துன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ளது அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
துன்பங்கள் தீர்க்கும் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்
1-7-2018 ஆலய கும்பாபிஷேகம்
இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும்.
முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.
அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர்.
இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.
தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய தீபாஞ்சாயி அம்மன் ஆலயங்களில் ஒன்றே, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள அள்ளுர் தீப்பாஞ்ச நாச்சியார் திருக்கோவில்.
வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள சேத்தியாதோப்பு முற்காலத்தில் அடர்ந்த கானகமாகவும், படைப்பிரிவு அமைவிடமாகவும் இருந்துள்ளது. இப்பகுதி வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரர், ஒரு சிறுமியை கண்டெடுத்து புகலிடம் தந்து வளர்த்து வந்தார். ஒருநாள் அவ்வீரருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு இறந்து போனார். அவர்மீது பேரன்பு கொண்டிருந்த அப்பெண் அதை ஏற்கமுடியாமல் ஒரு தீக்குண்டம் ஏற்படுத்தி, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றாள்.
அதனைத் தடுத்தவர்களிடம் ‘நான் மக்களுக்கு காப்பாகத் திகழ்வேன்’ என்று கூறி, எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது தீப்புகுந்து மறைந்தாள். அத்தெய்வப் பெண் வாக்கினை உறுதி செய்வதுபோல், அவள் உயிர் நீத்த தீக்குண்டத்தில் மங்கலப் பொருட்களான மஞ்சள், வெற்றிலை, எலுமிச்சை, ஆடை, திருத்தாலி ஆகியவை தீயில் வாடாமல் இருந்தது. இதைக்கண்டு அதிசயித்த மக்கள் அந்தப் பெண்ணை ‘தீப்பாஞ்சாயி அம்மன்’ என்று பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
வீராணம் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களில் ஒன்றான பாழ் வாய்க்காலுக்கு வடக்காகவும், தேசிய நெடுஞ் சாலைக்கு தெற்காகவும், தாமரைக்குளத்தின் மேற்காகவும் அமைந்துள்ள பசுஞ்சோலை வளாகத்தில் இவ்வாலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. பிரதான சாலை வடக்கே அமைந்துள்ளதால் கோபுரம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் சன்னிதி, உள்மண்டபம், வெளி மண்டபம் என கடந்த நாற்பது ஆண்டு களில் ஆலயம் படிப்படியாக விரிவடைந்துள்ளது.
ஆலயத்தில் நடுநாயகமாக காஞ்சி மாமுனிவரின் ஆலோசனையின்படி, மாமல்லபுரம் கணபதி ஸ்தபதி வடித்த தீப்பாய்ந்த நாச்சியார் திருவுருவம் இருக்கிறது. அன்னை வலக்கரத்தில் தாமரையுடன், வலது திருவடி முன்வந்து அருளிப்பதுபோல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் அருள் பீடத்தில் ஏழு கனலுடன் தீயும், மங்கலப்பொருட்களும் இருப்பதைக் காணலாம். ஐம்பொன்னாலான உற்சவர், மூலவருடன் கருவறையிலேயே வீற்றிருந்து அருள்கிறார்.
தாயாரை வலம் வந்து வணங்கும்போது சக்கரத்தாழ்வார் சன்னிதியில் யோக நரசிம்மரையும் சேவிக்கலாம். அருகே ஆலய தலவிருட்சமான புங்க மரத்தையும், இன்னுமொரு பிரார்த்தனை மரத்தையும் காணலாம். பிரகாரத்தின் வடக்கே ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இந்தச் சன்னிதியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் இருமுடி கட்டி சபரி யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள் மண்டபத்தின் வடகிழக்கில் ராமர் திருவடிநிலை என்னும் ஸ்ரீபாதுகா சன்னிதி, நவகோள்களும் வணங்கும் கோலத்தில் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில் ஆகிய படைசூழ ஆதிசேஷ ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஸ்ரீமான் வேதாந்ததேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும். அருகில் தாயாருக்கு எதிராக இலங்கையில் தூது சென்று சீதையைக் காத்த அனுமன் சிறு உருவில் சேவை சாதிக்கிறார்.
வெளி மண்டபத்தின் சிறப்பு
ஆண்டுதோறும் கிள்ளைக்கடலுக்கு தீர்த்தவாரி காண செல்லும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள், மாசிமகத்தின் போது இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வந்து அமர்கிறார். பின்னர் அந்த நாள் முழுவதும் திருமஞ்சன சேவையை ஏற்று வழிப்பயணம் மேற்கொள்வது சிறப்பானதாகும். இம்மண்டபத்தில் ராமாயணத்தில் வரும் அக்னி சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் தொகுப்பாக அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மண்டபத்தில் ராமன்-சீதை திருமணம், ராமர் பட்டாபிஷேகம், பரமபதநாதன், பாற்கடல்நாதன், சீதா அக்னிப் பிரவேசம் முதலான வண்ணமிகு சுதைச் சிற்பங்களும், தீபாஞ்சாயி அம்மனின் புனித வரலாற்றை விளக்குவதாக உள்ளன. ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ள தாமரைக் குளக்கரையில் அரசு மற்றும் வேம்பு மர நிழலில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் விநாயகர் சன்னிதி இருக்கிறது. அங்கு நாகர்களும் உள்ளன. இத்திருக்குளத்தில் திருமண தம்பதி கள் பாலிகை கரைப்பது வழக்கமாக உள்ளது.
அமைவிடம்
விக்கரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக