ஞாயிறு, 3 டிசம்பர், 2017

சித்தூரில் அலாவுதீன் கில்ஜி ’ராணி பத்மினி’யின் அழகைக் கண்டு மயங்கிய கண்ணாடிகள் உடைந்தன!


சித்தூரில் அலாவுதீன் கில்ஜி ’ராணி பத்மினி’யின் அழகைக் கண்டு மயங்கிய கண்ணாடிகள் உடைந்தன!

முகமதியர் காலத்தில் வாழ்ந்த இந்திய மகாராணிகளில், என்றும் குன்றாப் புகழுடைய பேரழகிகள் வரிசையில் சித்தூர் ராணி பத்மினிக்கு இப்போதும் தனி இடம் உண்டு. சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி, அவளைக் கவர நினைத்து சித்தூரின் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகை இட்ட நிலையில் ராணி பத்மினி, தனது அந்தப்புரத்துப் பெண்கள் அனைவருடனும் கில்ஜியின் கண் முன்னே நெருப்பில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். தடுக்க வந்த கில்ஜியை நோக்கி, ‘ இது தான் இந்தியப் பெண் உனக்களிக்கும் பரிசு என்று கூறியவாறு அவள் நெருப்பில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.
ராணி பத்மினியை ‘பத்மாவதி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் ‘ஜோதா அக்பர்’ ‘பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட சரித்திரத் திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்ட பாலிவுட் இயக்குனாரான சஞ்சய் லீலா பன்சாலி ராணி பத்மினியின் வாழ்க்கையையும் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மினியாக நடிக்க ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக்க முயன்று வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் சித்தூர் கோட்டைப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சிலர் தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடைஞ்சல் செய்து வருகின்றனர்.
ராஜபுத்திர பெண்ணான சித்தூர் ராணியின் கதையை திரைப்படமாக்கி அவளது புகழுக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார்கள் பாலிவுட் சினிமாக்காரர்கள் என்பதே கிளர்ச்சியாளர்களின் வாதம். ராணியின் பெருமையை உலகறியச் செய்யவே இந்தப் படத்தை உருவாக்குவதாக இயக்குனர் தரப்பு அவர்களிடம் போதுமான விளக்கம் அளித்தும் அவர்கள் கேட்பதாக இல்லை.
தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலவரங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த ராஜபுத்திர வன்முறைக் கும்பல் அதன் உச்ச கட்டமாக ‘ பல்லாண்டுகளுக்கு முன்பாக ராணியின் அழகை டெல்லி சுல்தான் கண்டதாகக் கருதப்பட்ட அலங்காரமான கண்ணாடிகளை உடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் கர்னி சேனா எனப்படும் ராஜபுத்திர கலக அமைப்பே என காவல்துறையினர் கருதுகின்றனர். ஏனெனில் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் திட்டமிட்டு கலகங்களை நடத்தி வரும் இந்த அமைப்பினர் முன்னரே படப்பிடிப்புக் குழுவினருக்குச் சொந்தமான விலையுயர்ந்த கேமிராக்கள், மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை சேதப்படுத்தி வலிந்து படப்பிடிப்பை நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர், என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராணி பத்மாவதி நெருப்பில் பாய்ந்து இறந்ததன் பின் நெடுநாட்களுக்குப் பின்னரே இந்தக் கண்ணாடிகள் அடையாளம் காணப்பட்டனவாம். காலத்தால் அழியாத அற்புதமான இந்த கலைப்படைப்புகள் கிளர்ச்சியாளர்களுக்கு பலியாகின என்று சித்தூர் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது. நன்றி தினமணி.


ராணி பத்மாவதி- சித்தூர்- 14ஆம் நூற்றாண்டின் இந்திய கிளியோபாட்ரா
யார் இந்த பத்மாவதி ?
சித்தூரின்(Chittor) மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவி தான் இந்த ராணி பத்மாவதி (சுயம்வரத்தில் வென்று திருமணம் முடித்தார்).
அறிவில் அழகில், வீரத்தில் இவளுக்கு நிகர் இவரே..
அலாவுதீன் கில்ஜி இந்த ராணி பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு சித்தூரை கைப்பற்ற புறப்பட்டு வருகிறான்.
ராணி பத்மாவதியை காட்டினாலே தான் சென்று விடுவதாக தூது அனுப்புகிறான். தூதை ஏற்று அரண்மனைக்கு அழைக்கப்படும் அலாவுதீனுக்கு கண்ணாடி(Mirror) மூலம் ராணி பத்மாவதி காண்பிக்கப்படுகிறாள்..
பத்மாவதியின் அழகில் மயங்கிய அலாவுதீன் திரும்ப செல்லும் வழியில் துணைக்கு வந்த மன்னன் ரத்தன் சிங்கை கைது செய்து ராணி பத்மாவதியை அனுப்பினால் மன்னனை விடுவிப்பதாக அறிவிக்கிறான்.
பல்லக்கில் வருவதாக ராணி பத்மாவதி செய்தி அனுப்புகிறார்.
ஒரு பல்லக்கில் 2 வீரர்கள் உள்ளே, 4 வீரர்கள் வெளியில் தூக்கியும் மொத்தம் 150பல்லக்கு செல்கிறது.
அலாவுதீனின் பாசறையை அடைந்தவுடன் 900 வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போரிட்டு மன்னனை மீட்கின்றனர்.
பிறகு ஏற்பட்ட பெரும் போரில் ராணி பத்மாவதி மற்றும் அணைத்து ராஜ்புத் பெண்களும் போரில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் தீயில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
அலாவுதீன் மற்றும் இஸ்லாமிய படைகள் சித்தூர் கோட்டையில் நுழைந்த போது ஒரு பெண்கள் கூட உயிருடன் இல்லை.
அனைவரும் தீயில் இறங்கி தங்கள் உயரை மாய்த்துக்கொண்டனர்...
உயிரை விட மானமே பொிது என்று எதிரியின் கையில் சிக்காமல் இருக்க இந்திய ராஜ்புட் பெண்கள் தீயில் ஏறி உயிர்துறக்கும் நிகழ்வே சதி எனப்படுகிறது.
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக