#சித்திரையும்_பூட்டியநல்லேரும்
சித்திரை 1-ம் தேதி தமிழ் வருடபிறப்பு என்று நினைவில் இருப்பதை விட நல்லேரு பூட்டுற நாளா தான் எனக்கு தெரியும்.
விடியற் காலையிலேயே ஏர் கலப்பை, மாடு ஓட்டுற குச்சி, விதைகள் எல்லாம் கலந்த கலவை கொண்ட கூடை, கொஞ்சம் மாட்டு எரு, ஒரு வாளி நீராறம் எல்லாத்தையும் திண்ணையில் வச்சு, வெல்லம் ஏலக்காய் போட்ட பச்சரிசியை வாழை இலையில் படைத்து அதோட அவுலு, வாழைப்பழம் வைத்து சாமி கும்பிட்டுட்டு அப்பா ஏர்கலப்பையை எடுத்துக்க, அண்ணன் வண்டிமாட்டை புடிச்சுகிட்டு முன்னாடி போக, தம்பி வம்பட்டியையும் எரு இருக்குற கூடையையும் எடுத்துக்கிட்டு அவர்களை தொடர்ந்து போவான்.
"ஏய்…. ஆயி அந்த விதைக் கூடையை எடுத்துக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி போ", என அப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் விதை கூடையோட அப்பாவுக்கு முன்னாடி போய் நிப்பேன். எல்லாருக்கும் வழிகாட்டியா விதையை தூக்கிட்டு முன்னாடி போகும்போது ஒரு கெத்து வரும் பாருங்க…அது தனி உணர்வு!
குடும்ப தலைவியான அம்மா கடைசியா நீராற வாளிய தூக்கிக்கிட்டு வருவாங்க.
அப்பா, அண்ணன், தம்பி மூணு பேரும் ஏர் ஓட்டிட்டு பிறகு வரப்பு வெட்ட, நான் விதை தெளிப்பேன். அந்த வருட வேளாண்மையில் தொடக்க நாளாக அமையும். கடைசியாக அம்மா கொடுக்கிற நீராகாரத்தை குடிச்சுட்டு வீடு வந்து சேருவோம்.
நாங்க சித்திரை முதல் நாள் கோவிலுக்கு போனதில்லை. வடை பாயசத்தோட சாப்பிட்டதும் இல்லை. நல்லேரு பூட்டிட்டு வந்த பிறகு மாரியம்மன் கோவிலுக்கு போய் சேவல் அறுத்து, பொங்கல் வச்சுட்டு வந்து கறிச்சோறு சாப்பிடுவோம்.
இது எங்க வீட்டு பழக்கம் மட்டுமல்ல, எங்கள் காவிரி டெல்டா பகுதி கிராமங்களின் வழக்கம். தஞ்சைப்பகுதி கிராமங்களின் வாழ்வியலான வேளாண்மையோடு தொடர்புடைய சித்திரை முதல் நாளை, தமிழ் பெயரே இல்லாத ஒரு பெயரை வெச்சு தமிழ் வருடப்பிறப்புனு சொல்லி, இராத்திரி 12 மணிக்கே கோவில்ல மணி அடிச்சு காசு பாக்குறது ஒரு பக்கம். தமிழ் வருடப்பிறப்பு ராசிபலன் சொல்றேன்னு வசூலிக்கும் கூட்டம் மறுபக்கம்.
இதுல கொடுமை என்னன்னா..? இதுதான் தமிழ் பண்பாடு என மக்களிடம் விளம்பரம் பன்றாய்ங்க பாருங்க அதுதான்.
தலைமுறை தலைமுறையா நாங்க பூட்டுற நல்லேரும், மாரியம்மன் கோவிலில் வைக்கிற பொங்கலும், அறுக்குற சேவலும் தமிழர்களின் பண்பாடு இல்லையா..?
தஞ்சை டெல்டா பகுதியில் சித்திரை முதலுக்கு பூட்டுற நல்லேரு தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அந்த வருட உணவுத் தேவைக்கான தொடக்க நாள்.
நம் வாழ்வியலோடு தொடர்புடையது நமது பண்பாடு என்பதை நாம் உணர வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக