மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?
தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் -
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது -
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது -
பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது -
அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது -
குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி -
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி -
பெரும் செல்வச் செழிப்பு -
மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது -
வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான் -
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள் -
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து -
வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது -
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-
இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர் -
அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது -
ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர் -
அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர் -
ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை -
தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது -
அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர் -
தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது -
ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள் -
தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம் -
நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.
நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது -
ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது -
பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு -
எல்லாவற்றையும் எரித்தது -
அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள் -
கல் பதித்த தங்க நகைகள் -
வெள்ளி நகைகள் -
முத்துக்கள் - காசு மாலை - மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.
தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது -
அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான் -
யாரைப் பற்றிப் பேச -
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள் -
அவள் முகம் மலர்ந்திருந்தது -
தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள் -
ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு -
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் -
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.
சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி -
கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது -
கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் -
என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார் -
நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். -
அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் -
எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது -
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது -
சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர் -
மாமதுரை மக்கள் .
- படித்ததில் கண் கலங்கியது.
இது உண்மை சம்பவமா ? அல்லது கதையா ?
பதிலளிநீக்கு