திங்கள், 13 ஏப்ரல், 2020

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு


தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு

மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.

மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...


உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...

ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.


இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக