முன்பக்கம் மனித உரு ! பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டம் பாதேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் உள்ளது. எட்டு பெரிய குகைகளையும் பல சிறிய குகைகளையும் கொண்ட பெரியதொரு வளாகம்.
பதினாறாம் நூற்றாண்டு காலத்தவை இவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட ஒருசில சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அற்புத சிற்ப வேலைகளுக்கு இந்த தலம் புகழ் வாய்ந்தது.
நேராகப் பார்க்கும் பொழுது மனித முகத்துடன், ஏழு திருக்கரங்களும் இரு கால்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். பாதங்களின் உட்பகுதிகள் இரண்டும் பட்டுக்கொண்டிரும் அமர்ந்தநிலை.
வலப்பக்கத் திருக்கரங்களில் அம்பும் மழுவும் கொண்டும் மற்றொரு கரம் வரதஹஸ்தமாகவும் உள்ளது.
இடப்பக்கத் திருக்கரங்களில் கேடயமும் வில்லும் கொண்டு, மற்றொரு கரம் அபயஹஸ்தமாக உருத்திராக்க மாலையைக் கொண்டுள்ளது.
இப்படி மனித முகத்துடன் ஏழு கரங்கள், இரண்டு கால்கள் கொண்டு முன்பக்கத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். முன்பக்கம் பார்க்கும் பொழுது மனித முகத்தோடு காட்சிதரும் நந்தி தேவர், இருபுறமும் பக்கவாட்டில் பார்க்கும் பொழுது காளை முகத்துடன் காட்சி தருகிறார்.
காளைக்குரிய நான்கு கால்களும் வாலும் காட்டப்பட்டுள்ளன. இந்த அற்புதத் தலத்தைக் காண எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் திருவருள் கூட்டவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக