வியாழன், 2 ஏப்ரல், 2020

மிக பழமையான வேதமான ரிக் வேதம் பற்றி அறிவோம்

மிக பழமையான வேதமான ரிக் வேதம் பற்றி அறிவோம்


ரிக் வேத காலத்தில், ஆரியர்கள் பெரும்பாலும் சிந்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர், ரிக் வேதத்தில் 'சப்த சிந்து' அல்லது ஏழு நதிகள்பாயும் பகுதி என்ற குறிப்பு வருகிறது. பஞ்சாபில் பாயும் ஜீலம், சீனாப், ராவி, பியாய், சட்லஜ் என்று ஐந்து நதிகளோடு சிந்து மற்றும் சரஸ்வதி ஆகிய ஏழு நதிகளையே இது குறிக்கிறது. ரிக் வேதப் பாடல்களிளிருந்து ரிக்வேதகால மக்களின் அரசியல், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளலாம். 
குலம் அல்லது குடும்பம் என்பதே ரிக் வேதகால அரசியலுக்கு அடிப்படையாக இருந்தது, பல குடும்பங்கள் இணைந்து கிராமம் உருவாயிற்று. கிராமத்தின் தலைவர் கிராமணி எனப்பட்டார். பல கிராமங்கள் இணைந்து விசு என்ற அமைப்பு தோன்றியது. இதன் தலைவர் 'விஷயபதி. அரசின் தலைவன் ராஜன். ரிக்வேத காலத்தில் பெரும்பாலும் முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. பரம்பரை வாரிசு முறையே பின்பற்றப்பட்டது. நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக புரோகிதரும், சேனானி என்ற படைத்தளபதியும் இருந்தனர். சபா, சமிதி என்ற இரண்டு புகழ்வாய்ந்த அவைகளும் இருந்தன. சபா என்பது ஊர்ப்பெரியோர் அடங்கிய அவையாகவும், சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின. 
தந்தை வழியை அடிப்படையாகச் கொண்டதே ரிக்வேத கால சமூகம். சமூகத்தின் அடிப்படையாக விளங்கியது கிரஹம் அல்லது குடும்பம். குடும்பத்தின் தலைவர் கிரஹபதி. பொதுவாக ஒருதார மணம் வழக்கிலிருந்தது. அரச மற்றும் உயர் குடியினரிடையே பலதார மணமும் நடைமுறையில் இருந்தது. இல்லப் பொறுப்புகளை கவனித்து வந்த மனைவி முக்கிய சடங்குகளிலும் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் ரிக்வேத காலத்தில் வாழ்ந்தனர்
பருத்தி மற்றும் கம்பளியாலான ஆடைகளை ஆண் பெண் இருபாலரும் அணிந்தனர். இருபாலரும் பல்வேறு வகையிலான ஆபரணங்களை அணிந்தனர். கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், கனிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாகும். பசு புனித விலங்காக கருதப்பட்டதால் பசு இறைச்சி உண்பதற்கு தடையிருந்தது.
தேரோட்டப் போட்டி, குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் போன்றவை அவர்களது இனிய பொழுதுபோக்குகள்.நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக்வேத கால மக்கள் வழிபட்டனர். இவற்றை கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். பிருதிவி (பூமி), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடிமின்னல்) ஆகிய கடவுளர்கள் ரிக்வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக