சனி, 4 ஏப்ரல், 2020

பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு

தமிழர்களும் சாதிகளும் -- பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு
பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு..

வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து  இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்..

இது உளவியில் ரீதியாக   தாழ்வான  உணர்வுடன் இருக்கும்  பட்டியல் இன மக்களாகிய பறையர்கள், பள்ளர்கள், சக்கலியர்கள் தனது வரலாறுகளை தெரிந்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மை களைந்து விட்டு போராட வேண்டும்  என்கிற நோக்கில் தொகுக்கப்படுகிறது...

பல்வேறு தலைப்புகளில் இங்கு தொகுத்து உள்ளேன்...


சிறு குறிப்புகள் ..மேலும் விரிவாக தெரிந்துகொள்ள இன்னும் படிக்கவும்...

1. தமிழர்களும் சாதிகளும்
சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.
‘இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.

2. சாதி என்றொரு மாயம்

முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.
பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.

3. ஆப்பிரிக்கத் தாய்
அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.

குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும் ‘ஜாட்’ வகுப்பினர் 8ம் நூற்றாண்டில் ‘சண்டாளர்’களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.
சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.
மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோது ‘கீழ்’ நிலைக்குத் தள்ளப்பட்டு ‘கீழ் சாதி’யான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.

4.வேதங்களில் சாதி
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.
புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன.

5.சாதிகளும் உட்சாதிகளும்
இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்த ‘அற நூல்கள்’ எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின. டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது ‘சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறானது. உட்சாதிகளை ஒழித்துவிடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்து விடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதற்கு மாறாக சாதி ஒழிப்பு, உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால் உட்சாதிகளை ஒழிப்பது சாதிகளை வலுப்படுத்தவே துணைபோகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்’ என்று குறிப்பிட்டார்.

6. சாதியை ஒழிக்கமுடியவில்லை!
சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் இயக்கங்கள் பல தோன்றின. பவுத்தம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை.
‘அந்நியர் ஆட்சி இருப்பதால்தான், அந்த ஆட்சிக்காரன் நம்மைப்பிரித்து ஆளுகின்றான் அவனை வெளியேற்றிவிட்டால் ஒரு நொடிப்பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம் என்றார்கள் நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள். அந்நிய ஆட்சி ஒழிந்து 17 ஆண்டுகளுக்கும் மேலாகி, (இன்றைய தேதிக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது) விட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக அமோகமாக வளர்ந்திருக்கிறது. மற்றவர்கள் ‘சாதி ஒழிப்பு மாநாடுகள்’ என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

7.நாகர்கள் யார்?
நாகரிகமானது நகரங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சியடைந்தது. ‘நகரகம்’ என்னும் சொல் ‘நகரிகம்’, ‘நாகரிகம்’ என மருவி வரும். நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரிலிருந்து வந்தது. நாகர்கள் என்பவர்கள் நாகநாடு என்னும் கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாகருடைய நாடு நாக நாடு.
நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் ஸ்நேக் என்பது இதே பொருள் பற்றியது.
தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவி வட இந்தியாவில் நக்காரா (Naggharah) என்று கூறப்படுகிறது. ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒரு புறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. அதன் எடை 2.47 கிராம்.
நாகர்கள் பண்பாடுடைய கலாசாரத்தைப் பேணிய மக்கள். புத்தருடைய காலத்தில் நாகர்கள் பௌத்தத்தைத் தழுவினர்.

8. வரலாற்றில் நாகர்கள்
வட இந்தியாவில் ஆரியர் வருகை பல கட்டங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக நாகர்கள் வடமாநிலங்களிலிருந்து தென்னோக்கிப் பரவத் தொடங்கினர். இதனால் இமயம் முதல் காஷ்மிர், தச்சிலா, கங்கைச் சமவெளிப் பிரதேசங்கள், பனாரஸ், பிகார், மேற்கிந்தியா, தென்னிந்தியா, இலங்கை வரை இவர்கள் நகர்ந்தனர். இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் பரவிய நாகர்கள் பெரும் ராஜ்ஜியங்களை ஆண்டவர்கள்.

9. பாணர்கள்
வில் வடிவமான யாழை, ‘வீணை’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் தமிழ் நாட்டில் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணர் என்பது பெயர்.
பாணர்கள், முத்தமிழும் இசை நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பதாலும் இசையில் தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும் அவர்களுக்கு அரசர் அவைக் களங்களிலும் தடையில்லாத நுழைவு கிடைத்தது. பரிசுகளும் மரியாதைகளும் கிடைத்தன.
பாணர் குலத்துப் பெண்கள் கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார் போன்ற சாதாரண குடும்பப் பெண்கள் புலமையினால் புகழ் பெற்றிருந்தனர்.
இலக்கிய வளர்ச்சியில் உரைநடை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பாட்டு (செய்யுள்) தோன்றியதென்பது உறுதி. பண், பாண், பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுதுபோக்கு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பாணர் முதலில் சாதாரணமான பாடுநராக இருந்தனர். முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களுமாக உயர்வடைந்த அவர்கள், தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப்பட்டனர்.பொருள் உற்பத்தியைத் தோற்றுவிக்காத கலைத்தொழில் அவர்களுக்கு வருமானத்தை அளிக்கக் கூடிய தொழிலாக அமையப்பெறவில்லை என்பதை உறுதி செய்கிறது.
காலஞ்சென்ற எம்.சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளார். 1891ம் ஆண்டுக் குடி மதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

10.பறையர்கள் யார்?
பறை’ என்ற சொல் ‘பாரை’ என்ற மலைப்பாறையிலிருந்து வந்ததாகப் பொருள் கொண்டு ‘பறையர்’ என்பவர் பாறை பகுதியில் வாழ்ந்தவர்கள் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே பறையர் முதன் முதலில் மலையில் அரசாண்டு பின்னர் சமவெளிக்கு வந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.
பறையர் என்ற சொல் வங்காளத்தில் ராஜ்மகால் குன்றுகளில் வாழ்ந்து வரும் மக்களின் பெயராகிய ‘பகாரியர்’ என்ற சொல்லுக்கும், மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் பெயராகிய ‘பர்வாரியர்’ என்ற சொல்லுக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம்.
பரதாஸ், பரவர், பர்டிஸ்ம் பர்கியா, பகாரியாஸ் அல்லது மாலர்கள், பார்கள், மார்கள், மகார்கள் போன்ற இந்திய மாநிலங்களிலுள்ள பழங்குடி மக்களின் பெயர்கள் ஒன்றாக இருத்தலைக் காணமுடிகின்றது. எனவே, இவ்வாறு இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள ஆதிக்குடியினராகத் தீண்டப்படாதார் மலைவாழ் மக்களாக இருந்திருக்கின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது. இந்தப் பெயர்கள் திராவிடப் பெயராகிய ‘பரா’ என்ற சொல்லிலிருந்து வந்துள்ளன எனலாம். ‘பரா’ என்ற மலையாளச் சொல்லும் ‘பாறை’ என்ற தமிழ்ச் சொல்லும் ‘பாரு’ என்ற தெலுங்குச் சொல்லும் பாறையைக் குறிக்கின்றன. எனவே, மலைவாழ் மக்களாக இருந்தவர்களே பின்னர் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த பறையர் தமிழ்க்குடி மக்களெனத் தெரியவருகிறது.

‘பார்’ என்றால் பூமி அல்லது நிலம் என்று பொருள். ஆகவே, பறையர் என்பவர்கள் இந்த பூமி அல்லது மண்ணுக்குரியவர்.‘பரா’ என்ற சொல் வடமொழி வார்த்தை. அதன்படிப் பார்த்தாலும் அதன் பொருள் அயலவர் என்பதாகும். தங்களது கலாசாரத்துக்குப் புறம்பாக உள்ளவர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டதால் இந்நாட்டின் பழங்குடியினர் ‘பரா’ என்ற சொல்லிலிருந்து ‘பறையர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். ‘பராதீனம்’ என்ற சொல்லும் அயலாருக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை குறிப்பதாகும்.
இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதியிலும் வாழ்ந்த பழங்குடியினர் பார்ப்பனர்களுக்கு எதிராக அயலாராக இருந்து வந்ததாலும், புத்த மதத்தினராக இருந்ததாலும் இந்துமத உண்மையை நீண்டகாலம் ஏற்றுக்கொள்ளாததாலும் பறையரென்று அதாவது தங்கள் மதத்துக்குப் புறம்பானவர்களென்று பார்ப்பனரால் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.


11.பறையர்கள் யார் - II  ??
‘பறையன்’ என்ற சொல் உலக அளவில் தீண்டாமையைக் குறிக்கப் பல மொழியினரும் பயன்படுத்தும் சொல்லாகி வருகிறது. ‘தமிழர்கள் யார்?’ எனும் தலைப்பில் வித்தாலி பூர்ணிக்கா எனும் ருஷ்ய நாட்டு அறிஞர் எழுதிய ஒரு கட்டுரையில் ‘பறை முழக்கிய பறையர்களின் வாழ்க்கை சமூகத்தில் மிகத் தாழ்வானதாகக் கருதப்பட்டது. அவர்கள் தனித்து வாழ நேர்ந்தது. பிற சமூகத்து மக்களோடு இணைந்து வாழ முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் இப்படிப் பெயர் பெற்ற ‘பறையர்கள்’ என்ற சொல் பல உலக மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ‘பறையர்கள்’ என்ற சொல் உலக மொழிகளில் இடம் பெற்றிருப்பது ஒருவகையில் பெருமைதான் என்றாலும், சமூக அநீதியின் சின்னமாக வழங்கப்பெறும் நிலைமை மாற வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் இன்றைய சிந்தனையாகத் திகழ்கிறது!’ என்று குறிப்பிடுகின்றார்.
தமிழகத்தில் பிறந்த மக்கள் வகுப்பு, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களில் வாழ்ந்தனர். இந்த நான்குவகை நிலத்திலும் தம்முன் ஏதும் வேறுபாடு இன்றி உண்ணல், கலத்தலைச் செய்து வந்தனர் என்பதை தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான தெய்வத் தமிழ் மறை நூல்களில் இருந்து அறியலாம்.
தமிழ் இலக்கியங்களில் போர் முரசு அறிவிப்பவர்களை வள்ளுவரென்றும், பறையரென்றும் அழைத்துள்ளனர். ‘பறைதல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்ற மலையாள வழக்கின்படிப் பார்த்தால், இவர்கள் செய்திகளை அறிவிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.

13. பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு
பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.
பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பறையர்கள் தங்களுக்கென தனி புரோகிதர்களையும், ராணுவத் தலைவர்களையும் கொண்டு மிக உயர்ந்த சமூக அமைப்போடு வாழ்ந்து வந்தனர். பறையர்கள் சில சாதியினருக்கும் சமயக் குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங்கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

14. பார்ப்பனர்களும் பறையர்களும்
‘விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை; பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!” என்று பாரதியார் பறையர் விடுதலைப் பற்றிப் பாடினாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை.

தமிழகராதியில் ‘பறையன்’ என்ற சொல்லுக்குப் புரோகிதன் அல்லது வழிபாடு செய்பவன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில், காதணி விழா, பூப்பு நீராட்டு விழா, மணவிழா முதலிய குடும்ப விழாக்களிலும், இறப்பு நிகழ்ச்சிகளிலும் இசைவாணர்கள் அல்லது பறை என்னும் இசைக்கருவிகளை முழக்குபவர்கள் தவறாது இடம் பெறுவர். இசைவாணர்கள் இன்றைய சாதி அமைப்புப் படி ‘பறையன்’ என்ற இனத்தவராவர்.

15. நீலமும் சில பெயர்களும்

‘பறை’ என்ற சொambedkarல் (கூட) வேறுபல சொற்களுடன் இணைந்து வரும் பொழுது இழிவு, அழுக்கு, முருட்டு, கருப்பு என்ற பொருளுடன் வழக்கில் இருந்து வந்துள்ளது.
சில உதாரணங்கள். பறைக்கால் மறைக்காலி  என்றால் ஒருவகை மெல்லிய துணிவகை. பறைக்காளி என்பது ஒருவகை முரட்டுத் துணி. பறைக்குடும்பு என்பது வரிக்கூத்து வகை. பறைக்கோலம் என்றால் இழிவான தோற்றம். பறைசீவி என்றால் சிறுநன்னாரி, நன்னாரி வகை. பறைத் தாதர் என்பவர் வள்ளுவரில் ஒரு சாரார். பறைத் துணி    என்பது ஒருவகை முரட்டுத்துணி, அழுக்காடை. பறைத் தொம்பர் என்றால் பறைக் கூத்தாடி. பறை நாகம் என்றால் கருநாகம். பறைப் பூச்சி என்பது சிலந்திப் பூச்சி வகை. பறைப் பருந்து என்றால்  கரும்பருந்து. பறையாமை என்றால் கருநிறமுள்ள இழிவசவு. பறைப்பாரி என்பது  இரவு காவலாளியின் பாடல் வகை.

16. பறையர்களும் சில பெயர்களும்
தமிழகத்தில் வேளாண்மையை மட்டும் குலத்தொழிலாகக் கொண்டவர்களைத் தான் ஆதிக்குடியினர் எனக் கொள்ளலாம். இவர்கள் உழவுப்பறையரென்றும், நெசவுப் பறையரென்றும் அழைக்கப்பட்டனர்.
பறையருக்கு தலையாரி, தண்டாசி என்ற பெயர்கள் உண்டு. தலையாரி என்பவன் நிலங்களின் எல்லையை நன்கு அறிந்திருந்தான். இதனால் மற்றச் சாதியினரைப் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகிறான் என்று அறியப்படுகிறது.
பறையர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள், பழந்தமிழர், பச்சைத் தமிழர், கலப்பில்லாத தமிழ்க்குடியினர். ஸ்ரீ ராமானுஜரால் திருக்குலத்தார் (புனித குடும்பத்தை சார்ந்தவர்கள்) என்றும், காந்தியடிகளால் ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவாரூர், தியாகராசர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை ‘யானை ஏறும் பெரும் பறையர்’ என்று அழைக்கின்றனர்.
உழவுப் பறையர், நெசவுப் பறையர், கோட்டைப் பறையர், கோட்டாகாரர் பறையர், முரசுப் பறையர், அரிப்புக்காரப் பறையர், கோலியப் பறையர், கட்டிப்பறையர், குடிப்பறையர், வேளாப் பறையர், அம்புப் பறையர், வள்ளுவப் பறையர், தீப் பறையர், கொங்குப் பறையர், சோழியப் பறையர், கிழக்கிந்திய பறையர், பந்தல் முட்டிப் பறையர், பூவன் பறையன் என்று பறையரை வகைப்படுத்துவர். இவற்றின் விரிவைக் கீழே காண்போம்.
தமிழ்நாட்டுக் கோயில்களின் திருவிழாக்களில் பறையர்களுக்கு ராஜ மரியாதைகளைப் பெற்று வந்துள்ளனர். பறையர்களில் ஒரு பிரிவினரான ‘கோட்டைப் பறையன்’ என்பவர்களே. தங்களுக்கென கோட்டையை வைத்திருந்ததை தங்கள் பெயர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னொரு பிரிவினர் தங்களைக் கோட்டைக்கார பறையர் எனக் கூறிக் கொண்டுள்ளனர். இப்பிரிவினர் குதிரைத் தொழுவங்களை வைத்துக் குதிரைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.
இன்னொரு பிரிவினர் படையில் முரசு கொட்டியதால் ‘முரசு பறையர்’ என்ற பெயர் பெற்றுள்ளனர். படை நடத்தும்போது இம்மக்கள் வெற்றி முரசு கொட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர். முரசுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மோசி கீரனாருடைய பாடலிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் அறியலாம்.

17. வெட்டியான் முதல் ஹரிஜன் வரை,
வெட்டியான்: உறவினர் அனைவரும் தங்கள் பற்றை உடல் அளவில் துறந்து உறவை வெட்டிவிடும் வேளையில் பிணத்துக்கும் தனக்கும் இடையே வெட்ட முடியாத பணிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்பவன்தான் வெட்டியான். பிணம் எரிவதற்கான குறுகிய நேரம்தான் இவனது பணிக்காலம் என்றாலும் இப்பணியின் பொழுது இவன் சற்றும் விலகிவர முடியாது.
வெட்டு, வெட்டி என்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்தது வெட்டியான் என்ற சொல். ‘வெட்டி என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு’ (ந.சி. கந்தையாப்பிள்ளை. செந்தமிழ் அகராதி. 1957) எனப்பல அகராதிகளும் பொருள் தருகின்றன. இதிலிருந்து பிறந்த வெட்டியான் என்பதற்கு ‘கிராம ஊழியர், பிணம் எரிப்பவர்’ எனப் பொருள் அறியப்படுகின்றது.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)என்னும் குறள்.

18. ‘காலனிக்காரர்’
பறையர்களை ‘காலனிக்காரர்’ என்ற சொல்லாலும் குறிக்கப்படுகின்றனர். இப்படி ஆதிக்க சமூகத்தினர் குறிப்பதின் பொருள் என்ன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கும் அது விளங்காதென்பது எங்களுக்கும் விளங்கும்.
நகர நாகரிக வளர்ச்சிமிக்க இக்காலத்தில் பல இடங்களில் புதிய புதிய வாழ்விடத் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் காலனி என்னும் சொல்லால் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய இடங்களைச் சுட்டுவதற்கு நாம் ‘குடியிருப்பு’ எனும் சொல்லைப் படைத்து வழங்கத் தொடங்கியிருக்கிறோம். தனக்கென தனி அமைப்புகளைப் பெற்றிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.
சுந்தரர் காலத்திலோ அதற்கு (கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்) முன்னோ தமிழ்நாட்டில் வலங்கையர் (முற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும், இடங்கையர் (பிற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும் அணி திரண்டு உரிமைக் கோரிப் போரிட்டனர் என்று பேராசிரியர் நா.வானமாமலை தமது நூலில் (தமிழர் பண்பாடும் வரலாறும்) கூறியுள்ளார்.

19. ஹரிஜன்

1936ல் ‘ஏலா’ என்ற இடத்தில் ஷெட்யூல்டு சாதியினர் மாநாடு அம்பேத்கர் தலைமையில் நடந்தது. இதில் தீண்டாமைக்கு எதிராக மதம் மாறுங்கள் என்றும், தான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்றும் அம்பேத்கர் கூறினார். இதனைத் தடுக்க மகாத்மா காந்தி சில உத்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று தான் 1938ல் ‘ஹரிஜன்’ என்ற சொல்லில் ஷெட்யூல்டு சாதியினரை அழைக்க வேண்டுமென்று சொல்லியது.
ஹரிஜன் ’ என்ற சொல்லை நாங்கள் ஏற்க முடியாது. இது ஷெட்யூல்டு சாதி மக்களையும், மற்ற இந்துக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்கவே செய்யும். அதனால் நன்மைக்குப் பதில் தீமையே விளையும் என்றும் சொன்னார். இதற்காக ஜெகஜீவன்ராமை கட்சியைவிட்டு விலகுமாறு நோட்டீசு அனுப்பப்பட்டது. அரிசன் என்ற சொல்லுக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் நீடித்தபோதும் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
மராட்டியம், பிகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் ‘ ஹரிஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளன.

19. பறையரும் தொன்மும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைப் பெற்றுத்தர அந்தந்த காலகட்டங்களில் பலர் போராடியிருக்கின்றனர்.
அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஜோதிபா புலே அவர்கள். அவர் 1851ம் ஆண்டு பெண்களுக்காகவும், 1852ல் தீண்டப்படாத மக்களுக்காகவும் பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கும், தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதன் முதலில் இந்தியாவில் ‘மகாத்மா’ என்ற பட்டம் ஜோதிபா புலேவுக்குத்தான் கொடுக்கப்பட்டது.

ஜோதிபா புலேயின் கருத்தை நடைமுறைப்படுத்தி இந்தியாவில் 1902ல் தன்னுடைய கோலாப்பூர் சமஸ்தானத்தில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்தவர்தான் சாகு மகராஜ் என்று சொல்லக்கூடிய கோலாப்பூர் அரசர். புத்தருடைய கருத்தை எப்படி அசோகர் நடைமுறைப்படுத்தினாரோ அதுபோல ஜோதிபா புலேயின் தத்துவத்தை மராட்டிய ஆட்சியிலே செலுத்திய பெருமை ‘சத்ரபதி’ என்று அழைக்கப்பட்ட சாகுமகராஜ் அவர்களையே சாரும்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதார் சமூக அந்தஸ்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தீண்டப்படாதவர்களுக்காக கிறிஸ்தவர்கள் பல கல்விக் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், அநாதை இல்லங்களையும், நல்வாழ்வுத் திட்டங்களையும், திருச்சபைகளையும் தென் தமிழகத்தில் உருவாக்கினர். இதன் விளைவாகத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து தப்பித்து வாழ விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதத்துக்குக் குடிபெயர்ந்தனர். இதனால் ஒரு சில தீண்டாதாரின் பொருளாதார, கல்வி, சமூக நிலை உயர்ந்தது.

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கொடுக்கக்கூடாது. அவர்கள் எல்லோரும் தொடக்கப்பள்ளியோடு நிற்க வேண்டும்’ என்று பால கங்காதர திலகர் கூறியதாக கி.வீரமணி (சாவர்க்கர்-காந்தியார்-கோட்சே-ஆர்.எஸ்.எஸ்) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

20.ஆதிதிராவிடர்கள்
சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.

ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.
 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை.


21.சேரி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் ‘இரவுச்சேரி நாடு’ என்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் ‘சங்கனாச்சேரி’ என்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் ‘பெரும்பச்சேரி’ என்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ‘ஒழிகினச்சேரி’ என்ற ஊர் உண்டு.
கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் ‘சேரி’ என்றும் பாவாணரின் ‘பழந்தமிழராட்சி’ என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக