வியாழன், 2 ஏப்ரல், 2020

தமிழகத்தின் மிக பழமையான கல்லணை பற்றி காண்போம்

தமிழகத்தின் மிக பழமையான கல்லணை பற்றி காண்போம்


தமிழ்நாட்டில் உள்ள உலகப் பழமை வாய்ந்த அணை இதுவாகும். காவிரி மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.
கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும்.
எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிகப் பழமையானது. தற்போதும் புழக்கத்தில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.
இப்படிப்பட்ட கல்லணை நீளம் 1080 அடியும், அகலம் 66 அடியும், உயரம் 18 அடியும் உடையது. இது நெளிந்து, வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு ஆகும். சுமார் 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது மாபெரும் அதிசயமாகவே உள்ளது. இவ்வாறு ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் நிலையிலும் நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி நீர் செல்லும் காவேரியை கரைபுரண்டோடும் காற்றாற்றைத் தடுத்து கரிகாலன் என்ற தமிழன் அணை கட்டிய தொழில்நுட்பத்தை இன்றைய கட்டிடத் தொழில்நுட்ப வல்லுனர்களாலும் கண்டறிய இயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக