புதன், 28 மார்ச், 2018


இராவண காவியமும் தமிழ்த் தேசியமும்

இராவண காவியம் - தமிழகக் காண்டம்

இராவண காவியத்தின் முதலாம் காண்டமான தமிழகக் காண்டத்தைக் கற்போர் மனதில் தமிழ்த் தேசியம் மலரும். அதில் வரும் கருத்துகளைப் பாயிரம் முதலாக ஒவ்வொரு படலமாக காண்போம்.

பாயிரம்:

இதில் இராமாயணம் என்னும் கற்பனை கதை புனையப்பட்டதன் நோக்கம் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் மொழியையும் வரலாற்றையும் அழித்தல் வேண்டும். எனவே தான், தொன்மையான மொழியும் நாகரிகமும் தோன்றிய நம் குமரி கண்டத்தில் அரக்கர்களும் குரங்குகளும் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது.
இக்கொடிய கதையை கம்பன் தமிழில் இயற்றினான் என்னும் கருத்ததைப் பின்வரும் பாடல் வழியாக அறியலாம்.

தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம்மு ழுப்பொ யதையெந் தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாமென
அம்ம வோநம்பி டச்செய்து விட்டனன்

கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென
நம்பி யையகோ நந்தமிழ் மக்களும்
தம்ப ழம்பெருந் தாய்க்குல மக்களை
வெம்ப கைபோல் வெறுத்திட லாயினர்

என்னும் பாடல்கள் நம் அடையாளப் பறிப்புகளைப் பற்றி கூறுகிறது.  இப்போது, தமிழ்நாட்டில் நம் வரலாற்றுத் தொன்மையின் சான்றுகளான ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொடுமணல், கீழடி போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பாடததும் நமது வழக்குமன்றங்களில் வழக்கு மொழியாகவும் கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் தமிழ் புறக்கணிக்கப்படுவதும் நமது மொழி மற்றும் வரலாற்றை அழிக்கும் முயற்சியாக இருக்கின்றதை  நாம் காண்கிறோம்.

இவ்வாறாக நம் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள அடையாள மற்றும் உரிமை பறிப்புகளைக் கூறி விட்டு. பண்டைய தமிழர்களின் பண்பட்ட வாழ்வுதனை ஏழு படலங்களாக பிரித்துக் கூறுகிறது.

1.தமிழகப் படலம்

இதில் பண்டைய தமிழகம் எவ்வாறு பரந்து விரிந்து இருந்தது என்பதை கூறுகிறது. குமரியாறு பஃறுளியாறுடன் தமிழகம் திகழ்ந்தது. சிந்து வெளி நாகரிகம் மற்றும் நடுத்தரைக்கடலில் பல்வேறு நாகரிகங்களைப் பண்டைய தமிழ் பரதவர்கள் கண்டனர்.

உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
உலக மின்றறி யாநிலை யுள்ளதே.

கிபி 2-3 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து தனியரசு இல்லாமலிருப்பதால் நமது மொழியின் தொன்மை உலகரங்கில் அனைவரின் பார்வைக்கும் செல்லாதவாறு மறைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வரும் ஐந்நிலம் பற்றிய பாடல்களைக் கற்போர் மனதில் தமிழகம் வரலாறு முழுவதும் தற்சார்பு பெற்றிருந்தது என்னும் கருத்து நன்கு பதியும். இப்பொழுது தில்லி குடியேற்ற(colony) அரசு இத்தற்சார்பு நிலை அழியும் நோக்கில் செயலாற்றும் திட்டத்தை எதிர்த்து போர்குணம் கற்போர் மனதில் தோன்றும்.

2. மக்கட் படலம்

இப்படலம் தமிழக மக்கள் பல்வகையான தொழில்கள் புரிந்து வளத்தோடு வாழ்ந்து வந்ததைப் பற்றி கூறுகிறது. ஜாதி என்னும் கொடிய மூடத்தனம் இல்லாமல் வாழ்ந்தனர் என்னும் கருத்தை

ஆங்கவர் தம்மு ளாண்டா னடிமையாங் கொடுமை யின்றிப்
பாங்குறு தொழிலுக் கேற்ற பயனைமவ் வவரே யெய்தி
........... வாழ்ந்தார்

என்னும் பாடல் மூலம் அறியலாம். இதை கற்போர் மனதில் ஜாதியை எதிர்க்கும் எண்ணம் உண்டாகும்

3. தலைமக்கட் படலம்

இப்படலம் நம் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் ஒற்றுமையைப் பற்றி கூறுகிறது. ஆம், ஒடிசா மன்னன் காரவேலனின் கல்வெட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த மூவேந்தர்களின் ஒற்றுமையைப் பற்றி கூறுகிறது. அவர்கள் ஒற்றுமையோடிருந்து தமிழகத்தைக் காத்தனர். இதை கற்போர் மனதில் இப்போது தமிழகத்தில் நிகழும் தனிநபர் பகை அரசியலை புறக்கணிக்கும் எண்ணம் வரும்.

4. ஒழுக்கப் படலம்

இப்படலம் தமிழர்கள் அனைவரும் கல்வி கற்று விளங்கியதையும்  இல்லறத்தில் அன்பால் சிறந்து வளங்கியதையும் பற்றி கூறுகிறது.

..........
கல்லாரைக் காணாராய் கற்றுநல முற்றனரே

என்னும் பாடல் வரிகளுக்குச் சான்றுகளாக பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் கிடைத்த மக்கள் பயன்படுத்திய பொருட்களான பானை அணிகலன் முதலியவற்றிலும் எழுத்துகள் கிடைத்தன. வடக்கிலே கிடைக்கப்பட்டுள்ள எழுத்துகள் அரசர்கள் வெட்டிய கல்வெட்டில்தான் காணப்படுகின்றன.

5. தாய்மொழிப் படலம்

இப்படலத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கற்போர் மனதை அள்ளும் தன்மையுடையது.

உலகிலேயே பழைமையும் இளமையும் பாங்குற பெற்ற மொழி தமிழே. மிகப் பழைமையான எழுத்திலக்கணத்தை உடையது. இத்தகைய அமைப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது. இதற்கு முதல்காரணம் நம்முடைய தமிழ்ப் பற்றே.

ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லாரில்லை
........
நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்.
வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்
.....

என்னும் பாடல் வரிகளுககேற்ப உள்ள
தாய்மொழி பற்றே நம் மொழியைப் பேணிக் காத்து பழைமையும் இளமையும் ஒருங்கே அமைய வழிவகுத்தது.

6. கடல்கோட் படலம்

இப்படலத்தில் உள்ள பாடல்கள் தம் வாழ்விடம் கடலில் மூழ்கியதால் தமிழக மக்கள் அடைந்த கையறுநிலையால் பெற்ற துயரத்தை கற்போர் மனதில் நன்கு பதியும்படி உள்ளன.
இப்போது தமிழகத்தில் நடக்கும் கனிம வேட்டையிலிருந்து காக்கும் தற்காப்புணர்ச்சி கற்போர் மனதில் தோன்றும்.

7. இலங்கைப் படலம்

புலப்பெயர்வு முடிவடைந்தபின் தமிழக மக்கள் தற்போதைய இடத்தில் குடிபெயர்ந்து இனிது வாழ்ந்துவந்தனர்.

.....
மன்னவர் மன்ன ரான மாபெருந் தலைவ ரெல்லாம்
தன்னைநேர் தமிழை யந்தத் தமிழ்பயில் தமிழ கத்தை
அன்னைபோ லினிது காத்தே யரசுவீற் றிருந்தா ரம்மா

இவ்வாறாக பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி கூறும்
இக்காண்டத்தைக் கற்போர் மனதில் தமிழ்த் தேசியம் இயல்பாய் மலரும்.
*எமது தேசம் தமிழ்த் தேசம்*
*எமது தேசிய மொழி தமிழ்*
*எமது தேசிய இனம் தமிழர்*
*இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக்* *குடியரசு அமைப்பதே எமது இலக்கு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக