சனி, 9 டிசம்பர், 2017

காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.


ஸ்டாலின் தி

காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.

மு.நீலகண்டன் எழுதி "உங்கள் நூலகம்", ஆக 2013 இதழில் வெளிவந்த முக்கிய கட்டுரை.

காஞ்சி “ஆயிரம் கோயில்களின் மாநகரம்” என்று பெயர் பெற்றது. காஞ்சிபுரம் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்களில் ஒன்றாகும். “நகர்களில் சிறந்தது காஞ்சி” எனக் காளிதாசரும், “கல்வியில் கரையிலாத காஞ்சி” எனத் திருநாவுக்கரசரும் காஞ்சியைப் புகழ்ந்துள்ளனர். பாலாறு, வேகவதி மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கு ஓடுகின்றன. வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சி மாநகரம், இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். புத்தர் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து பௌத்த சமயக் கொள்கையைப் பரவச் செய்தார் என சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் இப்பகுதி “தொண்ட மண்டலம்” என்று குறிப்பிடப்படுகிறது.

சங்க இலக்கியங்களான மணிமேகலை, பெரும் பாணாற்றுப்படை, ஆகியவற்றில் காஞ்சி நகர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நகரம் சிவக்காஞ்சி, விஷ்ணுக் காட்சி, ஜீனக் காஞ்சி, பௌத்தக் காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று சிவக்காஞ்சி பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணுக் காஞ்சி சின்னக் காஞ்சிபுரம் ஆகும். திருப்பருத்திக்குன்றம் என்ற சிற்றூர் சமணம் வளர்த்த ஜீனக் காஞ்சியாகும். காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியே பௌத்தக் காஞ்சி யாகும். காஞ்சி பௌத்த, சமண, சைவ சமயங்களின் முக்கடல் நகரமாக இருந்துள்ளது. காஞ்சி, பௌத்த சமயத்தின் நிலைக்களமாக இருந்தது. தொன்மைக் காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது காஞ்சியில் பௌத்த அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது எனலாம். பௌத்தம் தொடர்பான குறியீடுகள், அகழாய்வுக் கண்டுபிடிப்புகள், தமிழ் இலக்கியங்கள், பௌத்த ஆய்வு நூல்களில் திரட்டப் பட்ட தரவுகள் களப்பணியில் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் “காஞ்சியில் அழிக்கப் பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்” என்ற தலைப்பில் சிறு ஆய்வு ஒன்று இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

அசோகரின் பௌத்த ஸ்தூபி:-
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) காஞ்சிக்கு வந்த சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங், தனது பயணக் குறிப்பில் காஞ்சியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும் இந்நகரில் நூற்றுக்கும் மேற் பட்ட புத்த மடங்கள் இருந்தன, இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்த துறவிகள் வாழ்ந்தனர், இவையன்றி எண்பதுக்கு மேற்பட்ட இந்து சமணர் கோயில்களும் இருந்தன என்கிறார்.
தற்போது, காஞ்சியில் நூற்றுக்கு மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. இதில் இந்து ஓதுவார்களும், குருக்களும் பணியாற்றுகிறார்கள். ஆனால் பௌத்த மடங்களோ தூபிகளோ, பௌத்த துறவிகளோ காண முடியவில்லை. அனைத்து பௌத்த அடையாளங்களும் இந்துக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

காஞ்சியில் புத்தர் கோயில்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழனின் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில் “புத்தருக்குக் கோயில்” ஒன்றைக் கட்டினான் என்று மணிமேகலையினால் அறிகிறோம்.
“பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியந்தொழுது தென் மேற்காகத்”
மணிமேகலை-28:174-175
மேலும், காஞ்சியில் “தருமத வனம்” என்னும் தோட்டத்தில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. ஆனால் இன்று காஞ்சியில் புத்தர் கோயிலும், புத்த பீடிகையும் காண முடியவில்லை. அத்தனையும் அழிக்கப்பட்டுள்ளது.

காஞ்சியில் இராஜ விகாரம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சியை அரசாண்ட பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி. 590-629) தான் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்த விகாரங்கள் இருந்தன என்றும் அவ்விகாரங்களுக் கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாருக்கு “இராஜ விகார்” என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார். இந்த விகாரம் கட்டுவதற்குச் சில மன்னர்கள் உதவி புரிந்து இருப்பர் என்று கருதப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப காலப் பல்லவ மன்னர்களால் இந்த விகாரம் கட்டியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. யுவான்சுவாங் தனது பயணக் குறிப்பில் இந்த விகாரத்தைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இராஜ விகார் பின்னாளில் அழிக்கப் பட்டுவிட்டது. அதன் அடையாளங்கள் காஞ்சியில் தென்படவில்லை.

காஞ்சியில் அழிக்கப்பட்ட விகார்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
(1) காஞ்சியில், காமாட்சி அம்மன் கோயில் அருகில் வசந்தத் தோட்டத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையினர் 1969-70ஆம் ஆண்டு நடத்திய அகழாய்வில் பௌத்த விகாரை (விகாரம் - தமிழில்) என்று கருதப்படும் சிதைந்த கட்டடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இக்கட்டடத்தில் சுட்ட செங்கற்களும், வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதி ஒன்றும் காணப்பட்டது. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண் டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும், மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இத்தூபி கி.மு.3-ஆம் நூற்றாண்டுக் காலத்தியதாகக் கணிக்கப்பட்டது. இக்கட்டடத்தின் கீழ்வரிசை 56 X 33 X 8 செ.மீ அளவு செங்கற்களையும், மேல் வரிசை 40 X 18 X 6 செ.மீ செங்கற்களையும் கொண்டதாக இருந்தது. இதன்கீழ் மண் அடுக்கில் “புதலதிச’ என்ற பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பு (தமிழ் பிராமி) உடைய சாம்பல் நிற மட்கல ஓடு ஒன்று கிடைத்தது. ‘புதலதிச’ என்பது பௌத்தத் துறவியின் பெயராக இருக்கலாம் எனப் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் கூறுகிறார். இந்த எழுத்துப் பொறிப்பு கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருப்படுகிறது. காஞ்சியில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. பின்னாளில் அவை அழிக்கப்பட்டன என்பது தெரியவருகிறது.

(2) காஞ்சியில் உள்ள “கச்சபேசுவரர்” கோயில்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பூர்வீக புத்தர் கோயில் எனத் தெரிகிறது. இக்கோயிலின் கோபுரத்தில் புத்த உருவங்கள் இன்றும் காணமுடிகிறது. ஒரு சில பகுதிகளில் முன்பு இருந்த புத்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோயிலின் உள் மண்டபத்தின் கல் தூண்களில் புத்தர் உருவம் இருக்கின்றன. இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றொரு ஆதாரம், இக்கோயில் மேற்குத் திசையில் உள்ள ஏரிக்கு “புத்தேரி” என்றும் அதன் வீதிக்கு “புத்தேரித்தெரு” என்றும் இப்போதும் வழங்கி வருகின்றன. எனவே காஞ்சி கச்சபேசுவரர் கோயில் தொடக்கத்தில் புத்தர் விகாரமாக இருந்திருக்கலாம், தற்போது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது
காஞ்சியில் “ஏகாம்பரநாதர்” கோயில் உள்ள இடத்தில் ஆதியில் புத்த விகாரம் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. காரணம் ஏகாம்பரநாதர் கோயிலின் வெளி மதில்சுவரில் சில புத்த உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘புத்தர் பரிநிர்வாணம்’ அடையும் நிலையில் கற்சிலை ஒன்று கோயில் கிழக்கு மதில் சுவரில் வைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. இதனை நோக்கும்போது பூர்வீகமாக இங்கிருந்த புத்தவிகாரம் அழிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால் தான் இந்த புத்த உருவச் சிற்பங்கள் இந்தக் கோயிலின் மதிற்சுவரில் காணமுடிகிறது.

காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில், கைலாச நாதர் கோயில், வரதராசபெருமாள் கோயில், கருக்கலில் அமர்ந்தவள் அம்மன் கோயில் போன்ற இடங்களில் புத்த விகார்கள் இருந்ததாகவும், பின்னாளில் அவைகள் அழிக்கப்பட்டன என்றும் திருமதி சி.மீனாட்சி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சியில் மணிமேகலைக் கோயில்
காஞ்சிபுரம், தலைமை மருத்துவ மனையைக் கடந்து தொடர்வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில் “ஸ்ரீதர்ம ராஜா- திரௌபதி அம்மன்” ஆலயம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் “மணிமேகலைக் கோயிலாக” இருந்தது என்று மரபுவழி நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. தற்போது உள்ள தர்மராஜா - திரௌபதி அம்மன் கோயிலின் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உடைந்து, சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச் சிற்பங்களை ஏரி கரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள்.

மேலும், காஞ்சி மாவட்டத்தில், நாவலூர், மாங்காடு, பல்லாவரம், கூவம் போன்ற இடங்களில் புத்தர் (விகாரங்கள்) கோயில்கள் இருந்ததாகவும், அவைகள் அழிக்கப்பட்டு, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாகவும் தர்மராஜா கோயிலாகவும் மாற்றப் பட்டன எனத் தெரிகிறது என்று மயிலை சீனி.வேங்கட சாமியும், டாக்டர் டி.என்.வாசுதேவராவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.

காஞ்சி ஆர்ப்பாக்கம் - புத்தப் பள்ளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் - உத்தரமேரூர் செல்லும் சாலையில் 13-வது கி.மீ. தொலைவில் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய நதிகளுக்கிடையே “ஆர்ப்பாக்கம்” என்ற பூர்வீக கிராமம் உள்ளது. தற்போது இந்தக் கிராமத்தில் உள்ள “ஆதிகேசவப் பெருமாள் கோயில்” முன்னோர் காலத்தில் பௌத்தப் பள்ளியாக இருந்திருக்கவேண்டுமெனக் கூறுகிறார்கள்.
இந்தக் கோயிலின் உள்ளே வெளி வட்டத்தில் ஓர் இடத்தில் நின்ற நிலையில் புத்தர் சிலை ஒன்றைக் காண முடிகிறது. இக்கோயிலின் தெற்குச் சுற்றுச் சுவரை ஒட்டிய “புத்தர் தோட்டம்” (100 ஏக்கர் நிலம் இன்றும் உள்ளது) என்ற இடத்தில் தலை உடைந்த நிலையில் புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. அடுத்து, ஐந்து அடி உயரமும், மூன்று அடி அகலமும் தாமரைப் பீடத்தில் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை 25.11.2003 அன்று மர்ம ஆசாமிகளால் கடத்தப்பட்டுள்ளது. காவல் துறை வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுக்காலம் ஆகியும் புத்தர் சிலை கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னோர் காலத்தில் இந்த ஆர்ப்பாக்கம் செல்வாக்குப் பெற்ற பௌத்த பூமியாக விளங்கியது என்று மரபு வழிச் செய்திகள் உண்டு.

திருமதி.சி.மீனாட்சி அவர்களின் கூற்றுப்படி, புத்தர் சிலைகள் உள்ள புத்தப்பள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. புத்தப் பள்ளி அழிக்கப்பட்டுள்ளது.

நிறைவாக,
""""""""""""""""""""
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்று கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து இருந்தது என்ற தகவல்களை, இலக்கியச் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. காஞ்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அதற்கான அடையாளங் களும், புத்தர் சிலைகளும் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்தில் புத்தர் கோயில்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. அவற்றின் அடை யாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

களப்பிரர்களின் ஆரம்பக்கால ஆட்சியில் அரசு மதமாக செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம், அவர்கள் சமணம் மாறிய பின்பு, பௌத்தம் வீழ்ச்சி அடைய நேர்ந்தது. பௌத்தர்களின் இருப்பிடமான காஞ்சியில் சைவ, வைணவ மதம் செல்வாக்குப் பெற்று ஆதிக்கம் செலுத்தியபோது, பௌத்தமும் அதன் அடையாளங் களும் படிப்படியாக நலிந்து, சிதைந்து, மறைந்தது.

பயன்படுத்திய நூல்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""
1. இணையத்தளம்: http :llen. wikipedia/org/ wiki.kancheepuram
2. ஏ.கே.எஸ்.விஜயகுமார் கட்டுரை, “காஞ்சிக் கோயில்களில் உற்சவங்கள்” காஞ்சி மாவட்டக் கலைகள் தொகுதி -மணிவாசகர் பதிப்பகம், சென்னை
3. டாக்டர். மா. இராசமாணிக்கனார், தமிழ்நாட்டு வரலாறு” காவ்யா வெளியீடு, 2008,
4. டாக்டர். க. வெங்கடேசன், “முற்காலத் தமிழ்நாட்டு வரலாறு” வி.சி. பப்ளிகேஷன்ஸ், இராசப்பாளையம்,
5. Prema Nandakumar, Kancheepuram, HINDU PEDIA Website
6. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
7. C. Meenakshi “Buddhism in south India” south Indian Studies,
8. Indian Archaeology - A review 1969-70-
9. Dr. K. Sivaramalingam, Archaelogical Atlas of the Antique Remains of Buddhism in Tamil Nadu, Institute of Asian studies, Chennai, 1977,
10. T.N. Vasudev Rao, Buddhism in the Tamil country, Annamalai University, 1979
11. நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள்
12 முனைவர் சீதாராம் குருமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு
13. முனைவர் ஜி.ஜான் சாமுவேல், உலகளாவிய தமிழாய்வு ஓர் அறிமுகம். மற்றும்
14. களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.

(நன்றி:தோழர். கி.நடராசன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக