வியாழன், 24 ஆகஸ்ட், 2017

அறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்



அறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்

*விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும், தமிழின அறிவுநெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைகட்கு ஒத்து வராது என்பதையும் நாம் ஆண்டாண்டு காலமாக விளக்கி வருகிறோம் எனினும், நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில் பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம், அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளைத் தமிழக மக்கள் பார்வைக்குப் படைக்கிறோம்.*

*இந்த வழிபாடு இடைக்கால ஏற்பாடே:-*

அறிஞர்கள் சிலர், சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் - இடைக்காலத்தில் வந்த வழிபாடுதான் விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்ம வர்மனின் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர், இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபி யிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இஃது - உண்மைதான். ஞானசம்பந்தர் பொடி நுகரும் சிறுத்தொண்டர்க்

கருள் செய்யும் பொருட்டாகக்


கடிநகராய் வீற்றிருந்தான்

கணபதீச் சுரத்தானே - என்று பாடுகிறார்.

------------------------------ *(டாக்டா சோ.ந. கந்தசாமி தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஞான விநாயகர் என்னும் கட்டுரையில் பக்கம் 20.)*
*********************************************************************************

*பண்டை நூல்களில் வினாயகர்  இல்லை*


நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயக வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமை அம்மை பெண் யானையின் வடிவு கொள்ள சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர், பரஞ்சோதி என்ற பெயரோடு வடபுலத்தில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று, அந்நகரை அழித்து வெற்றிகொண்டுவந்தபோது, அங்கு சிறப்பாக காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும் வாதாபியில் இருந்து கொணர்ந்ததால் வாதாபி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.

--------------------------------------      *(தமிழாகரர் - வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகின்றான் என்ற கட்டுரையில் பக்கம் 17)  மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் : சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8-9-1978*
*********************************************************************************


*விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!*


பிள்ளையார் பற்றிய கதையை விளக்கவேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன அடாத செயலைத் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணரமுடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால் ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. கணபதி, பெண்ணில்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர்மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப்பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.

புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டை ஆக்கி விளையாடிக் கொண் டிருந் தாளாம். அந்த உருண்டையின்மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம். மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாக சித்தரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்து வாரத்தில் உள்ள யானைத் தலை ராட்சஷி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.


மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. பிரம்மாவை வதைத்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப்பார்வை தோஷத்தால்தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்துரா என்னும் ராட்சஷி வயிற்றுள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்றுவிட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சஷன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தைக்குத் தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.


சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது சிவனும், பார்வதியும் யானையைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

-------------------------------- *(பொதுவுடைமை இயக்க அறிஞர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம்* *36,40, 41,42).*

*********************************************************************************

*மறைமலை அடிகள்:-*

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப்புணர்ந்தானாம். அப்புணர்ச்சிமுடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. பாருங்கள் அறிஞர்களே உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய்-எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்! இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்புகடந்து காமங்கொண்ட ஒர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது. பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியனெனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகு மென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருக்க அவன் கருத்தறியாது, அம்மை அவன் தம் மகனைப் பாராது இகழ்ந்தனனென்று சினங்கொள்ள அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப்பெற்ற உமையம்மையார் அச்சனியன்மேல் சினங்கொள்ளல் ஆயினளாம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளையின் முண்டத்திற் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளையாருக்கு யானைமுகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

இங்ஙனமாக இக்கதை பிரமவைவர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடுகளையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்காள்! அன்பர்களே, எல்லாம் வல்ல சிவபிரானுக்கும் அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால் அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும் எவ்வளவு பேராற்றலும் உள்ளதாயிருக்க வேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற்றென்றால் அப்பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமோ! கூர்ந்து பாருங்கள்! மேலும், அத் தெய்வப் பிள்ளையைவிடச் சனியனன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான்? அதுவுமேயன்றி, முழுமுதற் கடவுளான அம்மையார் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்யமாட்டாமற் போயினரென் றால் அச்சனியனல்லவோ அவர்களினும் மேலான தெய்வம் ஆகி விடுகிறான்?

அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்துபோன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க, அவை தம்மை எல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினா னென்பது கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும் இத்துணை இழிவுகளும், இத்துணை பொல்லாங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவனும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்மின்காள் ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களிலும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துவதற்கு விரும்பிய ஒர் ஆரியப்பார்ப்பனனே இக்கதையைக் கட்டி விட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவு படுத்தி விட்டானென்பது உங்களுக்குப் புலப்படவில்லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் தன் முழுமுதற்றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்பவேண்டாமென்னும் எமது அறிவுரையினைக் கண்டு குறைகூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்று தெரிந்து கொள்மின்காள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகாபுராணத்தின்கட் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக் காட்டுதும்; ஒரு கால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தமது கையாற் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து சிவபிரான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம். அங்ஙணம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரள் உடனே உயிருள்ள பிள்ளையாராகி அக்குளியலறையின் வாயிலிற் காவலாய் இருந்ததாம். சிவபெருமான் அம்மையைத் தேடிக் கொண்டு அங்கு வந்தனராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டா மெனத்தடை செய்ய இருவர்க்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடிக் கடைசியாகச் சிவபெருமான் அப்பிள்ளையாரின் தலையை வெட்டினாராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையை வெட்டி விட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபெருமான் தாமும் ஆற்றாதவராகி நம் பிள்ளை என்று அறியாமல்   வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளையாரின் உடம்பிற் பொருத்தி உயிர்பெற்றெழச் செய்தனராம்.

அடிகளாரின் ஆராய்ச்சி: அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது? எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார்  வினை வயத்தால் பிறக்கும் நம் போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருள்ஒளி வீசித் துலங்குவதென்று தேணோப' நிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும்  கணத்துக்கும் முற்றும் மாறாத அம்மையார் திருமேனியில் அழுக்கு  யிருந்ததென்றும் அவ்வழுக்கினைத் திரட்டி எடுத்து . சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகாபுராணமெனப்  பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்காள் ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிகமும், தூய்மையும் வாய்ந்தார். சிலரின் உடம்புகள் அழுக் கில்லாதனவாய் மினுமினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட்பேரொளியின் வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடைய தாயிருக்குமோ? சொன்மின்காள்!

மேலும் தன் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாயிருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாகாலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தன் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத் தகுந்ததாகுமோ? இன்னும் பாருங்கள் வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பிவிடலாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தினனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது? இத்துணைத் தகாதனெவைன்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும், அருள் வடிவான பிராட்டியையும், ஒங்கார, ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஒர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பனச் சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகாபுராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

----------------------------- *(மறைமலை அடிகள் எழுதிய - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்.)*        

 -------------------------- *(தொகுப்பு: வய் .மு.கும்பலிங்கன், குடந்தை) --”விடுதலை”15-09-2015*

 இதை *நாத்திகம்  பேசும் பெரியார் மற்றும் அம்பேத்கரிஸ்ட்கள் சொல்லவில்லை வினாயகரின் புராணமே அப்படித்தான் சொல்கிறது.*


விநாயகர் சதுர்த்தியா - வெட்கமாக இல்லையா?...........

விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய கடவுள்களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.

அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்பு பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து இது உண்மையில் கடவுள் என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.

சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.

முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி, தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? ஒரு நாளாவது பார்வதி குளித்து இருப்பாளேயானால் இவ்வளவு அழுக்குப் பிடித்து இருக்குமா? எனவே, சுத்த ஆபாசமும், அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.

அடுத்தபடியாக, அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், "நான் வரும்போதுநடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்" என்றான்.

இதிலே, குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை? இரண்டாவது, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது? மூன்றாவது, அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்? இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும்.

இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலை துண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.

பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.

மற்றொன்று -பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதே ஆசையால் பரமனும், பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றதுதான் விநாயகர்.மூன்றாவது,ஒரு நாள் பார்வதியும், பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம். ஆகவே, அப்படிப் பிறந்ததுதான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள்.ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும், சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை.

இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

இதை படித்தவுடன் அனைவருக்கும் share அதாவது பகிரவும் நண்பர்களே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக