வியாழன், 4 ஜூலை, 2019

சீன நாட்டில் உள்ள சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..


சீன நாட்டில் உள்ள சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜ், தமிழக கடல்சார் தொல்லியல் ஆய்வாளர் ஒரிசா பாலு, சீன யுனான் மின் ஆ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் பேராசிரியர் கிகி ஜாங் என்ற நிறைமதி, பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து ஆய்வுக் குழு அமைத்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது: கடந்த மாதம், தென் கிழக்கு சீனாவின் பண்டைய பன்னாட்டுத் துறைமுகப் பட்டணமான குவான்ஸோ என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து, சீன தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த கல்வெட்டு படியை, கிகி ஜாங் என்ற நிறைமதி இக்குழுவுக்கு அனுப்பி அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார்

அந்த கல்வெட்டின் மேல் பாதியில் தமிழ் எழுத்துகளும், கீழ் பாதியில் சீன எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழ் எழுத்துகள் குறித்து சீன ஆய்வாளர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த கல்வெட்டின் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டாகும். இந்த கல்வெட்டு மூன்று வரியில் ஆசிரியப்பா பாடல் வடிவில் எழுத்துப் பிழைகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், "ஹரி ஓம் எனத் தொடங்கி, வைய்ய நீடுக, மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைய்வ நன்நெறிதான் தழைத்தோங்குக, தெய்வ (வெண்) திருநீறு சிறக்கவே' எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைத்த பல கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுகின்றன. எனவே, இப்பாடலின் துவக்கம் பழனியாக இருக்க வாய்ப்புள்ளது. "சைவ நன்நெறி தழைத்தோங்க' என எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு பெரியபுராண ஏட்டுச் சுவடிகளில் இருப்பதாக, தஞ்சைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் புலவர் ராசு தெரிவித்துள்ளார்.

இந்த கல்வெட்டு கிடைத்துள்ள அதே ஊரிலேயே கடந்த ஆண்டு வேறொரு கல்வெட்டும் கிடைத்துள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப் பெருமான் என்ற பெயர் கொண்ட சித்தர் பொறித்துள்ளார். அதில், அவரது பெயர் தவச்சக்கரவர்த்தி எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. சீனாவை ஆண்ட மங்கோலியப் பேரரசர் குப்ளாய்கான் முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்துள்ளார். அப்போது, அங்கு வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப் பெருமான், பேரரசர் உடல்நலம் பெறவேண்டி திருக்கானீசுரம் என்ற பெயரில் சிவன் ஆலயத்தை உருவாக்கியதாக, அங்குள்ள கி.பி. 1281 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. இந்த கல்வெட்டு, தமிழ் மற்றும் சீனமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதுடன், சைவநெறி தழைத்தோங்க என துவங்கப்பட்டுள்ளதால், அதே சம்பந்தப் பெருமான் அமைத்திருக்கலாம் என உறுதியாக நம்பலாம்.

தமிழ் மொழிக்கு கீழே சிதைந்த நிலையிலுள்ள சீன மொழி எழுத்துகள், அக்கோயிலை துறவி ஒருவர் கட்டியுள்ள தகவல் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் பழந்தமிழகம் நல்ல தொடர்பில் இருந்துள்ளது. சீனாவை குப்ளாய்கான் ஆண்ட நேரத்தில், தமிழகத்தை குலசேகரபாண்டியன் ஆண்டுள்ளார். பாண்டிய நாட்டைச் சேர்ந்த குறிப்பாக, பழனி பகுதியைச் சேர்ந்த சித்தர் சம்பந்தர் பெருமான் சீனாவுக்குச் சென்று, அங்கு குப்ளாய்கான் காலத்தில் அந்நாட்டு அரசின் சார்பிலேயே சிவன் கோயில் அமைத்து, தமிழ் மொழியில் கல்வெட்டு பொறித்து வழிபட்டார் என்பது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றார்.

நம் முன்னோர்கள் விமானம்,நவீன கப்பல்கள் போன்ற வசதிகள் இல்லாத போதே,பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்றுள்ளார்கள்..சென்ற இடம் எல்லாம் நம் கலாச்சாரம்,மொழி போன்றவற்றை வளர்த்துள்ளார்கள்.. அப்பொழுதே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொல்லும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்..இன்று..?சென்னை மக்களுக்கு குடிநீர்  எடுத்து சென்றால் போராடுவோம் என பக்கத்து ஊர்காரர்  சொல்கின்ற நிலைக்கு நம் மனம் குறுகிவிட்டது..

நம் உலகம்,நம் நாடு,நம் மாநிலம், நம் மாவட்டம், நம் ஊர்,நம் உறவு,நம் குடும்பம் என்பது எல்லாம் படிப்படியாக குறைந்து நான் என்றாகிவிட்டது..அறிவு வளர்ந்ததா?குறைந்ததா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக