இன்றும் தொடரும் தேவதாசி கொடுமைகள்… யார் இவர்கள்? வரலாறு என்ன?
தேவதாசிகள் என்ற முறை இந்தியாவில் மிகவும் கொடிது என வன்மையாக எதிர்க்கப்பட்ட ஒரு விடயமாகும். இன்றளவும் கூட வடகிழக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான இடங்களில் இந்த தேவதாசி முறை நடப்பில் இருப்பதாகவும், இதை தடுக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் செய்திகளில் காண்கிறோம். இளம்பெண்களுக்கு இழைக்கப்படும் மிக கொடூரமான, குரூரமான கொடுமை என பேசப்படும் இந்த தேவதாசி முறைக்கு தமிழகத்தில் நீண்ட நெடிய வரலாறு உண்டு.
தேவதாசி முறை என்பது சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவார்கள் என்றும் பின்பு இப்பெண்களை அதிகார வர்க்கத்தினர் தங்களது பாலியல் இச்சைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள் என்றும் படித்திருப்போம். ஆனால் உண்மையில் இவர்கள் யார்? யாரால் இவர்கள் உருவாக்கப்பட்டார்கள்? பின்னாளில் எவ்வாறு தீண்டு பொருளாக மாற்றப்பட்டார்கள்? என்பதை அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தஞ்சை பெருவுடையார் திருக்கோயில்
சோழர்கள் காலம்:
சோழர்கள் காலத்தில் கோயில்கள் சீர்த்திருத்தத்தின் போது, ராஜராஜ சோழனால் தேவதாசி முறை என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டதாக நாம் அறிவோம். பெருவுடையார் கோவிலுக்கென ப்ரித்யேக நாட்டியக் குழுவை கட்டமைக்க முயன்ற சோழன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடற் கலையில் சிறந்து விளங்கும் நானூறு பெண்களை வரவழைத்து ஆஸ்தான நாட்டியக்குழுவாக நிர்ணயித்தார். பல்வேறுபட்ட சாதிகளில் இருந்து வந்திருந்த இப்பெண்கள் பின்னாளில் ஒரே சாதியினராக ஒன்றிணைந்தனர்.
சித்தரிக்கப்பட்ட தேவதாசி பெண்
யார் தேவதாசி?
சமூகமட்டம் உருவானபோதே அவர்களுக்கான சமூக விதிமுறைகளும், சடங்குகளும் வகுக்கப்பட்டன. ஒரு தேவதாசி பெண் தனது வாழ்வில் ஆறு முக்கிய பகுதிகளை சந்திக்க வேண்டும். முதலில் அவர் சடங்குப்பூர்வமான திருமணம் செய்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக அவரை அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு நடைபெறும். மூன்றாவது நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப் படுவார். நான்காவதாக அரங்கேற்றம் நடைபெறும். பின்னர் ஐந்தாவதாக அவர்களுக்கான கடமைகள் வரையறுக்கப்படும். இறுதியாக அவர் பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கான சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் கௌரவிக்கப்படுவார்கள். ஒரு சாதாரண பெண்ணாகப்பட்டவள் இறையடியாராக மாறுவதற்கான சடங்குகள் இவை.
‘தேவ’ என்றால் இறைவன்; தாசி என்றால் அடியார்; இறைவனுக்கு அடியார் என்பதால் தேவதாசிகள் என பெயர் பெற்றனர் இவர்கள். கோயில் திருப்பணிக்காக, இறை சேவைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவதாசிகள், பக்தி இலக்கியம் செழித்திருந்த ஆறாம் நூற்றாண்டு காலங்களில் மக்களால் மிகுந்த மரியாதைக்குரியவர்களாக பார்க்கப்பட்டனர். பாடல்கள் பாடுவதும், இசைச்சரங்கள் வாசிப்பதும், ஆடல் புரிவதுமே இந்த தேவதாசிகளின் பொதுவான கடமையாக இருந்தது. இதுமட்டுமின்றி இந்த தேவதாசிகள் மக்களின் சமூகசேவகிகளாகவும் செயல்பட்டிருக்கின்றனர். சீர்திருத்தப் பணிகள், உதவிக்கரம் நீட்டுவது போன்ற சேவைகளிலும் ஈடுபட்டுள்ளதாக வரலாறு உரக்கச் செப்புகிறது.
தமிழ்நாட்டின் பண்டைய வரைபடம்
வரலாற்றுக் கொலை:
ஆனால் காலப்போக்கில் இவர்கள் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகி, மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சமூகமாக வாழ்ந்த இப்பெண்மணிகளை சீரழித்து, தேவதாசி முறையின் நோக்கத்தை திசைதிருப்பியது அந்த மேல்மட்ட சமூகம். இவர்களுடைய கடமையின் நீளம் சற்று நீட்டிக்கப்பட்டு அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் பாலின்பம் வழங்குவதாக மாற்றப்பட்டது. இறைவிகளும் அவர்களின் சமூகப் பெண்களும் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டனர். அந்த சமூகத்தில் பிறந்து வளரும் பெண் குழந்தைகள் எப்போது வயதுக்கு வரும் என அரவத்தின் கண்கள் தொடர்ந்து காத்திருக்கும். திரட்டி நடக்கும் வீடுகளில் அவர்கள் கூடியிருப்பார்கள். நிகழ்வு முடிவதற்குள் யாரோ ஒரு ஆண்மகன் பொற்காசுகளையும், பரிசுகளையும் கொடுத்து அவளை வாங்கிச் சென்றுவிடுவான்.
இறைவனின் நாமத்தை போற்றிப் பாடிக்கொண்டிருக்க வேண்டியவர்கள், இறைத்தொண்டு மேற்கொண்டிருக்க வேண்டியவர்கள், மக்கள் சேவையை செய்துகொண்டிருக்க வேண்டிய ஒரு சமூகம் திட்டமிடப்பட்டு இந்த மாபெரும் வரலாற்றின் கண் முன்னே சீரழிக்கப்பட்ட அவலம் இங்கே நடந்தேறியிருக்கிறது. ஏதோ ஒரு சமூகம் வாழ்ந்து மடிந்த எச்சமாக இதை எண்ணிவிட முடியாது. தமிழர் என்றொரு இனத்தில் உருவாக்கப்பட்ட உயர்ந்ததொரு முறையானதை கரையான்கள் புற்று கட்டி அரித்தொழித்த வரலாற்றுக் கொலையாகவே இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்ய விரும்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக