வியாழன், 22 மார்ச், 2018

தியாகச்சிங்கம் உத்தம் சிங்


தியாகச்சிங்கம் உத்தம் சிங் 

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

 ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப்  இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,
உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின்  செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
 இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.


உதம் சிங்கின் சபதம்
- tamilhindu
1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம்.
உதம் சிங்கின் சபதம்
இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம் சிங் ஆசாத் இளவயதிலேயே தம் பெற்றோரை இழந்தவர். சீக்கிய தர்ம கால்ஸா அனாதை இல்லத்தில் தன் சகோதரருடன் வளர்ந்தவர். 1917ல் அவரது சகோதரர் சாது சிங் மரணமடைந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங். 1910களில் எவ்வாறு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இங்கிலாந்தில் இந்தியா ஹவுஸ் மூலம் இளைஞர்களை ஆயுதமேங்கிய புரட்சிக்குத் தயார் செய்து வந்தாரோ அதேபோல லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார்.
ஆரிய சமாஜம், சீக்கிய தருமம், மார்க்ஸியம் ஆகியவற்றால் லாலா ஹர்தயாளின் அரசியல் சித்தாந்தம் உருவாக்கப் பட்டிருந்தது. குருகோவிந்த சிங் பெயரில் மாணவர் உதவி நிதி நிறுவி அவர் தேசபக்தி கொண்ட பாரத இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உத்தம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தாம் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். மிகத் தெளிவான திட்டத்துடன் அவர் வேலை செய்தார். அவரது உடனடி நோக்கம் இங்கிலாந்து செல்வதாக இருந்தது. அங்கே அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
“அதற்கு வாய்ப்பில்லை சர். டயர்”
1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.
சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். காவல் நிலைய விசாரணையில் உதம் சிங் தமது பெயராக “ராம் முகமது சிங் ஆஸாத்” என கூறினார். குறுகிய மதவாதம் நாட்டை உலுக்கியபடி இருந்த காலகட்டத்தில் அவரது இந்த பெயரே குறுகிய எல்லைகளைக் கடந்த பாரதிய தேசியம் எழும்புவதைக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.


உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் பொதுக்கூட்டங்களில் மக்களிடையே உதம் சிங்கின் செயல் பெருமதிப்போடு பேசப்பட்டது. “தேசத்தின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என்பதே மக்கள் மனதின் கீதமாக இருந்தது. பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் உத்தம்சிங்கின் தீரச்செயலைப் பாராட்டின. 1940ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினத்தன்று உதம் சிங் ஜிந்தாபாத் எனும் கோஷம் எழுப்பப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.
“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை”
பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது. “உதம் சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம் சிங்கை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ண மேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ண மேனன் உதம் சிங்கைத் தான் பைத்தியம் என ஒப்புக்கொள்ளும்படியும் அப்படிச் சொன்னால் தப்பித்துவிடலாம் என்றும் கூறினார். உதம் சிங் வேதனையுடன் அதனை மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோர்ட்டுக்குத் தம்மை விசாரிக்க உரிமையோ தகுதியோ இல்லை என்று கூறியதுடன் பிரிட்டிஷ் நீதிபதியையும் அங்கிருந்த இதர பிரிட்டிஷாரையும் நோக்கி கூறினார்:


“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. நான் உயிர் துறப்பதில் பெருமைப்படுகிறேன். என் தாய் நாட்டை விடுவிக்க உயிர்துறப்பதில் பெருமை அடைகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்தில் என் தேச மக்கள் வருவார்கள். வந்து அசிங்கம் பிடித்த நாய்களான உங்களை விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள், பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிப் பிரபு ஆவீர்கள், பாராளுமன்றத்துக்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் எங்களைத் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரதத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றிக் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்கு நூறாகச் சிதறும். பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”
இத்தகைய உணர்ச்சி மயமான உரையின்மூலம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர்களுக்கு அவர் ஒரு பைத்தியம் என்கிற பிரிட்டிஷ் பிரச்சாரம் எத்தனை பொய் என்பதையும் தான் ஒரு தேசபக்தர் என்பதையும் புரிய வைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவரை நீதிமன்றத்திலிருந்து காவலாளர்கள் இழுத்துச் செனறனர். இறுதியாக அவர் “பாரத மாதா கீ ஜே!” என முழக்கமிட்டபடி இழுத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அட்கின்ஸன் அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும் அங்கு நிகழ்ந்தவற்றை வெளியே சொல்லக்கூடாதென உத்தரவிட்டார். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
1962ல் நேரு உதம் சிங்கை தேசபக்தர் என அறிவித்தார். 1974ல் உதம் சிங்கின் உடல் பாரதம் கொண்டு வரப்பட்டு அவரது மாநிலமான பஞ்சாபில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக