வெள்ளி, 10 ஏப்ரல், 2020

உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் யார் தெரியுமா?


உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் யார் தெரியுமா?
வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு ‘உடையாள் பெண்கள் படை’ எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப்பட்டாள்.

அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு உடல் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள்.

தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை.

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு.

அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் – விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித்திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்று கேட்டார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.

அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ”தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன் பணம் வேண்டாம்” என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக்கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம்.

இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார்.

கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது.

கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார்.

ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர்.

அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ”எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள்.

இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற்காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர்களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் எதிர்பாராத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள்.

”சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத்திருக்கிறாளே, உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.”

வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரிராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான்.

மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் வேலு நாச்சியார் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியார் இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி, “நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு நடைபெறவிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி. நாம் அனைவரும் மாறுவேடத்தில் கோயிலுக்குள் செல்வோம். அங்கிருந்து போரைத் தொடங்குவோம்” என்று யோசனையை முன்வைத்தாள்.

குயிலியின் யோசனையை அரசியும் ஏற்றுக்கொண்டார். அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருதுபாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கண்டுகொண்டார் குயிலி.

சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.

ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் ‘சார்ஜ்’ என்று கத்தினான். வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலியும் ஓடினார். அவரது மேனியில் விளக்குக்காகக் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது.

தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தன்னையே மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களைத் தீக்கு இரையாக்கினார் குயிலி. மீதமிருந்த வெள்ளையர்களை, நாச்சியாரின் படைவீரர்கள் துவம்சம் செய்தனர்.

ஊர் எல்லையிலிருந்து மருது சகோதரர்களும் கோட்டையை நோக்கி முன்னேறியிருந்தனர். இழந்த நிலம் அனைத்தையும் மீட்டாயிற்று. “எங்கே குயிலி?” என்று தேடுகிறார் அரசி. தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார். உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் வீரப்பெண் குயிலி.

அன்றிலிருந்து, தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்த குயிலியை அம்மனாகவே வழிபடத் தொடங்கினார்கள் இப்பகுதி மக்கள். சிவகங்கை- மதுரை சாலையில் முத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அங்கிருந்த அம்மனை ‘தீப்பாய்ந்த அம்மன்’ என்ற பெயரிட்டு மக்கள் வணங்குகிறார்கள்.

இக்கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது அந்தக் கோயில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது. உள்ளே, குயிலியின் நினைவாக நடப்பட்ட நடுகல்லும், சூலாயுதம் ஒன்றின் முனைப்பகுதியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக