சூா் நெல் உற்பத்தியாளா் சங்க தலைவா் கோபாலகிஷ்ணநாயுடு மற்றும் சுமாா் இருபதுக்கும் மேற்ப்பட்ட நபா்களுடன் எங்கள் ஊருக்குள் புகுந்து என் வீட்டிற்கு தீ வைத்து என்னை துப்பாக்கியால் சுட்டாா். ரவைக்குண்டுகள் பட்டு காயங்கள் என் முகத்திலும் என் கழுத்திலும் இருக்கிறது. மற்ற வீடுகளும் எாிந்துவிட்டன.
அதில் உள்ளவா்கள் என்னவானாா்கள் என எனக்குத் தொியாது"-என அதில் குறிப்பிட்டாா்.
இப்புகாாின் அடிப்படையில் பிரிவுகள் 147,148,323,307,436- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
ஆனால்
கொலைக்குற்றத்திற்கான 302-? பிரிவு அதில் சோ்க்கப்படவில்லை
இதன் தொடக்கமே எவ்வளவு திட்டமிடலுடன் காவல்துறை செயல்படுகிறது என்பதை அறியவும்
எாித்துக்கொல்லப்பட்டவா்கள் பட்டியல்
------------------------------------------------------------------
1]சுந்தரம்-வயது/45
2]சரோஜா/12
3]மாதம்பாள்/25
4]தங்கையன்/5
5]பாப்பா/35
6]சந்திரா/12
7]ஆசைத்தம்பி/10
8]வாசுகி/3
9]சின்னப்பிள்ளை/28
10]கருணாநிதி/12
11]வாசுகி/5
12]குஞ்சம்மாள்/30
13]பூமயில்/18
14]கருப்பாயி/35
15]இராஞ்சியம்மாள்/16
16]தாமோதரன்/1
17]ஜெயம்/10
18]கனகம்மாள்/25
19]இராஜேந்திரன்/7
20]சுப்பன்/50
21]குப்பம்மாள்/35
22]பாக்கியம்/35
23]ஜோதி/10
24]இரத்தினம்/35
25]குருசாமி/15
26]நடராசன்/5
27]வீரம்மாள்/25
28]பட்டு/46
29]சண்முகம்/13
30]முருகன்/40
31]ஆச்சியம்மாள்/30
32]நடராசன்/6
33]ஜெயம்/6
34]செல்வி/3
35]கருப்பாயி/50
36]சேது/26
37]நடராசன்/10
38]அஞ்சலை/45
39]ஆண்டாள்/20
40]சீனிவாசன்/40
41]காவோி/50
42]வேதவள்ளி/10
43]குணசேகரன்/1
44]இராணி/4
குற்றவாளிகள்:
--------------------------
1]கோபலகிருஷ்ணநாயுடு
2]பாலு நாயுடு
3]கோவிந்தராஜ் நாயுடு
4]இராமுபிள்ளை
5]ராஜ் நாயுடு
6]மூா்த்தி நாயுடு
7]இராமதாசு
8]சீனிவாசநாயுடு
9]மூா்த்தி
10]இராமனுஜம்
11]இராமையா நாடாா்
12]பாலு
13]தாமோதரன்
14]கோவிந்தராஜிலு நாயுடு
15]கிருஷ்ணமூா்த்தி
16]பொருமாள் சுவாமி
17]காியய்யா நாயுடு
18]முத்துநாயுடு
19]கிருஷ்ணசுவாமி
20]கோதண்டவம் பிள்ளை
21]முருகைய்யாத்தேவா்
கொலையாளிகளை விடவும் தீா்ப்பு கொடூரமானது !
**********************************************
போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42- இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
“Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene.” -‘ The Hindu´'
“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.” – ´இந்து´
மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது? தமிழகத்தில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு உருவாகவில்லை.
விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும், சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல் நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல….திமுக முதல் காங்கிரஸ் வரை...
நிலச்சுவான்தார்களின் கௌரவப் பிரச்சனையாக கருதப்பட்டு எப்படியும் கோபால கிருஷ்ண நாயுடுவை வெளிக்கொணருவதில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர்.
வெண்மணி கொடுமைக்கு கணக்கு தீர்த்தனர்!
********************************************
கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை செய்யப்பட்டு 12-ஆண்டுகள் சென்ற நிலையில் 1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடுவை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர். பிணத்தின் அருகில் ´வினோத் மிஸ்ரா´ வாழ்க! என CPIML இயக்கத் தலைவரின் பெயரில் துண்டு அறிக்கைகளை வீசிவிட்டு சென்றனர்.
காவல் துறை வன்முறையாளர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றதாக குற்றம் சாட்டியது. தமிழகத்தில் தொழிலாளர்களோ இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
கீழ்வெண்மணி படுகொலையும் அதற்கு சட்டம் கொடுத்த தீர்ப்பின் யோக்கியதையைக் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் தான் இந்திய சனநாயகம் இருக்கிறது…
வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் நமக்கு சட்டத்தின் பங்களிப்பின் நம்பகத்தன்மையை குறித்து பல கேள்விகள் எழுகிறது. வர்க்கப் போராட்டங்களுடன் சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் கணக்குத் தீர்க்க வெண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து பல வருடங்களாகிறது. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள், ‘நாங்களும் மனுசங்க தாண்டா’ என்று போராடக்கூடிய நிலையில் தான் இன்றைய நிலை நீடிக்கிறது.
கம்யூனிஸ்ட்களின் கடமை மென்மேலும் அதிகரித்துச் செல்கிறது.
வெண்மணித் தியாகிகளுக்கு வீரவணக்கம் !
நீங்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்!
நிலபிரபுத்துவத்தின் மிச்சங்களை கணக்குத் தீர்ப்போம் !
********************************************
குறிப்புகளுக்கு நன்றி :
கடையநல்லூர் முழக்கம்