பல்லவர் காலத்தில் எழுச்சி பெற்ற தேவதாசிகள்
சமூகத்தில் பரத்தன்மை, மிகப் பண்டைய கால முதலே இருந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவராக வாழ வேண்டும் என்ற கோட்பாடு மிகப் பிற்காலத்திலேயே வழக்கத்துக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் பரவிய பின்னர் வந்த சிந்தனை என்றும் சொல்லலாம். ஏனெனில், பாலியல் தொடர்பு சம்பந்தமாக அம்மதம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பாவத்துக்கு பெண்ணே காரணம் என்று போதித்தது. பிரம்மச்சரியத்தை ஊக்குவித்தது. காமம் சாத்தானின் வேலை எனப் போதித்தது.
எனினும் ஒரு ஆணுடன் அல்லது பெண்ணுடன் மாத்திரமே காலம் முழுவதும் கழிக்க வேண்டும் என்ற விதி, உண்மையில் மனித இயல்புடன் ஒத்துப்போவதாக இருக்கவில்லை. எனவே களவொழுக்கம் பிறந்தது. மனைவி இருக்கையில் அவள் அறியாமல் பிற பெண்களுடன் ஆண் தொடர்பு வைத்துக் கொண்டான். காலப் போக்கில் அதற்கு சமூக அங்கீகாரமும், கௌரவமும் கிடைத்தது. ஆண்களுக்கு இந்த 'சேவை'யை ஆற்ற ஒரு தனிக்குலமும் தோன்றியது. பிற்காலத்தில் இதை ஒரு கலையாகவும் சிருங்கார சுவையுடனும் முன்னெடுத்துச் செல்ல இன்னொரு சமூகப் பிரிவு கடவுள் பெயரால் உருவானது. அதுதான் தேவதாசி குலம்.
இங்கே இன்னொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும்.
ஒரு பெண் போதாது என ஆண் வெளியே சென்றது போலவே திருமணமான பெண்ணும் பிற ஆண்களை நாடிச் சென்றாள். ஆனால் இது குடும்ப மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இறுதிவரை சமூக அங்கீகாரம் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. நாகரிக முதிர்ச்சியும் சுதந்திரமும் கொண்ட மேற்கத்திய சமூகங்களினாலும், இன்றைக்கும்கூட பெண் கணவன் அல்லாத பிற ஆணுடன் பாலியல் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான எளிமையான காரணம், ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் கணவனுக்கு 'துரோகம்' செய்ய அனுமதி கிடையாது என்பதுதான்.
ஒரு பெண் கணவனுடன் மாத்திரமே பாலியல் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டுக்கு எதிராகக் கிளம்பிய பெண்ணின் சமூகக் குரலே தேவதாசி குலம் இந்தியாவில் தோன்றுவதற்குக் காரணம் என்ற உளவியல் காரணத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தேவதாசி குடும்ப வரையறைக்குள் வரமாட்டாள். அவள் திருமணம் செய்வதில்லை. ஆனால் எவரை வேண்டுமானாலும் கணவரைப் போல கருதி வாழ முடியும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும். அக்குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்களே தவிர, தந்தை வழியாக அல்ல. பரத நாட்டியத்தை பரத முனிவர் தோற்றுவித்தார் என்றும் அது தெய்வீகக் கலை என்றும் வர்ணிக்கப்பட்டாலும் இவை ஆதாரமற்ற கட்டுக்கதைகளே. விநாயகர் தந்தத்தை ஒடித்து பாரதக்கதை எழுதினார் என்றும் பாற்கடலைக் கடைந்து அமுது எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுவதில் எவ்வளவு உண்மை இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையே, பரதம் தெய்வீகக் கலை என்பதிலும் உள்ளது. பரத்தையர் ஆடிய நடனம் என்பதாலேயே அதற்கு பரத நாட்டியம் என்ற பெயர் வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தேவதாசி முறை உச்சத்தில் இருந்தது எனக் கூறப்படுகின்ற போதிலும் அதற்கு முன்னர் பல்லவர் காலத்திலும் இம்முறை பரவலாக நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் இறை சேவைக்காக தானமாக வழங்கப்பட்டனர். திருப்பள்ளி எழுச்சி முதல் இரவு நடை சாத்தப்படுவது வரையிலான கோவில் காரியங்களில் இக்கோவில் மகளிர் பங்கெடுத்துக் கொண்டனர்.
இப்பெண்கள் ஆடிய நடனம் ஒரு ஒழுங்குமுறை கொண்டதாக இருக்கவில்லை. இன்றைய பரத நாட்டிய நடனமணிகள் அணியும் ஆடைகளைப் போன்ற ஆடைகளை அவர்கள் அணியவில்லை. அரசனையும், கோவிலுக்கு வரும் பிரதானிகளையும் பக்தர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஆட வேண்டியிருந்தது.
ஆண்டவனுக்கு அளிக்கப்படும் எதுவும் மாசு மறுவற்றதாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் பூக்கள், பறவைகள் பறப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது பனிப்புஷ்பயங்களாக. நெருப்பு வடிவில் மோசேசுக்கு காட்சிதரும் கடவுள், 'உன் காலணிகளைக் கழற்றிவிட்டு வா' என்று கூறியதாக பைபிளில் உள்ளது. இந்த வகையிலேயே பூப்பெய்திய பெண்களை 'புது மலர்களாக' அரசர் காலத்தில் 'ஆண்டவன் சேவை'க்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விலை மகளிர் என்ற பதம் பரத்தையர்களைக் குறிப்பது போலவே தேவதாசியர் ஆடல் மகளிர் என அழைக்கப்பட்டனர்.
தென்னாட்டு கோவில் வரலாற்றில் தேவதாசியர் கோவில்களில் நடனமாடுவது நீண்ட கால பாரம்பரியம் கொண்ட வழக்கம். இன்றைக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்துவதும், குத்து நடனத்துக்காக பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. திறப்பு விழாக்கள், வைபவங்கள், விளம்பரங்களில் பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். எந்த மனநிலையில் ஆண்கள் அல்லது ஆதிக்க சக்தியினர் பெண்களைப் பயன்படுத்துகிறார்களோ அவ்வாறே அன்றும் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த மனநிலையை புரிந்து கொண்டால் தேவதாசி மரபு எப்படி, ஏன் உருவாகியிருக்க வேண்டும் என்பதை எளிதாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தென்னாட்டை எடுத்துக் கொண்டால் சங்க காலத்தில் இருந்து ஆடல் மகளிரை சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான சான்றுகள் உள்ளன. இவ்வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கிறது. அஸாமில் 'நாடிஸ்' என்றும், மகாராஷ்புரத்தில் 'பாசவி' என்றும், உத்தர பிரதேசத்தில் 'பாவினி' என்றும் ஒரிசாவில் 'மகிரி' என்றும், கர்நாடகத்தில் 'சூலி' என்றும், ஆந்திராவில், 'விலாசினி', 'மாதங்கி', 'கூலி' என்றும், கேரளாவில் 'மகாரிஷ்' என்றும் கோவாவில் 'நாயகின்' என்றும் தேவதாசியர் அழைக்கப்படுகின்றனர்.
அக்காலத்தில் இந்து கோவில்களில் மட்டுமல்லாது பௌத்த கோவில்களிலும் தேவரடியார் சேவை புரிந்து வந்திருக்கிறார்கள். குஜராத்தில் நான்காயிரம் விகாரைகளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடல் மகளிர் பணியாற்றி வந்ததாகவும் அவர்கள் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியதாகவும் சான்ஜிகுவா என்ற சீன யாத்திரிகர் பதிவு செய்திருக்கிறார்.
கி. பி. 1024 இல் கஜினி முகமது டில்லி சோமநாதர் ஆலயத்தை சூறையாடியபோது அங்கே 500 நடன மகளிர் இருந்ததாக ஒரு செய்தி உள்ளது.
சுசீந்திரம் கோவிலில் 72 தேவதாசியர் பணியாற்றி வந்ததாக புக்னன் என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். திருச்செந்தூரில் 121 தேவதாசி குடும்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் மறக்குடித்தெரு என்ற வீதியில் வசித்து வந்ததாகவும் அக்கோவிலின் தாமிரப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். வைசாலி மன்னர் பல்லால தேவர் காலத்தில் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் தேவதாசியரே வசித்து வந்ததாகவும், ஆந்திராவின் நாகலாபுரத்தில் நூற்றுக்கணக்கான தேவதாசியர் வாழ்ந்து வந்தனர் என்றும் 'தேவதாசியர் மரபு' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் காலத்திலேயே தேவரடியார் மரபு தமிழகத்தில் தோற்றம் பெற்றது என்று கூறப்படுகின்ற போதிலும் வரலாற்றாய்வாளர்கள் அதை மறுக்கின்றனர். பல்லவர் காலத்தில் இருந்தே தேவரடியார் மரபு கோவில்களில் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
பல்லவர் காலத்திலும், ராஜராஜசோழன் காலத்திலும் அதன் பின்னரும் இந்த ஆடல் மகளிர் இரு பிரிவினராக அறியப்பட்டனர். ஒரு பிரிவின் பெயர் ராஜதாசி. மற்ற பிரிவு தேவதாசி. அரசவையில் நடனமாடும் பெண்கள் தேவதாசிகளாக இருந்தாலும் அவர்கள் ராஜதாசிகள் என்றே அழைக்கப்பட்டனர். ராஜதாசியாவதற்கு நல்ல நடன தேர்ச்சியும் குரல்வளமும் அழகும் இருக்க வேண்டும். ஆனால் அரசன் முன்னிலையில் நடனமாடும் பெண்கள் கோவில்களில் நடனமாட முடியாது என்றொரு கட்டுப்பாடு இருந்தது. அன்றைய சமூக அமைப்பில் கடவுளுக்கு அடுத்த இடத்தில் அரசன் இருந்ததால் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் ஆண்டவன் முன்னிலையில் நடனமாட முடியாது என்ற கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
பல்லவர் காலத்தின் பின்னர் தென்னாட்டில் களப்பிரர் வருகை இடம் பெறுகிறது. களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனக் குறிப்பிடுவார்கள். சமயம் நலிவுற்றதால் இருண்ட காலம் எனக் குறிப்பிடப்படுவதாக சொல்லப்பட்டாலும் இதற்கு ஒரு எதிர்வாதமும் இருக்கிறது.
கன்னடர்களே களப்பிரர் என அழைக்கப்பட்டனர். தமிழகத்தை களப்பிரர் மன்னர்கள் ஆட்சி செய்தபோது சைவ, வைணவ சமயங்கள் நலிவுற்றன. களப்பிரர் அரசர்கள் பௌத்த மற்றும் சமய சமயங்களையே ஆதரித்தனர். அவை தமிழர் மத்தியில் எழுச்சி பெற்றன. இவ்விரு சமயங்களும் பெண்களை மகிமைப்படுத்தவில்லை. முக்தி மார்க்கத்துக்கு இடர் என அவை போதித்தன. எனவே தேவதாசி முறை களப்பிரர் காலத்தில் ஊக்குவிக்கப்படவில்லை. ஆறாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் அரசனின் காலத்திலும் அதன் பின்னருமே சைவமும் வைணவமும் புத்தெழுச்சி பெற்றதோடு வாடிக் கிடந்த கோவில்களும் மீண்டும் கலைக்கூடங்களாக மாறின.
சேரி பரத்தை, காதற் பரத்தை, காமக் கிழத்தி என்பதாக அழைக்கப்பட்ட பரத்தையர், பல்லவர் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றனர். அவர்கள், தத்தை, விகுருதை, பிரத்தியை, பக்தை, இருதை, அலங்காரி, உருத்திரகணிகை என ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டனர். உருத்திரகணிகை குலத்தவரே கோவில்களில் பணியாற்றும் தகுதி பெற்றனர். நன்றி தமிழ் வம்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக