இந்த அற்புதமான சிற்பம், திருக்குறுங்குடி கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இதில் கருடன், ஒரு கையில் ஒரு ஆமையையும், மற்றொரு கையில் ஒரு யானையையும் பிடித்துக்கொண்டு இருக்கிறது. அலகில் முறிந்து விழும் மறக்கிளையை தாங்கிப் பிடிக்கின்றது. அந்தக் கிளையில் சில கிளையில் சில ரிஷிகள் தலை கீழாக தொங்கியபடி தவம் செய்கிறார்கள். இதன் விளக்கம்.
அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்திக்கிறான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்கிறான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காண்பிக்கிறார்.
யார் இந்த ஆமையும் யானையும்? விபாவசு, சுப்ரீதிகா என்று இருவர் இருந்தனர். இளையவன் சுப்ரீதிகா தமையன் விபாவசுவிடம் சொத்துகளைப் பிரித்துத் தருமாறு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சொத்துப் பிரிவினை நடந்தாலும், அதன் பிறகும் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபிக்கிறான். சுப்ரீதிகா, தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபிக்கிறான்.
யானையாகவும் ஆமையாகவும் ஆனபின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொல்கிறார் கஷ்யபர்.
கருடன் பாய்ந்து சென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையான் ஆமையின் கழுத்தையும் பிடிக்கிறான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடுகிறான். இப்படியே பறந்து பறந்து சென்று கடைசியில் ஒரு ஆலமரத்தில் ஏறி அமர்கிறான் கருடன்.
ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர். வால்கில்யர்கள் பிக்மி வகை ரிஷிகள். மிகச் சிறிய பரிமாணம் உடையவர்கள். சொல்லப்போனால் கருடன் பிறப்புகே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த ரிஷிகள் கீழே விழுந்துவிடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக்கொள்கிறான்.
அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்.
(ஆதாரம் : கருட புராணம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக