கொட்டும் மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் மரங்கள் அழியும், சில சமயம் எதிர்பாரா விதமான விபத்தில் அருவிகளில் உயிரிழப்புகள் ஏற்படும் இவ்வாறு தானே நாம் அறிவோம். ஆனால் இங்கே ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள் அலறுகின்ற விசயம் உங்களுக்குத் தெரியுமா ?. ஆமாங்க, அந்த அருவிக்கு மேல காகம் பறக்கவே பயந்து நடுங்குதுன்னா பாருங்களேன். இதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் விட்ட சாபமே என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள். சரி வாங்க, அந்த அருவி எங்க இருக்கு, என்னவென்ன மர்மங்களையெல்லாம் கொண்டுள்ளதுன்னு பார்க்கலாம்.
காகங்களை மட்டும் இல்லைங்க, பொதுமக்களையும் அச்சுறுத்துகிறது அருவியின் அருகே உள்ள பாம்பு புரண்ட தடம் பதிந்த பாறை. அதற்கும் ஒரு விநோத காரணத்தை வைத்துள்ளனர் உள்ளூர் மக்கள். ஆனால், அருவியில் குளித்தால் நோய்கள் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருக்கிறது. இந்த அச்சத்திற்கு காரணம் பீமன் கொடுத்த சாபம் என்கின்றனர் கிராமத்து பெரியவர்கள்.
எங்கே உள்ளது ?கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் அருகே உள்ளது கெடகானூர் கிராமம். இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் நிறைந்த அங்குத்தி அருவி கொட்டுகிறது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையாகக் கொண்ட ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதுதான் அங்குத்தி சுனை என்று அழைக்கப்படும் அழகிய அருவி. இங்கு 5 நிலைகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனாலேயே ஒவ்வொரு நிலைக்கும் பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என பெயரிட்டு அழைக்கின்றனர். பீமன் அருவியில்தான் பீமன் முட்டி போட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.
பாறையில் படிந்த பாம்பின் உடல்ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கொல்ல பெரிய பாம்பு வந்தது. தூக்கத்தில் ஐவரும் பாம்பின் மீது புரண்டனர். அதனால்தான் பாம்பின் வடிவம் பாறையில் பதிந்துள்ளது என்கின்றனர் புராண வரலாறு தெரிந்த சில பெரியவர்கள். குந்தி, மோர் கடைந்த இடமும் இந்த அருவியின் அருகேயே உள்ளது. இப்போதும் குழந்தை வரம் வேண்டி பலர் இந்த இடத்தில் தொட்டில் கட்டி வணங்கிச் செல்கின்றனர். பாண்டவர்களின் பாதம், அருவியின் மேல் உள்ள பாறையில் உள்ளதாக ஆன்மீகவாதிகள் சிலர் கூறுகின்றனர்.
சாபமிட்ட பீமன்ஒரு முறை பாண்டவர்களில் ஒருவரான பீமன் தவத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது பூணூலை காகம் ஒன்று தீண்ட முயன்றுள்ளது. தவம் கலைந்த பீமன், காக்கைக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணத்தினாலேயே அங்குத்தி அருவி மீது காகம் பறக்கவும், அருவி நீரை குடிக்கவும் அஞ்சுகிறது.12 ஆண்டு வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள், இந்த அங்குத்தி நீர் வீழ்ச்சி பகுதியிலும் சில நாட்கள் தங்கியிருந்தனர். பாண்டவர்கள் வாசம் செய்த இடம் எப்போதும் நீர்நிலை நிறைந்த பகுதியாக இருக்கும். அதனால்தான் இந்த அருவியிலும் தண்ணீர் எப்போதும் வற்றுவதே இல்லை என்று அப்பகுதியினர் நம்புகின்றனர். அதற்கு ஏற்றவாறு கடும் வெயில் வாட்டியெடுத்தலும் அருவியில் மட்டும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும்.
நோய் தீர்க்கும் மூலிகை அருவிஅங்குத்தி அருவியின் நீர்பிடிப்புப் பகுதி ஜவ்வாது மலையில் இருந்து தொடங்குகிறது. ஜவ்வாது மலை என்றாலே மூலிகைச் செடிகளுககும், மரங்களுக்கும் பெயர்பெற்றது. இந்த நீர் மூலிகை செடிகளோடு உரசி, அருவியாக கொட்டும் போது நோய் தீர்க்கும் தீர்த்தமாக உள்ளது. சில சமயங்களில் வனப்பகுதியில் நீரில்லாத சமயம் யானை, மான், உள்ளிட்ட விலங்குகள் இந்த அருவியில் வந்து நீர் குடித்துச் செல்வது வழக்கம்.
எப்படிச் செல்வது ?கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம். ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம், கெடகானூர் சென்று காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும். சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் முக்கியச் சாலையில் கோவிந்தாபுரம் பிரிவு ரோட்டில் இருந்தும் கெடகானூர் சென்று அங்குத்தி அருவியை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக