திங்கள், 18 ஜூன், 2018

நான் இந்துவல்ல நீங்கள் ....? எனும் தொ.பரமசிவம் அவர்களின் இந்நூலையொட்டி சில கருத்துகள் .


நான் இந்துவல்ல நீங்கள் ....? எனும்  தொ.பரமசிவம் அவர்களின் இந்நூலையொட்டி சில கருத்துகள் .

இந்த நூல் முதண்மையாக விளக்கும் செய்திகள் என்னவெனில் ...
- இந்து என்ற சொல் தொண்மையானதோ, பழமையானதோ அல்ல, அது வெள்ளைக்காரர்களால் 200 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட பெயர்.
- இந்து மதம் என்று வந்ததால் பெரிதும் பயனடைந்து வந்தவர்கள் பார்ப்பனர்.
-- 1949 இல் கோவில் நூழைவுச் சட்டம் என்று வந்ததே பார்ப்பனரின் உயர்சாதி ஆதிக்கத்தால் தான்.
- பார்ப்பனர் ஆதிக்கத்தில் உள்ள பெரு தெய்வ கோவில்கள் சாதியை கடைபிடிக்கிறது. மதுரை வீரன் போன்ற சிறு தெய்வங்கள் ,அதை வணங்கும் மக்கள் மீது தீண்டாமை கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.
என்பன போன்றவை இந்நூல் விளக்குகிறது .

இந்து என்ற சொல் எப்படி வந்தது என்று இந்நூல் விளக்கும் சில பத்திகள்.....

" இந்து என்ற சொல் இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை.  இதிகாசங்களிலும் கிடையாது .இந்தச் சொல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே ஐரோப்பியர் கீழ்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல்.
இந்த சொல்லுக்கான மரியாதை என்ன என்று கேட்டால் , இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல் என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது .

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே தெரியும் .  அதிலே " வெள்ளைக்காரர்கள் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம் " என்று சொல்கிறார் . இந்து என்று வெள்ளைக்காரர்கள் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும் தான். எப்படியென்றால் அந்த சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிகாலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள் . 1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர்.வில்லியம் ஜோன்ஸ் (இந்த பெயரை இன்றும் ஆர்எஸ்எஸ்-காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுது தான் Hindu என்ற சொல் முதன்முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது . இந்த சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது . ஆரிய மொழியிலும் கிடையாது ."
என்கிறது இப்பகுதிகள்.

அடுத்ததாக இந்து என்ற சொல்லை வெள்ளைக்காரர்கள் சிந்து நதிக்கு இந்தப்புறம்  வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் என்கிறார் . சிந்து என்ற சொல்லே உச்சரிப்பில் இந்து என்று வந்ததாக சொல்வார்கள் .

அடுத்ததாக மதுரை வீரன் போன்ற சிறு தெய்வ வழிபாடு என்பதே தமிழர்களின் வழிபாடாக இருந்து வந்துள்ளது . இதில் பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாத முன்னோர்களை வணங்கும் சிறு தெய்வ, குல தெய்வ வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளது . பார்ப்பனர் ஆதிக்கத்தில் உள்ள பெரு தெய்வ வழிபாடுகளே மக்களை சாதி ரீதியாக கூறு போட்டு விலக்கி வைக்கிறது . கோவில் வாசல் வரை ஒரு சாதியினரும், கோவில் பிரகாரம் வரை ஒரு சாதியினரும், கருவறை வரை ஒரு சாதியினரும் புழங்கும் தீண்டாமை முறையை வகுத்து வைத்துள்ளது. இது குறித்து கேள்வி பதில் வடிவில் வரும் ஒரு பத்தி...

" நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கோயில் என்ற அமைப்பே சாதிகளைக் காப்பாற்றும் முறைபோன்று தோன்றுகிறதே?
ஆம். 1949- இல் கோயில் நுழைவுச் சட்டம் வருகிற வரைக்கும் கோயில் என்ற நிறுவனம் சாதியை முழுமையாக காப்பாற்றும் அமைப்புத்தானே. கோயில் நூழைவுச் சட்டம், தடை செய்யப்பட்ட சாதியார், கோயிலினுள் நூழையலாம் என்பது தானே. இன்றைக்கு நாம் அனைவரும் உள்ளே போய் வணங்கினாலும் கூட மதுரை வீரன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்திற்கு வெளியே தான் இருக்கிறது .அதேபோல மதுரை வீரனை வணங்கும் சாதியார் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்."
என்கிறது .

சாதிக்கொரு நீதி, தொழில், குல தருமம், வருணசிரம தருமம் என்று போதிக்கும் பார்ப்பனரின் நடத்தை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகிறது இப்பத்தி....

"அவரவர் தருமம் என்கிறார்கள் . அதன் அர்த்தம் என்ன?.
 இப்படி சொல்கின்ற பார்ப்பனர்களின் ஆசைப்படி அவரவர் தருமம் என்றால்  தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் . பிராமணர் வேதம் ஒதிக் கொண்டிருக்க வேண்டும் . பிராமணர்கள் வேதமும் ஒத வேண்டும் .
அரசியலும் செய்ய வேண்டும் . சமூகத்தில் மிக உயர்ந்த பதவிகளாகிய தலைமை அமைச்சர் பதவியிலோ, குடியரசுத் தலைவர் பதவியிலோ புகழ்பெற்ற மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ இருக்கவேண்டும். பேருந்து போக்குவரத்து பெருந்தொழிலாக மாறியபோது பார்ப்பனர்கள் அதற்குள் நூழைந்து முதலாளிகள் ஆனார்கள். பட்டறைத் தொழில் பார்ப்பனர்களின் பரம்பரை தர்மத்துக்கு உடன்பாடா? இதுதான் அவரவர் தருமம் என்பதற்கான உண்மையான அர்த்தம்."
என்கிறது இப்பத்தி.

மேலும் இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு சாதிய அமைப்பிற்கு மதம் என்கிற பெயரை போட்டு மத அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளனர் .ஆனாலும் அவர்களால் இந்து என்றால் யார் என்பதற்கான நேரிடையான வரைவிலக்கணத்தை கொடுக்கமுடியவில்லை. அப்படி ஒரு வரைவிலக்கணம் கொடுத்தால் அது சாதி பிரிவுகளைத், தீண்டாமையை, உயர்சாதி ஆதிக்கத்தை , பார்ப்பனர் ஆதிக்க தருமங்களை சொல்ல வேண்டி வரும் என்பதால்
 "கிறிஸ்தரல்லாத இசுலாமியரல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள்" என்று சட்டத்தில் எழுதிக் கொண்டுள்ளனர் .

ஆக மொத்தத்தில் இந்து மதம் என்பதை பார்ப்பனர்கள் உருவாக்கவில்லை . இந்த மதத்தின் குருமார்கள் என்று சொல்லப்படுவது போல அவர்கள் இல்லை. அவர்கள் உருவாக்கியதெல்லாம் பார்ப்பனர் சாதியினரின் உயர்வுக்காக, மேலாண்மைக்காக , ஏற்றதாழ்வான சாதிய சட்டங்களை வகுத்து பலனடைந்து வந்தனர். இந்த பல நிலை மக்களை ஒன்று படுத்தி இந்து என்ற பொது பெயர் கொடுத்து, இதன் தலைமையாளர்களாக பார்ப்பனரை ஆக்கியதே வெள்ளையர்கள் தான் என்பது விளங்கும் .

ஆக இதே போல் வெள்ளைக்காரர்கள் பல சாதியினரை இணைத்து இந்து என்று பெயரிட்டதைப் போல , பல தேசிய இனங்களை பலாத்காரமாக ஒன்றிணைத்து இந்தியா என்று பொது பெயரிட்டனர். இந்து என்கிற பொது பெயரால் எப்படி பார்ப்பனர் பலனடைந்தார்களோ, அதேபோல இந்தியா என்கிற அமைப்பாலும் பார்ப்பானர் பலனடைந்து வருகிறார்கள்.

 இந்து என்பதற்கும் இந்திய தேசியம் என்பதற்கும் இடையான உறவை, பார்ப்பனிய அடிப்படையை புரட்சிகர இளைஞர் முன்னணி , தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் இந்தியாவில் தேசிய பிரச்சினையும் சனநாயகப் புரட்சியும் நூலில் இருந்து சில பத்திகள்......

" இந்திய தேசத்தின் தந்தை காந்தி கூறினார் . நான் ஒரு சனாதன இந்து. ஏனெனில் முதலாவதாக நான் வேதங்களை நம்புகிறேன் , உபநிடதங்களை நம்புகிறேன் , புராணங்களை நம்புகிறேன் , மற்றும் எல்லா இந்துமத ஆதார நூல்களையும் நம்புகிறேன் , எனவே அவதாரங்களையும், மறுபிறவியையும் நம்புகிறேன் . இரண்டாவதாக நான் வர்ணசிரமதர்மத்தை இன்றைய வடிவத்தில் அன்றி வேதங்கள் கூறியிருப்பது போல நம்புகிறேன் . மூன்றாவதாக நான் பசுவதைத் தடையை நம்புகிறேன் , நான்காவதாக உருவ வழிபாட்டில் நான் நம்பிக்கையற்றவனாக இல்லை. "

தேசத்தந்தையின் நம்பிக்கைகளுக்கும், விருப்பத்துக்கும் மறாகவா ஒரு தேசம் உருவாகிவிட முடியும்?  இந்திய தேசம் என்பதன் சாரம் இந்துப் பார்ப்பனியமே என்பதை எல்லா இந்தியத் தேசியத் தலைவர்களுமே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய சமுதாயத்திற்குப் பொதுவான அம்சம் இந்துத்துவா என்ற உணர்வு தான்" என்றார் திலகர். " இந்தியாவில் இன்றுள்ள தேசிய இயக்கத்தின்  ஆன்மீக அம்சம் முழுக்க முழுக்க வேதாந்தச் சிந்தனையிலிருந்து பெறப்பட்டது தான்" என்றார்  லஜபதிராய்.  " இந்திய தேசிய இனம் வளர்க்க முற்படும் ஆன்மீகம் என்பது அடிப்படையில் இந்து ஆன்மீகம் தான்" என்கிறார் அரவிந்தர்.

இந்தியாவில் இன்றுவரையில் உள்ள தேசிய இயக்கம் என்பது அடிப்படையில் இந்து இயக்கம்தான்" என்கிறார் விபின்சந்திரபால்.  "இந்து மதம் என்று அழைக்கப்பட்ட பார்ப்பனியமே இந்திய தேசிய கலாச்சாரம்  அதுவே தேசிய உணர்வுகளுக்கு அடிப்படையாயிற்று...  தொன்மையான பார்ப்பனிய சிந்தனைகளும், நம்பிக்கைகளுமே இந்திய தேசிய மறுமலர்ச்சிக்கான அடையாளமாயின" என்றார் நேரு.

காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் இந்தியத் தேசியத்தின் இந்து பார்ப்பனிய அடிப்படையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மட்டுமல்ல  அவர்கள் முற்றமுழுக்க தரகு முதலாளிகள் நிதியில் தான் இயங்கி வந்தார்கள் என்பதை காந்தியே ஒப்புக்கொண்டார், இதை அம்பேத்கார் "காந்தியும் காந்தியமும்" என்ற நூலில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கையில் கீதை, நாவில் இராம ராஜ்யம்  வந்தே மாதரம் ஜெபம், இவற்றோடு தரகு முதலாளி பிர்லாவின் மாளிகையில் வாசம். இப்படியிருந்த காந்தி தான் இந்திய தேசத்தின் தந்தை என்ற உண்மை இந்திய தேசித்தின் தரகுப் பார்ப்பனிய அடிப்படையை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா?.

இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தியைத் திணித்ததும் இந்த தரகு முதலாளித்துவ பார்ப்பனிய ஆதிக்க கூட்டே.
தரகு முதலாளிகளுக்கு த் தமது அனைத்திந்தியச் சந்தை நலனைக் காக்கும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஒரு பொது மொழி அவசியம். அதேநேரத்தில் அந்த பொதுமொழி இந்து பார்ப்பனியப் பண்பாட்டைப் பாதுகாக்க கூடியதாக இருப்பத அவசியம்."
என்கிறது இந்நூல்.

ஆக மொத்தத்தில் பல்வேறு தேசிய இன மக்களை சாதிகளாக கூறுபோட்டு பார்ப்பனிய வர்க்கங்களின் மேலாண்மையை நிறுவும் நோக்கம் கொண்டே இந்து என்கிற சொல்லை பார்ப்பனர் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல பல தேசிய இனங்களின் அடையாளத்தையும் அரசுரிமையையும் பறித்தே இந்திய தேசியம் என்கிற பொது தேசியத்தை கட்டமைத்து அதில் பார்ப்பனிய, தரகு முதலாளிய வர்க்கங்களின் நலனை, மேலாண்மையை , ஆதிக்கத்தை தமிழ்தேசிய இனம் உட்பட தேசிய இன மக்கள் மீது பார்ப்பனியம் நிறுவி வருகிறது, அடிமைப்படுத்தி வைத்துள்ளது.
எனவே நாம் இந்துவும் அல்ல, இந்தியனும் அல்ல, நாம் தமிழர்கள் , தமிழ்த்தேசிய இன மக்கள் என்று உரத்து முழங்க வேண்டிய தருணமிது என்பதே இந்நூல் வாசிப்பினுடாக பெறப்படும் செய்தியாக உள்ளது எனலாம் .
      _ தோழர் மறைமலை முகநூல் பதிவு

1 கருத்து: