ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புராணம் என்றால் பூரிப்பு; வரலாறு என்றால் வக்கரிப்பா?



புராணம் என்றால் பூரிப்பு; வரலாறு என்றால் வக்கரிப்பா?
---------------------------------------------------------------------
வரலாற்றைச் சொன்னால் வாரிச் சுருட்டி எழுகிறார்கள். புராணங்களைச் சொன்னால் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

காரணம், வரலாறு காகப்பட்டர் கூட்டத்தின் காழ்ப்புக் காரிருள் முகத்தை வெளிச்சத்துக்கே கொண்டு வந்து விடும். புராணங்களை சொன்னால் அவர்களின் புனை சுருட்டுகள் புரோகித கூட்டத்தின் பூர்சுவா தனம் கெட்டிப்படுத்தப்பட்டு விடும். சிறுபான்மைக் கூட்டம் பெரும்பான்மை இனத்தை பக்திப் போதை ஏற்றிக் கீழே உருட்டி விடும்.

வரலாறு, கைபர் கணவாயை நினைவுபடுத்தும்; வேத புராணக் குப்பைகளோ பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் அதற்கும் கீழே பஞ்சமன் என்று நம்ப வைத்து விடும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் (அந்நாளை தேர்ந்தெடுத்துதானே பார்ப்பனப் பாசிசக் கும்பல் 450 ஆண்டு வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்து துவம்சம் செய்தது) எழுச்சி தமிழர் சில வரலாற்று உண்மைகளை முன் வைத்தார். (6.12.2017)

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் இருந்தது. அதனை இடித்து விட்டுத்தான் அங்கே பாபர், மசூதியைக் கட்டினார் என்று வரலாற்றைத் திரித்துக் கூறி பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள். அவ்விடத்தில் ராமன் கோயிலை கட்டியே தீருவோம் என்று காவிகள் களேபரம் செய்கின்றனர்.

காவிகளின் அந்தக் கண்ணோட்டத்தை பார்க்கப் போனால் எத்தனை எத்தனையோ புத்தர் கோயில்களை இடித்து விட்டு இந்துக் கடவுள்களின் கோயில்கள் கட்டப் பட்டுள்ளனவே - அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் பவுத்த கோயில்களை கட்ட சம்மதிப்பார்களா? என்ற திருமா. அவர்களின் கேள்வியில் அறிவுப்பூர்வமான சுணை இருக்கிறது.

ஏதோ பொத்தாம் பொதுவில் அவர் சொல்லவில்லை. வரலாற்று உண்மைகளை ஒளிவுமறைவில்லாமல் உடைத்துக் காட்டினார்.

சங்பரிவார் கூட்டத்திற்கு அறிவு நாணயம் இருக்குமே யானால் திருமா அவர்களின் கூற்றை ஆதாரங்களுடன் மறுக்க முன்வரவேண்டும். மாறாக பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலை அடிக்கும் கெட்ட விளையாட்டை (FOUL GAME) ஆட முயற்சிப்பது அவர்களின் அடவாடித் தனத்தையும், ஆற்றாமையையும்தான் வெளிப்படுத்தும்.

1. திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு காலத்தில் புத்தக் கோயிலாக இருந்தது என்று பேசினார் எழுச்சித் தமிழர். அதில் என்ன தவறு இருக்கிறது?

மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் கே.ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் TIRUPATHI BALAJI WAS A BUDDHIST SHRINE    எனும் ஆய்வு நூலை எழுதினாரே.

Lord vengatrama presiding deity.on the famous tirumalai hills. Popular known as balaji of tirupathi, is important vaishnava Shrine of south india. The natives of lord venkatrama has always peen a matter of dispute for centuries.

Some consider him-as Vishnu, skanda, siva. some as sakti same as skanda and some as harithra. In fact it was on old Buddhist shrine murthi itself being Buddhist; and it was taken over for bramine worship during the general fall off Buddhism he was a god of tribal Buddhist and was vaishanavized by saint and lattu sankarithzed and brahmanized by pandits in his present form.

The weapons on him are not original but provided at a lattu date . how this was brought about is captained with all historical and archeological evidence. Cult’s of vitiated of pandharpur jagannath of puri. Ayappa on sabarimala etc. which were originally Buddhists are directed and many other Buddhist shrines which was buried are destroy and the history.of india in general and south India in particular from seventh to tenth century during the period of fall in Buddhist and rise of Brahmin tirupathi in Tread.

“திருப்பதி பாலாஜி என்று அறியப்பட்ட வெங்கட்ராமன் முதன்மையான கடவுளாக உள்ளது. தென்னிந்தியாவில் திருமலை கோயில் முக்கிய வைணவக் கோயிலாக உள்ளது.  பல நூற்றாண்டுகளாக வெங்கட்ராமக்கடவுளின் இருப்பிடம் என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக இருந்து வந்துள்ளது. சிலர் விஷ்ணுவாகவும், கந்தனாகவும், சிவனாகவும், இன்னும் சிலர் கந்தனைப்போல் சக்தியாகவும், சிலர் ஹரித்ராவாகவும் கூறிவருகின்றனர்.

உண்மையில் இது ஒரு பழைமைவாய்ந்த புத்தர் கோயிலாக (புத்த விகாரமாக) இருந்துள்ளது. கருவறைக்குள் உள்ள சிலையும் புத்தரின் சிலையாகும். பல இடங்களைப்போலவே புத்த மத வீழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பனர்களின் வழிபாட்டு முறைக்கு மாற்றப்பட்டது. பழங்குடியினரின் புத்தராக இருந்த சிலை பார்ப்பனர்களால் வைணவமாக்கப்பட்டது. லட்டு பிரசாதமாக்கப்பட்டது. கருவறையில்   தற்போதும் உள்ள சிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பண்டிதர்களால் பார்ப்பன மயமாக்கப்பட்டது. தற்போது சிலையில் பொருத்தப் பட்டுள்ள கருவிகள் யாவும் தொடக்கத்தில் இருந்தவை கிடையாது. லட்டு அறிமுக காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. இவை யாவும் வரலாற்றுத்துறை, தொல்லியல்துறை ஆய்வுகளின் ஆதாரங்களின்மூலமாக  வெளியாகியுள்ளன.

பூரியில் உள்ள பந்தர்பூர் ஜெகனாதன், சபரிமலை அய்யப்பன் உள்ளிட்ட பல இடங்களிலும் இதேபோன்றே வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டன. இவை யாவும் தொடக்கத்தில் புத்த விகாரங்களாகவே இருந்தன.
இந்தியாவின் வரலாற்றில் பல இடங்களிலும் புத்த விகாரங்கள் இடிக்கப்பட்டு புதைக்கப்பட்டன. தென்னிந் தியாவில் குறிப்பாக ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் புத்த மதம் வீழ்ச்சியடைந்ததும், திட்டமிட்டு திருப்பதியில் பார்ப்பனியம் கோலோச்சத் தொடங்கியது” என்கிறார் டாக்டர் ஜமனாதாஸ்.

வைணவக் கோயில்களில் மொட்டை அடிப்பது கிடையாது.  ஆனால் திருப்பதி ஏழுமலையான் என்னும் வைணவக் கோயிலில் பக்தர்கள் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். மொட்டையாக இருப்பது என்பது புத்த மார்க்கத்தைச் சார்ந்ததே!

இந்த நூலுக்கு இந்தப் பூணூல் கூட்டம் மறுப்பு எழுதியதுண்டா?

2. அய்யப்பன் கோயில் புத்தர் கோயில் என்று சொன்னார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். ஏதோ மேம்போக்கில் கூறவில்லை. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான “பவுத்தமும் தமிழும்” எனும் நூலில் இதுகுறித்து ஆய்வு செய்து நிறுவி உள்ளாரே!

சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர். ‘அமரகோசம்‘, ‘நாமலிங்கானு சாசனம்‘ நிகண்டுகள் இதற்கு ஆதாரம். சாத்தனார் என்னும் பெயர் புத்த மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சூட்டிக் கொள்வதாகும். சீத்தலைச் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார், மோசி சீத்தனார், வடமவணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலிய சங்க காலப் புலவர்களை எடுத்துக் காட்டியுள்ள மயிலை சீனிவேங்கடசாமி, புத்தருக்கும், புத்தக மார்க்கத்தைச் சேர்ந்தவருக்கும் மத்தியில் இருந்த பெயர் அய்யப்பனுக்கு வந்தது எப்படி? சாஸ்தா என்று அய்யப்பனை அழைத்ததன் மர்மம் என்ன?

அதே போல சாத்தான், சாஸ்தா என்றால் அதன் பொருள் அய்யன், அல்லது அய்யனார் என்பதாகும். குரு, ஆசான் என்பது விளக்கம். புத்தருக்கு உள்ள இந்தப் பெயரையே அய்யனார், அய்யப்பன். இந்துக்கடவுள்களாக உருட்டல் புரட்டல் வேலையில் இறங்கினர்.

இன்னொரு கட்டத்தில் இந்த சாத்தனாரை, திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்றே கூறிவிட்டனர்.

திருநாவுக்கரசரான அப்பர் பாட்டாகவே பாடித் தீர்த்து விட்டார்.

பார்த்தனுக் கருளும் வைத்தார்

பரம்பரை பாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாமவேதங்
கூத்தொடு பாட வைத்தார்
கோமள ராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
திருப்பயற்றூரனாரே!
என்பது தேவாரப்பாடல்.

அய்யப்பனை அரிகரபுத்திரன் என்று சொல்லுவதை இத்தோடு இணைத்துப் பார்த்தால் இவர்களின் தில்லுமுல்லு திருகுதாளம், தாளம் தப்பாமலேயே தெரிந்து விடும்.

புத்தரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று மாய்மாலம் செய்ததெல்லாம் இப்படித்தான்.

புத்தரின் அறமொழிகளில் (பஞ்சசீலங்கள்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக்கட்டி பரப்பப்பட்டது. காமவிளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது. (என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா தொகுதி -4)

3. விநாயகர் என்பதும் புத்தரை உருமாற்றியதுதான் என்ற கருத்தையும் திருமாவளவன் முன்வைத்தார். புத்தருக்கு, விநாயகன் என்றப் பெயரும் உண்டு. அந்த அடிப்படையில் பிள்ளையாரை, விநாயகர் ஆக்கி அரசமரத்தடியின் கீழ் வைத்து விட்டனர்.

அரசமரம் என்பது புத்தர் அரசர் என்ற அடிப்படையில் அமைந்தது. அரச மரத்தடியில் இருந்த விநாயகரான புத்தரை இந்துக் கடவுளாக உருமாற்றி விநாயகராக்கிய (பிள்ளையார்) சூழ்ச்சி இந்த அடிப்படையில்தான்.

பழைய சைவ சமயத்தில் விநாயகர் கிடையாது. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாக புகுத்தப்பட்டது என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள் கூறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், புத்தரின் தாராதேவி கோயில் என்றும், ஏகாம்பரேஸ்வரர் கோயில் புத்தர் கோயில் என்றும், பவுத்தமும் தமிழும் என்ற நூலில், ஆய்வின்  அடிப்படையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பூரி ஜெகந்நாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தது என்று சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தை பரப்பி வந்த சாட்சாத் விவேகானந்தர்தான் (நூல்: “இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக”)

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன் னால் செய்யப்பட்டிருந்தது. அதனை ஆலிநாடர் (திருமங் கையாழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர். (சைவ சித்தாந்த கழகம் - சென்னை வெளியிட்டுள்ள ‘தஞ்சைவாணன், கோவை’, பக்கம் -7, வரிகள் 26 - 30)

திருடியவனுக்கு தெய்வாம்ச முத்திரையைக் குத்தும் இந்த சாமர்த்தியம் பார்ப்பனருக்கே உரித்தான தனிக்குத்தகையே!.

புத்தருக்கு தருமராசர் என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் இந்த தருமராசன் கோயிலை மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமான தருமராசன் கோயிலாக உரு மாற்றினார்கள்.

இன்னொரு வகையில் புத்தர் சிலைகளை சின்னத்தனமாக கேவலமாகப் பேசும் பொருளாக்கிய கொடுமையும் உண்டு.

தஞ்சாவூர் மாவட்டம், திருவலஞ்சுழியில் உள்ள புத்தர் சிலையை கடன்காரச் செட்டி என்று ஏகடியம் செய்ய வைத்தனர்.

திருஞானசம்பந்தன் என்னும் தேவாரம் பாடிய சிறுவன் பவுத்தர்களையும், சமணர்களையும் எவ்வளவு கேவலமாகப் பாடியிருக்கிறான்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியர் பேயமன்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே
என்பது தேவாரப்பாடல்.

பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களை கற்பழிக்க மதுரையில் வீற்றிருக்கும் சிவனே அருள்புரிவாயாக  என்பதுதான் இப்பாடலின் கருத்தாகும்.

16 வயதில் அற்பாயுளில் செத்துப்போன சிறுவனான, பிஞ்சில் பழுத்த இந்தப் பார்ப்பனன் இவ்வளவுக் கீழ்த்தரமாக பாடினான் என்றால் அவனின் வாரிசுகளான இந்த இந்துத்துவக் காவிக் கும்பல் என்னதான் பேசமாட்டார்கள் - எந்தக் கேவலத்தின் எல்லைக்குத்தான் செல்லமாட்டார்கள்!

எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய கோயில் திருவிழா, பிரம்மோற்சவமாக  ஆண்டுதோறும் மதுரையில் நடந்து கொண்டுதானே உள்ளது.

திருநீறு இல்லாத நெற்றியைச் சுடு, சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்று உபநிடத் திருமொழி கூறுவதை சமஸ்கிருதத்தில் கரை கண்ட மறைமலை அடிகள் கூறுகிறார். (அறிவுரைக் கொத்து - பக்கம் 17)
இந்த லட்சணத்தில் அன்பே சிவமாம்!

புஷ்யமித்திரன் என்னும் பெயர் தாங்கிய அரசன் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை (புத்த பிக்குகளின் இடம் வனங்களில் அமைந்ததால் ஆராமம் என்று அழைக்கப்பட்டது) அழித்ததோடு பல்லாயிரக்கணக்கான புத்த பிக்குகளையும் கொன்றொழித்தான்.

சுதன்யா என்னும் மன்னன் சேது முதல் இமயம் வரை உள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால் அக்கணமே அவனைக் கொன்று விடும்படி கட்டளையிட்டிருந்ததாக ‘சங்க விஜயம்’ என்னும் நூல் கூறுகிறது.

இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொண்டால் எழுச்சித் தமிழரின் தலைக்கு விலை பேசும் சக்திகளின் யோக்கியதை எத்தகையது என்பது விளங்கும். சங்பரிவார்கள் படுகொலையை பகிரங்கமாக செய்யும் பான்மையின் யோக்கியதை புலப்படும்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உருவாக்கி யுள்ள சனாதன எதிர்ப்பு பார்ப்பனீய ஒழிப்பு என்னும் ஊழிக்கனல், அத்தகைய சக்திகளை ஊதித்தள்ளிவிடும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக