வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வீரபத்திரர் தோன்றி வரலாறு...


விரபத்திரர் யார்...

வீரபத்திரர் தோன்றி வரலாறு...

தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.

அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.

அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நின்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை. இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்? வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

1 கருத்து:

  1. சிவாயநம ஐயா வீரபத்திரர் வரலாற்றில் சிறு பிழை உளளது பத்திரம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் இலை தழை என்றே பெருள் இலை என்றால் வில்வ இலை அல்லது வில்வ தழை என பொருள்கொள்க சிவனார் அனிந்திருந்த வில்வ மாலையை கழற்றி வீசினார் என்பதே பொருந்தும் ஐயா.

    பதிலளிநீக்கு